மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

சிறப்புக் கட்டுரை: காட்டுவாசிகளிடம் கற்றவை - 4

சிறப்புக் கட்டுரை: காட்டுவாசிகளிடம் கற்றவை - 4

பா.நரேஷ்

கம்பனூர். மூன்று பேர் மட்டுமே மூச்சைப்பிடித்துக்கொண்டு வாழும் ஊர். அந்த மூன்று பேருக்கு 8 வீடுகள். ஈரோட்டிலிருந்து விநோபா நகர் வழியாக விளாங்கொம்பை எனும் மலை கிராமத்திற்கு செல்லும் வழியில் கம்பீரமாக நிற்கிறது கம்பனூர். இந்த மூன்று பேருடன் இவ்வூரின் கதை முடிந்துவிடும். ஆனால், அந்த மூன்று பேரின் கதை, இவ்வுலகம் உள்ளவரை உள்ளத்தில் நிலைத்திருக்கும்.

ஏனென்றால், பழங்குடிகள் பழைய கதைகளாகி வரும் காலம் இது. ஆதி அறிவை உயிர்க் கயிறாகப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கும் வரலாற்றின் கடைசி மனிதர்கள் இவர்கள். ஒவ்வொரு பழங்குடி குடியிருப்புகளும் இக்கடைசி மனிதர்களால் காக்கப்படுகிறது. கம்பனூரின் கடைசி மனிதர் ஸ்ரீரங்கன். அந்த ஊருக்கு அவர்தான் ராஜா.

நீங்க கீழ்நாட்டுக்கு வரமாட்டீங்களா தாத்தா?

“ நான் பொறந்தது வளர்ந்தது, இந்த சாமி பூமி எல்லாமே நம்படது. இது எம்மட ஊரு ராஜா. இதவிட்டுபுட்டு எங்க வர்றது? இத விட்டு வந்தா செத்திருவேன் ராஜா. பொழைக்க தெரியாது. காடுதான் பொழப்பக் குடுக்குது.”

அப்போ இங்கிருந்த மத்தவங்களுக்கு காடுதான் பொழப்பு குடுத்தது தாத்தா? அவங்க மட்டும் ஏன் கீழ போயிட்டாங்க?

“ நான் சின்ன வயசுல இருக்கும்போது இங்க பத்து அம்பது குடும்பம் இருந்தது ராஜா. எல்லாம் பயந்து ஓடிப் போயிட்டாங்க. கீழ காலனில போயி பொறுக்கிட்டு கிடக்குறாங்க. ஆணை வரும் பயந்துபோயிட்டாங்க. நான் இந்த ஊர உடமாட்டேனுட்டேன். இது இன்னைக்கு நேத்துல்ல. வெள்ளக்காரன் தொரத்தியும் நான் வெளிய போகல. இருங்க தண்ணி குடுச்சுட்டு வாரன்.” என்று சொல்லிவிட்டு எழுந்தார் அந்த 95 வயது இளைஞர். அவரது மனைவியும் மாமியாரும் உரையாடலைத் தொடர வந்தனர்.

“இங்க மலை இருக்குன்னு நினைக்காதீங்க. இதெல்லாம் சாமி. எங்க சாமிய விட்டுட்டு நாங்க எங்க போறது? ஆடுக இருக்கு. நாம போயிட்டா ஆடுகளை யாரு பாத்துப்பா?” என்றார் ஸ்ரீரங்கனின் மனைவி.

“நீங்க வழியில்லாம இங்க இருக்கீங்களா? இல்ல புடிச்சுதான் இருக்கீங்களா மா?”

” வழியெல்லாம் ஆயிரம் இருக்குதுங்க. எங்கள யாரு தடுத்து வெக்க போறா? ஆனா என்னமோ எங்களுக்கு இங்க இருக்கதாங்க புடிச்சிருக்கு.”என்றார்.

மலைகளில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் கடினமான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று சமநில மனிதர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மலைமக்களுக்கு அவர்களின் வாழ்க்கைமுறை என்பது சொர்க்கம். எக்காரணத்திற்காகவும் அவர்கள் அதை விட்டுக்கொடுப்பதாக இல்லை. இதே மனநிலையைத்தான் விளாங்கொம்பை மக்களிடமும் காண முடிந்தது.

சின்னமுத்து - இராமக்கா தம்பதியர் உணவை முடித்துவிட்டு ஆடுகளை ஓட்டிச்சொல்ல தயாராகினர். அவர்களிடம் ஒரு பேட்டி கொடுக்க வேண்டி நின்றோம்.

“பேட்டி எல்லாம் குடுக்க முடியாது தம்பி. சும்மா வேனா பேசலாம் வந்து உட்காரு.” என்றார் இராமக்கா.

“சரிக்கா. உங்களுக்கு இங்க மலைகள்ல வாழுறது கஷ்டமா இல்லையா?”

“கீழிருந்ததாதான் கஷ்டப்படனும். இங்க எதுக்கு கஷ்டப்படனும்? அந்த வெக்கையில யாரு சாமி இருப்பா? கொஞ்ச நேரம் கீழ இருந்தாலே நான் செத்துப்பொயிடுவேன். இல்ல சாமி, எங்களால கீழ தாக்காட்ட முடியறதில்லை.”

ஏன்கா? கீழ அப்படியென்ன பிரச்சனை?

“கீழ பாக்கறீங்கள்ல.. குடத்தை வரிசேல வெச்சுட்டு, தண்ணிக்காக கால் நோவ நிக்குறத. அதுவும் அரைக்கொடம் தண்ணி புடிக்கிறது.. அந்த மாதிரிலாம் நிக்க முடியுமா? அந்த கஷ்டம்லாம் எங்களுக்கு தேவையா? இங்க நாலு எட்டு நடந்துபோனா தண்ணி எடுத்துட்டு வந்துடலாம். இங்க வசதியா இருக்கும்போது நாங்க எதுக்கு கீழ போனும்?”

”உங்களுக்கு இந்த காட்டுல அப்டி என்ன புடிச்சிருக்கு?”

“பனங்காட்டுக்குள்ள சுத்துறதுதான் எங்களுக்கு புடிக்கும். டவுனுக்குள்ள எல்லாம் சுத்த முடியாது. தா.. இந்த மலையோட உச்சியல கொண்டு போய் விடுங்க. சுலுவா நடந்து கீழ வந்துடுவோம். ஆனா, டவுனுக்குள்ல கொண்டு போய் விட்டீங்கன்னா, ஒரு தெருவக்கூட தாண்டத் தெரியாது. “

இது இராமக்காவின் குரல் அல்ல. ஒட்டுமொத்த பழங்குடி சமூகத்தின் குரல். பழங்குடிகளுக்கு பனங்காடுதான் வாழ்க்கை, வாழ்வாதாரம், எல்லாமும். அவர்களின் வளர்ச்சியும், வாழ்வும் காடுகளின் ஆன்மாவுடன் கலந்தது. அதை ஒருவராலும் கலைக்க முடியாது!


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: வெளிநாட்டுப் பயணம்: இடையிலேயே திரும்புகிறாரா எடப்பாடி?


வடிவேலு ஆசானுக்கு வாழ்த்து சொல்லணும்: அப்டேட் குமாரு


பாஜகவுடன் பேச தினகரனுக்கு சசிகலா உத்தரவு!


ஹெச்.ராஜா மிரட்டுகிறார்: டி.கே.எஸ்.இளங்கோவன்


பொருளாதாரம் பற்றிதான் கவலை: திகாரில் சிதம்பரம்


சனி, 7 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon