மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

மதிய உணவில் முறைகேடு: அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் மீது வழக்கு!

மதிய உணவில் முறைகேடு: அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் மீது வழக்கு!

உத்திரபிரதேச மாநில அரசுப்பள்ளியில் ரொட்டியுடன் பாலுக்கு பதிலாக உப்பை மதிய உணவில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட வீடியோவை வெளிப்படுத்திய பத்திரிக்கையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

உள்ளூர் ஊடகவியலாளர் பவன் ஜெய்ஸ்வால் மற்றும் கிராமத் தலைவர் ராஜ்குமார் பால் ஆகியோர் மாநில அரசின் பிம்பத்தை அவமதிப்பு செய்ததாகக் குற்றம் சாட்டிய அப்பகுதியின் தொகுதி கல்வி அதிகாரி (Block Education Officer) இந்த வழக்கை பதிவு செய்தார்.

இந்தியாவில் உள்ள அரசுப் பள்ளிகளில் அரசு நடத்தும் மதிய உணவு திட்டத்தின் ஒரு பகுதியாக, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாட்டை போக்க ஊட்டச் சத்துள்ள மதிய உணவு கொடுக்க வேண்டும் என மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், பல மாநிலங்களில் இத்திட்டம் பெயரளவில் மட்டுமே நடத்தப்படும் அவலம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்திப் பத்திரிக்கை ஒன்றில் பணியாற்றி வரும் பவன் குமார் ஜெய்ஸ்வால், சம்பவம் நடந்த உத்திர பிரதேச மாநில, மிர்சாபூர் மாவட்டத்திலுள்ள சியூர் பகுதியைச் சேர்ந்தவர். சியூர் ஆரம்பப் பள்ளி மதிய உணவில் சிறார்களுக்கு சரியான உணவு வழங்கப்படுவதில்லை என கிராமத் தலைவர் ராஜ்குமார் பால், பவன் குமாரிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, பவன் குமார் அப்பள்ளிக்கு மதிய உணவு இடைவேளையில் நேரிடையாகச் சென்று வீடியோவில் பதிவு செய்துள்ளார். அந்தக் காணொளியில் ரொட்டிக்கு பால் கொடுப்பதற்கு பதிலாக உப்பை அளித்தது பதிவாகியுள்ளது. ஆகஸ்ட் 22ஆம் தேதி சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்தப் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.

இதையடுத்து மாவட்ட மாஜிஸ்திரேட் அனுராக் பட்டேலிடம் சிலர் முறையிட்டனர். இதன் உண்மைத் தன்மை தெரிந்தபிறகு விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று தெரிவித்தார். வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பள்ளித் தலைமை ஆசிரியர் முராரி சிங், நியாய் பஞ்சாயத் உறுப்பினர் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

அதே சமயம், அடிப்படை கல்வி அமைச்சர் சதீஷ் திவேதி ஊழலை அம்பலப்படுத்தியதற்காக பத்திரிகையாளருக்கு எதிரான நடவடிக்கையை எடுத்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது.

மாவட்ட நிர்வாகம் இந்த வீடியோவை எடுத்ததற்காக அதில் சம்பந்தப்பட்ட பவன் குமார், ராஜ்குமார் பால் மற்றும் அடையாளம் தெரியாத நபர் மீது குற்றவியல் சதித்திட்டம், ஒரு பொது ஊழியரின் செயல்பாடுகளைத் தடுப்பது, தவறான ஆதாரங்களை உருவாக்குதல் மற்றும் மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுடன் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

மேலும், இந்த வீடியோ காட்சி மாநில அரசாங்கத்தை அவதூறு செய்வதற்கான ஒரு பெரிய சதி என்றும் இது உருவாக்கப்பட்ட கதையின் ஒரு பகுதியாகும் எனவும் சதீஷ் திவேதி கூறினார்.

இந்தியாவின் எடிட்டர்ஸ் கில்ட், பத்திரிகையாளருக்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்துள்ளது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: வெளிநாட்டுப் பயணம்: இடையிலேயே திரும்புகிறாரா எடப்பாடி?


வடிவேலு ஆசானுக்கு வாழ்த்து சொல்லணும்: அப்டேட் குமாரு


ஹெச்.ராஜா மிரட்டுகிறார்: டி.கே.எஸ்.இளங்கோவன்


சிதம்பரம் மீது நடவடிக்கையா? இன்று காங்கிரஸ் அவசரக் கூட்டம்!


பொருளாதாரம் பற்றிதான் கவலை: திகாரில் சிதம்பரம்


வெள்ளி, 6 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon