மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஏப் 2020

சந்திராயன் 2: லேண்டர் விக்ரமின் நிலை என்ன?

சந்திராயன் 2: லேண்டர் விக்ரமின் நிலை என்ன?

இறுதி நேரத்தில் லேண்டர் விக்ரம் தொடர்பை இழந்த நிலையில், சந்திராயன் 2வின் அடுத்த கட்ட பணிகள் பற்றிய தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.

நிலவின் தென்துருவ பகுதிகளை ஆராய்ச்சி செய்வதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, கடந்த ஜூலை 22ஆம் தேதி சந்திராயன் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

48 நாட்கள் வெற்றிகரமாக தனது பயணத்தை தொடர்ந்தது சந்திராயன் 2. இந்த விண்கல திட்டத்தின் முக்கியமான நிகழ்வு நேற்று(செப்டம்பர் 7)  நடைபெற்றது. அதன்படி நேற்று அதிகாலையில் நிலவின் தென்துருவத்தில் மிகவும் மெதுவாக 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் லேண்டர் விக்ரமை தரையில் இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். நிலவின் தென்துருவத்தில் மான்சினஸ்-சி, சிம்பிலியஸ்-எஸ் என்ற பள்ளங்களுக்கு நடுவே விக்ரம் லேண்டர், 70 டிகிரி கோணத்தில் மெதுவாக தரையிறக்கம் செய்யப்பட திட்டம் வகுக்கப்பட்டது.

தரையிறங்கும் செயல்பாட்டின் முதல் பகுதி வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து சரியாக 1:58 மணிக்கு விண்கலத்தில் இருந்து எந்த சிக்னல்களும் வரவில்லை என்பதால் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் பதட்டம் நிலவியது. தரையிறக்கத்தில் முக்கிய நிகழ்வான Fine Breaking Phase செயல்பாட்டின் போது எந்த சிக்னலும் வரவில்லை. 2.01 கி.மீ தூரத்திலிருந்து விக்ரம் சிக்னல் எதுவும் அனுப்பவில்லை.

சிக்னல் துண்டிக்கப்பட்டதையடுத்து இஸ்ரோ , “சந்திரயான் 2 திட்டம் தோல்வி அல்ல. லேண்டர் உடன் மட்டுமே தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. லேண்டர் சிக்னலை இழந்தாலும், ஆர்பிட்டர் இன்னமும் இஸ்ரோ உடன் தொடர்பில் உள்ளது. இது தொடர்ந்து நிலவின் தென் துருவத்திற்கு மேலாக சுற்றி வந்து ஆராயும்” என விளக்கமளித்துள்ளது.

அதன் பின்னர் விக்ரம் லேண்டரின் நிலை என்ன? இனி சந்திராயன் 2 என்ன செய்யும் போன்ற கேள்விகளுக்கு நேற்றிரவு(செப்டம்பர் 7) இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

“சந்திராயன் 2 மிகவும் சிக்கலான மிஷன் ஆகும். இது இஸ்ரோவின் முந்தைய பயணங்களுடன் ஒப்பிடும்போது ஒரு குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப பாய்ச்சலாகும். லேண்டர் உடனான தகவல் துண்டிக்கப்பட்டாலும், ஆர்பிட்டரை நாம் தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க முடியும்” எனக் கூறியுள்ளது.

மேலும், சந்திராயன் 2 விண்கலத்தின் செயல்பாடு 95 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது 5 சதவீத தோல்வியே என்றும் அதே நேரத்தில் ஆர்பிட்டர் தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கின்றது என்றும் இஸ்ரோ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இஸ்ரோவுடன் தொடர்பில் இருக்கும் ஆர்பிட்டர் மட்டும் நிலவை தொடர்ந்து ஓராண்டுக்கு படம்பிடித்து அனுப்பும்; தகவல் தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரையும் ஆர்பிட்டரால் படம் பிடிக்க முடியும் என இஸ்ரோ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதன் மூலம் விக்ரம் லேண்டரின் நிலை பற்றி உறுதியான தகவல்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க


திமுக: ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரின் வாரிசுக்கே இந்த நிலையா?


சந்திரயான் 2 ஸ்ரீராம் சர்மா


கிணற்றைக் காணவில்லை: வடிவேலு காமெடி அல்ல வழக்கு!


பாஜகவுடன் பேச தினகரனுக்கு சசிகலா உத்தரவு!


ஞாயிறு, 8 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon