மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

மீண்டும் தொடங்கிய ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்!

மீண்டும் தொடங்கிய ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்!

கப்பிகுளம் ஜெ.பிரபாகர்

தமிழக அரசால் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பண்டாரம்பட்டி கிராம மக்கள் தொடர் போராட்டத்தை அறிவித்து உள்ளனர். மக்களைப் பிளவுபடுத்தும் தடை செய்யப்பட்ட தனியார் ஆலையின் போக்கைக் கண்டித்து, பண்டாரம்பட்டி கிராமத்தில் 08.09.2019 ஞாயிறு அன்று 18 க்கும் மேற்பட்ட கிராமங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டமும் நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாநகரை ஒட்டிய சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டது ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை. ஜாம்பியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்படும் தாமிரத் தாதுக்களைப் பிரித்தெடுத்து, தாமிரத்தை மூலப்பொருளாக்கி, தாமிரம், தங்கம், பல்லேடியம் உள்ளிட்ட பொருட்களை மீண்டும் கப்பல் மூலம் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பது தாமிர உருக்காலையின் பணி.

ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தொடங்கப்பட்ட 1994ஆம் ஆண்டு முதலே, இது உற்பத்தி ஆலை கிடையாது, உருக்காலை. அதனால் ஆர்சனிக், யுரேனியம், கந்தகவாயு வெளியேறி பாதிப்பை உண்டாக்குகிறது என்று குற்றம்சாட்டி, போராட்டங்களும் தொடர்கதையாகவே இருந்து வந்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடந்த காவல்துறை துப்பாக்கிச் சூட்டில், ஸ்நோலின் என்ற இளம்பெண் உள்ளிட்ட 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதும், வன்முறை சம்பவங்களும் நாடு முழுக்கவே அதிர்வை உண்டாக்கியது.

144 தடை உத்தரவு, கைது, விசாரணை, இணைய சேவைகள் துண்டிப்பு, அரங்கக் கூட்டம் நடத்துவதற்குக் கூட உயர்நீதிமன்ற அனுமதி என்று பல நாட்களாகவே பதற்றத்தில் இருந்தது தூத்துக்குடி.

அந்தச் சூழ்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அதனடிப்படையில் சுற்றுச்சூழலையும், நிலம், நீர், காற்றையும் மாசுபடுத்திய ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது; முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதற்கான அரசாணையையும் வெளியிட்டார்.

தமிழக அரசின் உத்தரவிற்கு எதிராக ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நடத்தி வரும் வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது விசாரணையில் இருக்கிறது.

துப்பாக்கிச் சூட்டிற்குப்பிறகு, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் செய்து வருகிறது.

குடிநீர் வசதி, குளம், வாய்க்கால் தூர்வாருதல், கல்வி உதவித்தொகை, சுய உதவிக்குழு பெண்களுக்கு நிதிஉதவி, அயர்ன் பாக்ஸ், தையல் மெசின், கிரிக்கெட் பேட், பந்து, விளையாட்டு வீரர்களுக்கு சீருடை, இந்துக் கோயில்களில் அன்னதானம், கிறித்தவக் கோயில்களில் அசனம், பக்தர்களுக்கு பரிசுப்பை, தீபாவளி, பொங்கல், நியூஇயர், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகையின் போது கிஃப்ட் வவுச்சர், சுவீட் பாக்ஸ் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை, தூத்துக்குடியின் புறநகர் பகுதிகளான கோவில்பட்டி, உடன்குடி, குலசேகரப்பட்டணம், திருச்செந்தூர், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்டெர்லைட் நிர்வாகம் செய்து வந்தது. அப்போது பயனாளிகளிடம் ஸ்டெர்லைட் ஆலையை ஆதரிக்கிறோம் என்று எழுதப்பட்ட படிவத்தில் கையெழுத்தும் வாங்கியுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பண்டாரம்பட்டி, சங்கரப்பேரி, மடத்தூர், சில்வர்புரம் உள்ளிட்ட கிராமங்களில், 270 குடும்பங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை ஸ்டெர்லைட் நிறுவனம் ஏற்படுத்தி தந்துள்ளது என்றும், முத்துச்சரம் தாமிரசுரபி திட்டத்தின் கீழ் 35 லட்ச ரூபாய், குடிநீர் குழாய்கள் இணைப்பிற்காக, தூத்துக்குடி மாநகராட்சிக்கு 29.08.2019 அன்று ஸ்டெர்லைட் நிறுவனம் வழங்கியுள்ளது என்றும் வேதாந்தா குழுமத்தின் செய்தி அறிக்கை ஒன்று பத்திரிகைகளில் வெளியாக, ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.

தங்கள் கிராமங்களின் பெயருடன் வந்த, ஸ்டெர்லைட் செய்தியைப் படித்த பொதுமக்கள் 05.09.2019 வியாழன் இரவு எட்டு மணியளவில் பண்டாரம்பட்டி அம்மன் கோவில் முன்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

"இருபது வருசமா இந்தக் கம்பெனி இங்கதான இருக்கு, நாங்களும் உசுரோடத்தான இருக்கோம். அப்பயெல்லாம் எதுக்கு நலத்திட்ட உதவி செய்யல? அந்த பதிமூணு பேர சுட்டுக் கொன்னதுக்கு அப்புறந்தான மரக்கன்னு கொடுக்கோம், பள்ளிக்கூடத்துக்கு நோட்டு புக்கு கொடுக்கோம், தண்ணி கொடுக்கோம்னு ஓடி வாரங்க. இது லஞ்சத்தான? பதிமூணு பேரு சாகலன்னா, இதக் குடுப்பாங்களா? லஞ்சத்துக்குப் பேரு நலத்திட்டமாம்,

முதலமைச்சரு கம்பெனிய மூடச்சொல்லிட்டாரு, அந்தக் கம்பெனிக் கிட்ட ரூவாய வாங்கி, ரோடு போடுறேன், குளம் வெட்டுறேன், பள்ளிக்கூடம் கட்டுறேன், பூங்கா வைக்கிறேன்னு இங்க இருக்க அதிகாரிங்க செலவு செய்றாங்க.

அப்போ மொதலமைச்சர் போட்ட உத்தரவுக்கு, கலெக்டர் என்ன மரியாத கொடுக்காரு?

குடிதண்ணி, ரோடு, படிப்பு எல்லாத்தையும் ஸ்டெர்லைட்காரன் செஞ்சு கொடுத்தா, பெறகு அரசாங்கம் எதுக்கு? கலெக்டர் எதுக்கு?

ஊருக்குள்ள நாலு பேருக்கு காசக்குடுத்துட்டு ஊர ரெண்டாக்குற வேலைய செய்றாங்க. முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் எங்களுக்கு நெரந்தர முடிவு தரந்தட்டியும், இந்த எடத்த விட்டுப் போமாட்டோம்" என்று நள்ளிரவிலும் உறுதியோடு நிற்கின்றனர் பண்டாரம்பட்டி பகுதி பொதுமக்கள்.

சிப்காட் காவல்துறையும், மீளவிட்டான் பகுதி வருவாய் துறை அதிகாரிகளும், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, பண்டாரம்பட்டி பொதுமக்களோடும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

முத்துச்சரம் தாமிரசுரபி திட்டத்தை 50 லட்ச ரூபாய் செலவில் தொடங்கி நடத்தும்போது, நிலத்தடி நீரை மாசுபடுத்தி விட்டு, இப்போது சுத்திகரிப்பு நீர் விநியோகமா என்று ஸ்டெர்லைட் வாகனத்தை மடத்தூர் மக்கள் திருப்பி அனுப்பினர்.

சங்கரப்பேரி கிராமத்தில் தாமிரா கோப்பை கிரிக்கெட் போட்டி இளைஞர்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. இப்போது குடிநீர் குழாய் இணைப்பை ஸ்டெர்லைட் செய்து தரக்கூடாதென போராட்டம் தொடங்கியிருக்கிறது.

ஸ்டெர்லைட் பணியாளர்கள் குடியிருப்பான தாமிரா வளாகத்தில் தூத்துக்குடி காவல்துறை ஆய்வாளர்களுக்கு விருந்து வைத்த விவகாரத்திலேயே இன்னும் துறை ரீதியான விசாரணை நடந்து முடியவில்லை. அதற்குள் மாநகராட்சி அதிகாரிகளின் விவகாரம் வந்துவிட்டது.

தமிழக அரசால் நிரந்தரமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்ட ஒரு ஆலையிடம், தமிழக அரசுக்கு எதிராக வழக்கு நடத்தி வரும் ஒரு ஆலையிடம் நிதி உதவிகள் பெற்று திட்டங்களை செயல்படுத்தும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் நல்லதொரு முடிவை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் பொதுமக்கள்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: வெளிநாட்டுப் பயணம்: இடையிலேயே திரும்புகிறாரா எடப்பாடி?


வடிவேலு ஆசானுக்கு வாழ்த்து சொல்லணும்: அப்டேட் குமாரு


ஹெச்.ராஜா மிரட்டுகிறார்: டி.கே.எஸ்.இளங்கோவன்


சிதம்பரம் மீது நடவடிக்கையா? இன்று காங்கிரஸ் அவசரக் கூட்டம்!


பொருளாதாரம் பற்றிதான் கவலை: திகாரில் சிதம்பரம்


வெள்ளி, 6 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon