மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 28 மே 2020

காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடியாதா? கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடியாதா? கே.எஸ்.அழகிரி

கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் வெற்றிபெற முடியாதா என்று கே.எஸ்.அழகிரி எழுப்பியுள்ள கேள்வி தமிழக அரசியல் அரங்கில் விவாதத்தை உண்டாக்கியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் நின்று வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஹெச்.வசந்தகுமார், தனது நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.ராதாமணி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதனால் நாங்குநேரி, விக்கிரவாண்டி என இரு தொகுதிகளும் காலியாக உள்ளன. எப்போது வேண்டுமானாலும் அங்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடுவது நிச்சயிக்கப்பட்ட ஒன்று. ஆனால், நாங்குநேரி தொகுதியில் போட்டியிடப்போவது திமுகவா? காங்கிரஸா என்று கேள்வி இதுவரை தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் திருச்சியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய உதயநிதி, நாங்குநேரியில் திமுக நின்றால் எளிதில் வெற்றிபெற்றுவிடும், எனவே காங்கிரஸ் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், இதுதொடர்பாக கேள்விகளுக்கு பதிலளிக்கும் திமுக, காங்கிரஸ் தலைவர்கள், “நாங்குநேரி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் இரு கட்சிகளின் தலைவர்களும் கூடிப் பேசி யார் போட்டியிடுவது என அறிவிப்போம்” என்ற ஒரே விதமான மழுப்பலான பதிலையே தந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் இன்று (செப்டம்பர் 6) அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. அதில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் வார்த்தைகள் மிகவும் சூடாகவே இருந்தன.

“நான் உங்களிடம் ஒரு வார்த்தை கேட்க விரும்புகிறேன். நாம் 50 ஆண்டு காலமாக எதிர்க்கட்சியாக இருக்கிறோம். அதற்கு என்ன காரணம்? ஏன் நம்மால் ஆளுங்கட்சி ஆக முடியவில்லை. பிற மாவட்டங்களை விட கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் காங்கிரஸுக்கு பலம் அதிகமாக உள்ளது. இங்கு தனித்து நின்று பெரும்பாலான இடங்களில் நம்மால் வெற்றி பெற முடியுமா, முடியாதா? இந்தக் கேள்விகளுக்கு பதிலைக் கண்டுபிடித்தால்தான் காங்கிரஸின் பிரச்சினைகளிலிருந்து வெளியே வர முடியும். மற்ற கட்சிகளை போல காங்கிரஸ் கட்சி கட்டுப்பாடு இல்லாத இயக்கமாக இருக்கிறது. கட்டுப்பாடு இல்லாத இயக்கம் வெற்றி பெறாது” என்று குறிப்பிட்டார் கே.எஸ்.அழகிரி.

மேலும், “வட மாவட்டங்களில் காங்கிரஸ் பலவீனமாக உள்ளது. அதே சமயம் தென்மாவட்டங்களில் பலமாக இருக்கிறது. ஆனால், நாம் பலமாக இருக்கும் தென்மாவட்டங்களில் கூட்டணி இல்லாமல் வெற்றிபெற முடியுமா? அப்படியான சூழ்நிலையை அடைந்திருக்கிறோமா? என்பதைப் பற்றி விவாதிக்கவே இந்தக் கூட்டம்” என்றும் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

கே.எஸ்.அழகிரியின் இந்தப் பேச்சு இன்றைய நாளின் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. மேலும், இக்கூட்டத்தில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஒருமனதோடு இணைந்து வெற்றிபெறச் செய்ய வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: வெளிநாட்டுப் பயணம்: இடையிலேயே திரும்புகிறாரா எடப்பாடி?


வடிவேலு ஆசானுக்கு வாழ்த்து சொல்லணும்: அப்டேட் குமாரு


ஹெச்.ராஜா மிரட்டுகிறார்: டி.கே.எஸ்.இளங்கோவன்


சிதம்பரம் மீது நடவடிக்கையா? இன்று காங்கிரஸ் அவசரக் கூட்டம்!


பொருளாதாரம் பற்றிதான் கவலை: திகாரில் சிதம்பரம்


வெள்ளி, 6 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon