மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

கோலிவுட்டுக்கு திரும்பும் குட்டி ராதிகா

கோலிவுட்டுக்கு திரும்பும் குட்டி ராதிகா

இயற்கை படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி பரவலாக கவனம் பெற்ற குட்டி ராதிகா நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ்த் திரையுலகிற்கு திரும்புகிறார்.

எஸ்.பி.ஜனநாதன் இயக்குநராக அறிமுகமான இயற்கை படத்தில் சாம், அருண் விஜய், குட்டி ராதிகா ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். தாஸ்தோவெஸ்கியின் வெண்ணிற இரவுகள் நாவலைத் தழுவி தமிழ் நிலத்திற்கேற்ப திரைக்கதை அமைத்திருந்தார் எஸ்.பி.ஜனநாதன். 2003ஆம் ஆண்டு சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருது பெற்றது அப்படம். அதன் மூலம் குட்டி ராதிகா தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார். ஆனால் அதன்பின் அவர் ஏற்று நடித்த சில படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பு பெறாத நிலையில் 2006க்குப் பின் தமிழில் அவர் நடிக்கவில்லை.

தற்போது நவரசன் இயக்கத்தில் தமயந்தி என்ற ஹாரர் த்ரில்லர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது. இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்படுகிறது.

படம் குறித்து பேசிய இயக்குநர் நவரசன், “அருந்ததி, பாகமதி ஆகிய படங்கள் போன்ற ஹாரர் த்ரில்லர் படம் தமயந்தி. இதில் நடிக்க முதலில் அனுஷ்காவை தொடர்புகொண்டேன். அவருக்கு திரைக்கதை மிகவும் பிடித்திருந்தாலும் மற்ற படங்களில் ஒப்பந்தமாகியிருந்ததால் அவரால் நடிக்கமுடியவில்லை. எனது இரண்டாவது தேர்வு குட்டி ராதிகா. அவரும் இரண்டு கன்னடப் படங்களில் பிஸியாக இருந்தார். இருப்பினும் ஒருமுறை கதையைக் கேளுங்கள் என்று கூறி அவரிடம் விவரித்தேன். கேட்டபின் தான் நடிப்பதாக உடனே சம்மதித்தார். இதற்காக மற்ற படங்களின் தேதிகளை மாற்றியமைத்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், பெங்களூர், மைசூர், மற்றும் கேரளாவின் சில இடங்களில் நடைபெற்றுள்ளது. “இரண்டு காலகட்டங்களின் பின்னணியில் கதை நடைபெறுகிறது. அதில் ராதிகா இளவரசியாக நடிக்கிறார். ரஜினிகாந்தின் நண்பர் ராஜ் பகதூர் அவருக்கு அப்பாவாக நடிக்கிறார். இதற்காக பிரம்மாண்ட அரங்கு அமைத்து படமாக்கினோம். கலை இயக்கம் கண்டிப்பாக பேசப்படும்” என்று கூறினார்.

தற்போது இறுதிகட்டப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் நவம்பர் மாதம் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: வெளிநாட்டுப் பயணம்: இடையிலேயே திரும்புகிறாரா எடப்பாடி?


ஹெச்.ராஜா மிரட்டுகிறார்: டி.கே.எஸ்.இளங்கோவன்


வடிவேலு ஆசானுக்கு வாழ்த்து சொல்லணும்: அப்டேட் குமாரு


ஒதுங்கும் தனுஷ், முந்தும் சித்தார்த்


பொருளாதாரம் பற்றிதான் கவலை: திகாரில் சிதம்பரம்


வெள்ளி, 6 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon