மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

இந்து: ரவீந்திரநாத் பேசியது அதிமுகவின் கருத்தா?

இந்து: ரவீந்திரநாத் பேசியது அதிமுகவின் கருத்தா?

‘முதலில் நாம் இந்து, பிறகுதான் மற்றவை’ என்று ரவீந்திரநாத் குமார் பேசியது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 4ஆம் தேதி தேனி மாவட்டம் சின்னமனூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகனும், அதிமுக எம்.பி.யுமான ரவீந்திரநாத் குமார், “நாம் அனைவரும் முதலில் ஹிந்து. பிறகுதான் மற்றவையெல்லாம் என்ற உணர்வு நமக்குள் ஏற்பட வேண்டும்” என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மதச்சார்பற்ற கட்சி என்று கூறிக்கொள்ளும் அதிமுகவின் பிரதிநிதி ஒருவரே, காவித் துண்டைப் போட்டுக்கொண்டு, ‘முதலில் நாம் ஹிந்து’ என்று மத உணர்வை தூண்டும் வகையில் பேசுவதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்த நிலையில் ரவீந்திரநாத்துக்கு ஆதரவாக இன்று (செப்டம்பர் 6) அறிக்கை வெளியிட்டுள்ள இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன், “தேனியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் அதிமுகவைச் சேர்ந்த, அப்பகுதி எம்.பி ரவீந்திரநாத் கலந்துகொண்டு, இந்துவாக வாழ்வோம் என சமுதாய ஒற்றுமை குறித்து பேசினார். இதனை திரித்து சில அரசியல்வாதிகள், திராவிட அமைப்புகள், தனி நபர்கள் சிலர் சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “முஸ்லீம்கள் தங்களை முஸ்லீம்கள் என்று கூறும்போதும், கிறிஸ்தவர்கள் தங்களை கிறிஸ்துவர்கள் என கூறும்போதும், அவர்கள் விழாவில் அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு பேசுபவர்களும் அதே கருத்தை வலியுறுத்திப் பேசும்போதும் எழாத விமர்சனங்கள், இந்து விழாவின் போது ஏன் செய்கிறார்கள்” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையே ரவீந்திரநாத்தின் பேச்சு குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, “அண்ணன், தம்பி என்ற உறவு முறையோடு பழகும் இயக்கம் அதிமுக. கட்சியில் யாரும் சாதியோ மதமோ பார்ப்பதில்லை. இதுதான் அதிமுகவினுடைய நிலைப்பாடு. எனவே, ரவீந்திரநாத் குமார் சொல்லியிருப்பது அவருடைய கருத்தாக இருக்கலாம்” என்று பதிலளித்துள்ளார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: வெளிநாட்டுப் பயணம்: இடையிலேயே திரும்புகிறாரா எடப்பாடி?


வடிவேலு ஆசானுக்கு வாழ்த்து சொல்லணும்: அப்டேட் குமாரு


ஹெச்.ராஜா மிரட்டுகிறார்: டி.கே.எஸ்.இளங்கோவன்


சிதம்பரம் மீது நடவடிக்கையா? இன்று காங்கிரஸ் அவசரக் கூட்டம்!


பொருளாதாரம் பற்றிதான் கவலை: திகாரில் சிதம்பரம்


வெள்ளி, 6 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon