மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஏப் 2020

சிறப்புக் கட்டுரை:பன்னிரண்டணா சுல்தான்-1

சிறப்புக் கட்டுரை:பன்னிரண்டணா சுல்தான்-1

சாளை பஷீர்

“நான் பள்ளிக்கூடம் போவதற்கில்லை. வீட்டிற்கும் இப்போதைக்கு வரப் போவதில்லை”

நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுப்பதற்காக வீடு துறந்து கோழிக்கோட்டிற்கு தப்பிச்சென்ற வைக்கம் முஹம்மது பஷீர், தன்னை அழைத்து போக வந்த தந்தையிடம் கையளித்த சொற்கள் இது. மகன் உதிர்த்த சொற்களின் பாரம் உண்டாக்கிய சோர்வு துயரம் கண்ணீர் எல்லாம் ஒரு சேர கொப்பளிக்க வெறுங்கையுடன் திரும்பினார் வைக்கம் முஹம்மது பஷீரின் வாப்பா.

தங்களின் பிள்ளைகளின் மீது எந்தவொரு சராசரி பெற்றோருக்கும் இருக்கும் தவிப்பிலிருந்து பஷீரின் வாப்பாவும் உம்மாவும் விதிவிலக்கில்லைதானே. அதுவும் தங்களின் எல்லா எதிர்பார்ப்புகளும் கொட்டி வளர்க்கப்பட்ட மூத்த மகன் என்னும்போது அந்த உணர்வுகள் அடையும் உயரம் தனிதான்.

உன் கைகளிலிருந்து ஒரு பொருள் பறிக்கப்பட்டு வெறுமையாக்கப்படுவது என்பது ஏற்கனவே இருந்த பொருளை விட சிறந்ததொன்றை உனக்கு வழங்குவதற்கான ஏற்பாடுதான் என்பதை புரிந்து கொள் என ஸூஃபி ஞானி ஜலாலுத்தீன் ரூமி சொன்னதைப்போலத்தான் பஷீர் விஷயத்திலும் நடந்தது.

தான் கருதி வைத்திருக்கும் பஷீருக்கு சராசரி குடும்பமும் கல்விக்கூடமும் போதாது என்பதை அறிந்திருந்ததனால்தான் அண்டசராசரத்தின் மூல ஆற்றல் அவரை அவற்றிலிருந்து விடுவித்து பரந்த உலகத்தையே குடும்பமாகவும் கல்விக்கூடமாகவும் ஆக்கியது. பெற்றோரின் மகன் என்ற ஒரு தரத்தில் மட்டுமே இருந்த முஹம்மது பஷீர், இப்போது விடுதலைப்போராளியும் கதை சொல்லியுமான வைக்கம் முஹம்மது பஷீராக வடித்தெடுக்கப்பட்டு. விதைக்குள் ஒளிந்திருந்த பெருமரமாக மனிதத்திரளிடம் திரும்பக் கொடுக்கப்பட்டார்.

வைக்கம் முஹம்மது பஷீர் எழுதிய கதைகள் அனைத்துமே அவரது ஆன்ம ஒளி ஆடியின் கிரணச் சிதறல்கள்தான். என்னுடைய கதைகள் அனைத்துமே என் சொந்த பட்டறிவுதான். என் கதைகளைக் கேட்டு இவ்வுலகில் கூடுதல் அழுதவனும் சிரித்தவனும் நானாகத்தானிருப்பேன் என்றார் வைக்கம் முஹம்மது பஷீர்.

பஷீரினுடைய பிறந்த நாளில் (ஜென்ம தினம் கதை) ஒரு குவளை சுடு தேனீருக்கு கூட வழியில்லாத அந்த கொடும்பகலில், உணவுக்கான தவிப்பு மட்டுமே அவருடைய உணவாக இருந்தது. குடல் இடும் பசி நெருப்பின் ஓலத்தில் மொத்த உடல் நாளங்களும் இரைந்து கொண்டிருக்க, பிறந்த தினத்தில் அவர் அணிந்திருந்த உடைகள், காலணி, அமர்ந்திருந்த சாய்வு நாற்காலி என எதுவுமே அவருக்கு சொந்தமில்லாத நிலை. காலணி விற்க வந்த குழந்தைகள் அவரை சார் என அழைத்ததை அவரால் பொறுக்க முடியவில்லை. நான் சாராம். முழு நிர்வாணமான இந்த நான் கூட என்னுடையதுதானா? என ஆன்ம விசாரணை செய்கிறார்.

அவருடைய மனத்தை தவிர வேறெதுவும் அவருக்கு உடைமையாக இல்லாத அந்த பிறந்த நாளில் உருக்கொண்ட ஜென்ம தினக்கதை அவரை சுற்றியுள்ள மனிதர்களை அவர்களுக்கே உரிய குணச்சுவைகளுடன் மிகத் துல்லிய பாத்திரங்களாக கூடுதல் எத்தனங்கள் எதுவுமின்றி அழகு குறைவின்றி சித்தரிக்கின்றன.

ஜென்ம தினம் கதையை நாட்குறிப்பு, நிகழ்வறிக்கை என சில இலக்கிய திறனாய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். வைக்கம் முஹம்மது பஷீர் போன்ற இலக்கிய திருஉருக்களின் கதைகள் பல்வண்ண நோக்கி போன்றவை. வாசிப்பவர்களின் மன அறிவு புலங்களுக்கேற்ப அவைகளை கலைத்தும் சரித்தும் பிரித்தும் வேய்ந்தும் புதிது புதிதாக வாசித்துக்கொண்டே இருக்கலாம்.

வைக்கம் முஹம்மது பஷீரின் வாழ்க்கையின் மைய நாதமாக இருந்து அவரை இயக்கிய விசையென்பது அறமும் அனைத்து உயிரிகளின் மீதான அவரின் பேரன்பும்தான். இவைகள்தான் படைப்புக்குள்ளும் அப்பாலும் அவருக்கு நிரந்தரத்தன்மையை அருளியிருக்கின்றது. இது போன்ற அருட்கொடை எல்லா படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் கைகூடுவதில்லை பஷீர் போன்ற மிகச் சிலரைத்தவிர.

அவரின் படைப்புகளை வாசிக்க வாசிக்க நம்முடைய மனவுலகம் எல்லா திசைகளிலும் விரிவு கொள்கின்றது… அந்த விரிவின் தர்க்க நீட்சியாக, நமது ஆன்மாவின் இனங்காணவியலாத பரப்பினுள் வைக்கம் முஹம்மது பஷீர் வியாபித்திருக்கிறார். எனது கண்ணுவாப்பாவைப்போலவும் ஆசிரியனாகவும் சக பயணியைப்போலவும் தோழனாகவும் என்னில் நானாகவும் அவரை உணர்ந்திருக்கின்றேன். முடிவில் நான் அவரை இன்னதுவென உணர்ந்த எல்லா தளங்களிலும் இருந்து கொண்டே நான் சென்றடைய முடியாத ஒரு புதிய வடிவில் அவர் தன்னை தோற்றுவித்துக் கொண்டே இருக்கின்றார்.

பஷீர் மனதிற்குள் உருவாக்கிக் கொண்டிருக்கும் முடிவிலியின் தொலைவை குறைக்கவாவது அவரின் நிலத்தை பருவ மழை பொழிவிற்குள் கண்டு வர வேண்டும் என தோன்றியது.

இளம் சகாவும் ஆங்கில பேராசிரியருமான மல்லிப்பட்டினம் ஆசிர் முஹம்மதுக்கு தொலைபேசியில் தகவல் சொன்னேன்.

நான் நாகர்கோவில் வரைக்கும் பேருந்தில் சென்று அங்கிருந்து அதிகாலையில் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினேன். இருக்கை வசதி மட்டும் உள்ள தொடர்வண்டி.. கழுவித்துடைத்தாற் போலிருந்த ரயில் நிலையத்தை மழையானது மேலும் கழுவி துப்புரவாக்கிக் கொண்டிருந்தது.

ஆசிர் முஹம்மது மல்லிப்பட்டினத்திலிருந்து திருவனந்தபுரம் வரை அரசு விரைவுப் பேருந்தில் வந்து இணைந்தார். ரயில் போகும் திசைக்கு எதிர் திசையில் எனக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. எதிர் திசை ஒவ்வாமை எனக்கு உண்டு. ரயிலின் கடுகிய ஓட்டத்தில் புலனாகாத கரமொன்று சட்டையை பிடித்து பின்னுக்கு இழுப்பது போன்ற உணர்வு பயணம் முழுக்க தோன்றிக் கொண்டே இருந்தது. ஆட்கள் அதிகமில்லை. ஈரிழை முடிக்கட்டுடன் வடிவழகியான பயணச்சீட்டு பரிசோதகர் வந்தார். பொது பெட்டி என நினைத்து முன் பதிவில்லாத பயணச்சீட்டுடன் ஆட்கள் ஏறியிருந்தனர். அடுத்த நிலையத்தில் இறங்கி மாறிக் கொள்ளுங்கள் இல்லையெனில் கூடுதல் கட்டணம் கொடுக்க வேண்டி வரும் என அவர்களிடம் மெல்லிணக்கமாக பேசி புரிய வைத்தார்.

பிரவம் ரோட் தொடர்வண்டி நிலையத்தில் போய் இறங்கும்போது காலை 10:30 மணி. நடைமேடையில் பெருமழை அட்டியின்றி இறங்கிக் கொண்டிருந்தது. கனவுச்செப்பு போலிருந்த சிறுபேருந்தில் ஏறி நனைந்த தெருக்கள் வழியே தலயோலப்பரம்பை அடைந்தோம்.

இரண்டு மூன்று விடுதிகளே இருந்தன. ஐநூறு ரூபாய்கள் வாடகை. இவ்வளவு சிறிய ஊருக்கு இந்த வாடகை கூடுதல்தான். வாடகை வாங்கும் அளவிற்கு இவற்றில் வசதிகள் இல்லை. போனால் போகிறது என இரக்கப்பட்டு குளியலறை கழிப்பறையையும் வைத்திருந்தார்கள். குழாயில் ஒழுக்கு வேறு. உணவு சில்லறைப்பொருட்கள் வாங்கிட விடுதிப்பையன்களெல்லாம் இல்லை. எல்லாம் நமக்கு நாமே தன்னுதவி சேவைதான். சிக்கியவன் கழுத்தில் கத்தியை வை என்பது சிற்றூர் விடுதிக்காரர்களின் தொழில் தாரக மந்திரம்.

வைக்கம் முஹம்மது பஷீர் நினைவகம் அல்லது அருங்காட்சியகம் என இணையத்தில் தேடினால் உருப்படியான பெறுபேறுகள் இல்லை. எழுத்தாள நண்பரிடம் கேட்டபோது அவரது வீடு நினைவகம் எல்லாமே கோழிக்கோட்டின் பேப்பூரில் உள்ளது மட்டுமே என உறுதியாகச் சொன்னார்.

வைக்கம் முஹம்மது பஷீர் பிறந்தது அவரின் தந்தை வீடிருக்கும் கோட்டயம் மாவட்டம் தலயோலப்பரம்பு. இறந்தது கோழிக்கோடு மாவட்டம் பேப்பூர். இதில் எதைப் பார்க்காமல் விட்டாலும் பயணம் முழுமையடையாது என உறுதிபட சொன்னது மனம். மீண்டும் இணையத்தில் முன்னும் பின்னுமாக தேடியதில் பஷீர் நினைவு அறக்கட்டளை எனப் பொருள்படும் “பஷீர் ஸ்மாரக ட்ரஸ்ட்” (http://www.basheersmarakatrust.com/) என்றொரு இணைப்பு கிடைத்தது. அதில் உள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டபோது நினைவகத்தின் செயலாளர் பேரா. குஸுமன் வழிசொன்னார்.

தலயோலப்பரம்பின் பாலம்கடவுப்பகுதியில் மூவாட்டுப்புழை ஆற்றின் தீரத்தில் வைக்கம் முஹம்மது பஷீர் நினைவு நூலகத்துடன் அரங்கும் நிறுவப்பட்டுள்ளது. வைக்கம் முஹம்மது பஷீரின் முதிர்ந்த வாசகர்களின் நிதி நல்கை, கேரள அரசின் பண்பாட்டுத்துறையின் நிதியளிப்பு, நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி நிதி ஒதுக்கீடு என பல கரங்களின் இணைவில் வைக்கம் முஹம்மது பஷீருக்கே உரிய குறும்புடனும் முடிவற்ற தனிமையுடனும் சமன் செய்து கொண்டவாறு நினைவகம் ததும்புகின்றது.

பாலம்கடவுப்பகுதியில் வைக்கம் முஹம்மது பஷீரின் நினைவகத்திற்கு அருகிலேயே மூவாட்டுப்புழா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்திற்கும் அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது. நீரின் இக்கண ஓட்டத்தில் தன்னை முழுவதும் ஒப்புக் கொடுத்து விட்டு நிலையின்மை என்ற படலில் மணிக்கணக்கில் பஷீர் மிதந்த தலம். நினைவகத்தை ஒட்டிய நீண்ட அகன்ற படித்துறையானது . கனிந்த மனிதனின் நெடுகிய ரேகைகளைப்போல. கடந்த கால நிராகரிப்புத்துயரின் சாட்சி என்னும்படியாக கைகளை விரிந்து மல்லாந்தபடி கிடந்தது. அதன் முக்கால் பாகத்தில் செடி கொடிகள் மண்டிக் கிடக்கின்றன. படித்துறைக்கப்பால் கைவிடப்பட்டு கரை முட்டிய நிலையில் உடைந்த இரு கரிய படகுகள் நின்றிருந்தன.

வைக்கம் முஹம்மது பஷீர் எந்த அளவு தனிமையின் நேசனோ அதேயளவு தனித்தன்மையானவரும் கூட. எதற்குள்ளும் கரைந்தழியாத சிகரத்தின் நிலை நிற்றல் போன்ற துலங்கும் தனித்தன்மையது. மனித இருப்பின் வாழ்வின் நிலையின்மை பற்றிய தெளிவின் தளத்தில் தன் கால்களை பாவிக்கொண்டே தன்னில்தானே தனிமையின் பெருக்கில் ஆழ்த்திக் கொள்ளும் பஷீரின் திளைப்புதான் அவரை தற்பெருமை ஆணவ பிசுக்குகளிலிருந்து காத்தது. அவர் சராசரிக்குள் பொருந்தியவரில்லை. ஆனால் தினசரி மனிதர்கள் உள்ளிட்ட வாழ்வின் எல்லா அடுக்கு மனிதர்களும் பஷீரை ஏதாவது ஒரு விதத்தில் தங்களுக்குள்ளாக அவரை உணர்ந்துகொண்டேயிருக்கின்றார்கள்.

மாலை நான்கரை மணிக்குத்தான் நினைவகம் திறக்கப்படும் என்பதால் அங்கிருந்து நூறு மீற்றர் தொலைவிலுள்ள பஷீர் பிறந்த அவரது தரவாட்டு (தந்தை வழி) வீட்டிற்கு போனோம்.

(அடுத்த பகுதி மதியம் 1 மணிப் பதிப்பில்)


மேலும் படிக்க


திமுக: ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரின் வாரிசுக்கே இந்த நிலையா?


வடிவேலு ஒரு தீர்க்கதரிசி: அப்டேட் குமாரு


பேக் அப்: அனு கொடுத்த அறிவிப்பு!


சந்திராயன் 2: லேண்டர் விக்ரமின் நிலை என்ன? - ஸ்ரீராம் சர்மா


சிதம்பரம் நிலை: ரஜினி கவலை!


திங்கள், 9 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon