மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

டெங்கு விழிப்புணர்வு தூதுவர்களாகச் சென்னை மாணவர்கள்!

டெங்கு விழிப்புணர்வு தூதுவர்களாகச் சென்னை மாணவர்கள்!

மழைக்காலம் தொடங்கிவிட்ட நேரத்தில், பரவி வரும் கொசுக்களால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்களும் அதிகளவு ஏற்படுகின்றன. இதனைத் தடுக்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் டெங்கு ஒழிப்பு தூதுவர்களாகச் சென்னை பள்ளி மாணவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

டெங்கு போன்ற நோய்களை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் வகையிலான இடங்கள் கண்டறியப்பட்டால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி சென்னை மாநகராட்சி அறிவித்தது.

இந்தநிலையில் டெங்கு மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை மாநகராட்சி உட்பட 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் டெங்கு மற்றும் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுக்கு வேலுமணி அறிவுரை வழங்கினார்.

“அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் காலை 6 மணிக்கு அலுவலர்கள் நேரில் சென்று துப்புரவுப் பணிகளை ஆய்வு செய்து கொசு உற்பத்தியாகும் ஆதாரங்களை முற்றிலுமாக அழிக்க வேண்டும்.

குடிநீரில் குறைந்தபட்ச குளோரின் அளவு 0.2 பிபிஎம் ஆக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். திறந்த நிலை கிணறுகள் போன்ற நீராதாரங்களில் குளோரின் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகள் மற்றும் பொது இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாவதற்குக் காரணமான டயர், தேங்காய் சிரட்டை போன்ற தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட வேண்டும். திறந்த நிலை தொட்டிகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். கொசு உற்பத்தியாகும் ஆதாரங்களை முறைப்படி பணியாளர்களை ஈடுபடுத்தி முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளிலும், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளின் உள்ளேயும், வெளியேயும் புகை அடித்தல் மற்றும் கொசு மருந்து தெளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மாநகராட்சிப் பகுதிகளிலும் அதனை ஒட்டியுள்ள உள்ளாட்சி அமைப்புகளிலும் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக்களில் உள்ள மேல் மாடிகளில் கொசுக்கள் உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையிலான தேவையற்ற பொருட்களை மாநகராட்சி உள்ளாட்சி அமைப்பு பணியாளர்களைக் கொண்டும் தற்காலிகப் பணியாளர்களைக் கொண்டும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பகுதிகளில் உள்ள காலியிடங்கள் மற்றும் தனியார் மனைகளில் தேங்கிக் கிடக்கும் குப்பை மற்றும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீர்நிலைகளில் உள்ள ஆகாயத் தாமரைகள் முழுமையாக அகற்றப்பட வேண்டும். மழைநீர் வடிகால்களைத் தினமும் சுத்தப்படுத்தி வடிகாலில் கழிவுநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் கொசு ஒழிப்பு மருந்தைச் சரியான கால இடைவெளியில் தெளிக்க வேண்டும். மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், பள்ளி , கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோரை கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல், ஊர்வலம், தகவல் கல்வி மற்றும் தொடர்பு ஆகிய முறைகளைப் பயன்படுத்தி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்து தொற்று நோய் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

டெங்குகாய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவுவதைத் தடுக்க, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குறித்த விவரங்கள் அந்தந்த மாநகராட்சி, நகராட்சி நல அலுவலர்கள் மற்றும் அந்தந்த சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகத்திற்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் வேலுமணி, சென்னை மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணிக்கென 2056 சிறு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டு 1245 நிரந்தர மலேரியா பணியாளர்கள், 2101 ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 3346 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 14,13,771 குடியிருப்பு இடங்கள், 12906 காலிமனை இடங்கள் மற்றும் 6917 பூட்டிய வீடுகள், 1665 அரசு கட்டடங்கள், 1841 பள்ளிக் கட்டடங்கள், 7722 கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்கள், 326 அரசு மருத்துவமனைகள், 532 தனியார் மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுகாதாரத்துறை சார்பாக சென்னையில் 131 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 6469 பயனாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். கடந்த 2 நாட்களில் சென்னையில் உள்ள 549 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசுப்புழுக்கள் உருவாக ஏதுவாக உள்ள இடங்களைக் கண்டறிந்து ரூ.5,44,400 அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையைத் தவிர்த்து இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் 1,41,212 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களைக் கொண்டு 9,654 புகைப்பரப்பும் இயந்திரங்களின் உதவியுடன் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையைத் தவிர்த்து 14 மாநகராட்சிகள் மற்றும் 121 நகராட்சிகளில் இதுநாள் வரை கொசுப்புழுக்கள் உருவாக ஏதுவாக உள்ள இடங்களைக் கண்டறிந்து ரூ.11.07 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவிக்கையில், ”டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மருத்துவக் கையேடு மற்றும் புத்தகம் அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு செய்திகள் பொது இடங்கள் மற்றும் திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது” என்றார்.

முன்னதாக, டெங்கு மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாகனங்களை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். மேலும், சென்னைப் பள்ளிகளில் பயிலும் 9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்குச் சுகாதார தூதுவர்களுக்கான அடையாள அட்டையினை அமைச்சர்கள் வழங்கினார்கள். இந்த மாணவர்கள் அவர்களுடைய பகுதிகளில் மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து அவர்களது பகுதிகளில் டெங்கு மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் பொதுச்சுகாதாரத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: வெளிநாட்டுப் பயணம்: இடையிலேயே திரும்புகிறாரா எடப்பாடி?


வடிவேலு ஆசானுக்கு வாழ்த்து சொல்லணும்: அப்டேட் குமாரு


ஹெச்.ராஜா மிரட்டுகிறார்: டி.கே.எஸ்.இளங்கோவன்


சிதம்பரம் மீது நடவடிக்கையா? இன்று காங்கிரஸ் அவசரக் கூட்டம்!


பொருளாதாரம் பற்றிதான் கவலை: திகாரில் சிதம்பரம்


வெள்ளி, 6 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon