மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 7 செப் 2019

விமர்சனம்: மகாமுனி

விமர்சனம்: மகாமுனி

துறவை அடைந்த போர் வீரன்

அதிரடியாய் அறம் பேசும் ‘மகா’வும், அமைதியாய் அறம் பேசும் ‘முனி’யும் இரட்டை நிலைகளில் இணையும் விதியின் முடிச்சே மகாமுனி.

‘மெளனகுரு’ படத்திற்குப் பின் சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார், ரோகிணி, இளவரசு, ஜெயப்பிரகாஷ், காளி வெங்கட், ஜி.எம். சுந்தர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் சார்பில் கே.இ. ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.

இரட்டையர்களான மகாதேவன், முனிராஜ் இருவரும்(ஆர்யா) சிறு வயதிலேயே பிரிந்து விடுகின்றனர். காஞ்சிபுரத்தில் கார் ஓட்டுநராக இருக்கும் மகா, அரசியல்வாதியான முத்துராஜ் சொல்லும் கொலைகளுக்கு ‘ஸ்கேட்ச்’ போட்டுக் கொடுப்பவர். மனைவி(இந்துஜா) பிள்ளையுடன் நிம்மதியாக வாழ முடிவெடுக்கும் ஆர்யா, இளவரசு கொடுக்க வேண்டிய மீதித் பணத்தை வாங்க நினைக்கும் போது, அரசியல்வாதி ஒருவரை கடத்தி வரச் சொல்கிறார் இளவரசு. ஆனால் கடத்தப்பட்ட அரசியல்வாதியை இளவரசின் மச்சான் கொன்று விட, போலீஸ் விசாரனையில் ஆர்யாவை காட்டிக்கொடுக்கிறார் இளவரசு.

முனிராஜ் ஈரோட்டில் உள்ள கிராமத்தில் இயற்கை விவசாயம், ஆன்மீகம், சேவை என அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். உள்ளூரில் செல்வாக்குள்ள ஜெயராமன்(ஜெயப்பிரகாஷ்) மகள்(மஹிமா நம்பியார்) ஆர்யாவின் வாழ்க்கை முறையால் ஈர்க்கப்பட்டு அவருடன் நெருங்கிப் பழகுகிறார். இதைக் கேள்விப்பட்டு, சாதியின் காரணமாக ஆர்யாவை கொல்ல நினைக்கிறார் ஜெயராமன்.

வெவ்வேறு நிலைகளிலான சிக்கல்கள் கொண்ட மகாவும் முனியும் ஒரு முடிச்சில் இணைவதே மகாமுனி.

எட்டு வருடங்களுக்குப் பிறகு வெளியாகும் சாந்தகுமாரின் படம், ஆர்யாவுக்கு தேவைப்படும் கட்டாய வெற்றி, டீசர் ஏற்படுத்திய பரபரப்பு என எதிர்பார்ப்புகளுடன் வந்திருக்கிறது மகாமுனி. படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, ஒரு தேர்ந்த இயக்குநரின் கைகளுக்குள் அமர்ந்திருக்கிறோம் என்ற உணர்வை கொடுப்பதிலிருந்து ஈர்க்கத் தொடங்குகிறான் மகாமுனி. ஆன்மிகம், சமகால அரசியல், சாதி திமிர், மனித இருப்பு, நடுத்தர வர்க்க சிக்கல்கள், கல்வி முறை என அனைத்தையும் ஒரு திரைக்கதைக்குள் இருந்து பேசியிருக்கிறார் இயக்குநர் சாந்தகுமார். பகடியாக வரும் அரசியல் வசனங்கள் ரசிக்கவைக்கின்றன.

எந்த அவசரமும் பதட்டமும் இல்லாமல் பல்வேறு தளங்கள் பற்றிப் பேசும் படத்தை திரில்லர் பாணியில் கதை சொன்ன விதம் புதுமை. மகாவாகவும் முனியாகவும் ஆர்யாவின் பாத்திரம் நன்றாக அமைந்திருக்கிறது. மகா ஒரு சாமுராய் வீரன் போல வாழ்ந்து கொண்டிருக்கிறான். தன் மகனை அடித்த பள்ளி ஆசிரியர் மீண்டும் தவறு செய்யாமலிருக்க பள்ளி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுப்பது, எப்போதும் கத்தியுடனே அலைந்தாலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருப்பது, மனைவியின் அரைவேக்காட்டுத் தனமான கேள்விகளுக்கு பொறுமையுடன் பதிலளிப்பது என ஆர்யா மகாவாக நீண்ட நாள் மனதில் இருப்பார்.

முனிராஜ் - ஆன்மீகமும் அறிவு விழிப்பும் கொண்ட பிரம்மச்சர்யத்தை கடைபிடிக்கும் ஒரு நவீன துறவி. மஹிமா நம்பியாரை சந்திக்கும் இடத்தில் ஆர்யா தடுமாறினாலும், அவ்வபோது விழித்தும் கொள்கிறார். ஆனால் அவரை அவ்வளவு அப்பாவியாக காட்ட வேண்டுமா எனக் கேள்வி எழாமல் இல்லை. சமயங்களில் செயற்கைத் தனமாகவும் இருக்கின்றது.

நாயகிகளாக நடித்திருக்கும் இந்துஜா, மஹிமா ஆகியோரில் இந்துஜாவே அதிகம் ஈர்க்கிறார். பயபக்தியுடன் சாமியை கும்பிட்டு விட்டு அதே சாமி சிலையின் மீதே விபூதியை தட்டுவது, சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் அப்பாவிப் பெண்ணாகவே இருப்பது/இருக்க விரும்புவது என நுட்பமான பாத்திரப்படைப்பு. மஹிமா பாத்திரம் கொஞ்சம் அமெச்சூராகத் தோன்றுகிறது.

படத்தில் மிகவும் கவனிக்க வைப்பது அதன் திரைமொழிதான். படம் ஆரம்பத்திலிருந்து முடிவது வரை கட்டிப்போட்டு வைத்தது போல ஆழமும் அடர்த்தியும் நிறைந்த திரைமொழி. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு(சபு ஜோசஃப்), காட்சித்தேர்வு, சப்தம்(தபஸ் நாயக்)காட்சிக்குள் இருக்கும் சின்ன சின்ன பொருட்கள் என அவ்வளவு சிரத்தையுடன் தேர்வு செய்திருக்கிறார்கள். எஸ்.எஸ்.தமனின் இசை மகாமுனியின் வீர்யத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது.

இரவுப் பொழுதில், ஆர்யாவின் முதுகில் குத்தப்பட்ட கத்தி மருத்துவரால் எடுக்கப்படுகிறது. ஆர்யா வலியில் பலமாக கத்துகுகிறார். அடுத்த காட்சியில் பகல் பொழுதில், தடதடவென ஓடும் ரயிலுக்கும் தண்டவாளத்திற்கு நடுவே ஆர்யா நின்றிருக்கிறார். இப்படிப்பட்ட நிறைய காட்சிகள் படம் முழுக்க நிறைந்திருக்கின்றன.

ஆங்காங்கே எட்டிப்பார்க்கும் சினிமாத்தனம், செயற்கையான காட்சி அமைப்புகள், தட்டையாக அனைத்தையும் வசனங்களில் வெளிப்படுத்தும் இயக்குநரின் குரல் என குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அனைத்தையும் நுட்பமாக சொல்ல விரும்பும் இயக்குநர் வில்லன்களைப் பொருத்த மட்டில், வில்லன்கள் வில்லன்களாக மட்டுமே காட்டியிருப்பது முரணாக இருக்கிறது. பல இடங்களில் இயக்குநர் நான் ஒரு ஆசிரியன் என்ற தொனியிலிருந்து பேசுவது படத்துடனான பார்வையாளனின் நெருக்கத்தை குறைக்கிறது.

குறைகளை தவிர்த்து விட்டுப் பார்க்கும் போது, மகாமுனி நிச்சயம் ஒரு நல்ல பயண அனுபவத்தைக் கொடுக்கும்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: வெளிநாட்டுப் பயணம்: இடையிலேயே திரும்புகிறாரா எடப்பாடி?


வடிவேலு ஆசானுக்கு வாழ்த்து சொல்லணும்: அப்டேட் குமாரு


பாஜகவுடன் பேச தினகரனுக்கு சசிகலா உத்தரவு!


ஹெச்.ராஜா மிரட்டுகிறார்: டி.கே.எஸ்.இளங்கோவன்


பொருளாதாரம் பற்றிதான் கவலை: திகாரில் சிதம்பரம்


ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

சனி 7 செப் 2019