மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல்: சசி தரூர் கோரிக்கை

காங்கிரஸ்  தலைவர் பதவிக்கு தேர்தல்: சசி தரூர் கோரிக்கை

காங்கிரஸ் கட்சித் தலைவரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேரளாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர் குரல் எழுப்பியுள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்வியை அடுத்து அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். பலமுறை மூத்த தலைவர்கள் வற்புறுத்தியும் அவர் தன் முடிவில் பிடிவாதமாக இருந்ததால், கடந்த ஆகஸ்டு 11 ஆம் தேதி காலை முதல் இரவு வரை கூடி விவாதித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, இடைக்காலத் தலைவராக சோனியா காந்தியை தேர்ந்தெடுத்தது.

இந்த சூழலில்தான் இன்று (செப்டம்பர் 6) தி இந்து ஆங்கில நாளேட்டுக்குப் பேட்டியளித்துள்ள சசி தரூர், “என் மனதுக்கு காங்கிரஸ் தலைவரை தேர்தல் மூலமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று படுகிறது. ஜனநாயகக் களத்தில் செயல்படும் ஜனநாயகமற்ற கட்சியாக காங்கிரஸ் ஆகிவிடக் கூடாது. ஜனநாயக உரிமைகளுக்காக போராடும் கட்சிதானே காங்கிரஸ். அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ராகுல் காந்தி தனக்குத் தலைவர் பதவி வேண்டாம் என்று திட்டவட்டமாக திரும்பத் திரும்ப மறுத்துவிட்ட பிறகு தேர்தல் எனபதைத் தவிர காங்கிரஸ் கட்சிக்கு வேறு வழியில்லை” என்று கூறியிருக்கிறார்.

மேலும் அவர்,

“காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் வைத்தால் போட்டியிடுவதற்கு நிறைய பேர் தகுதியானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தேர்தல் என்பது அறிவிக்கப்படாதவரை அவர்கள் தங்களை வேட்பாளர் என அடையாளப்படுத்திக் கொள்ள முன் வர மாட்டார்கள். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பமுள்ள சிலர் என்னிடம் கூட பேசிவருகிறார்கள். தேர்தல் என்ற செயல் திட்டம் அறிவிக்கப்படாத நிலையில், நான் தான் தலைவராக தகுதி பெற்றவன் என்று யாரேனும் கூறினால், உடனடியாக அவர்கள் கட்சியினராலேயே ஒடுக்கப்படுவார்கள். அது மரணத்தை முத்தமிடுவதற்கு ஒப்பானது” என்று கூறியுள்ளார் சசி தரூர்.

சில நாட்களுக்கு முன், “எல்லா நேரத்திலும் பிரதமரைக் குறை கூறிக் கொண்டிருக்கக் கூடாது. அவர் செய்யும் நல்ல விஷயங்களையும் பாராட்ட வேண்டும். அப்போதுதான் அவரைக் குறைகூறும்போது நம்பகத்தன்மை இருக்கும்” என்று கூறியிருந்தார் சசி தரூர் . அப்போது மோடியைப் புகழ்கிறார் என்று காங்கிரசுக்குள்ளேயே அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில்தான் சோனியா காந்தி காங்கிரஸ் இடைக் காலத் தலைவராக இருக்கும் சூழலில், ‘காங்கிரஸ் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என்று குரல் கொடுத்திருக்கிறார் சசி தரூர்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: வெளிநாட்டுப் பயணம்: இடையிலேயே திரும்புகிறாரா எடப்பாடி?


ஹெச்.ராஜா மிரட்டுகிறார்: டி.கே.எஸ்.இளங்கோவன்


வடிவேலு ஆசானுக்கு வாழ்த்து சொல்லணும்: அப்டேட் குமாரு


ஒதுங்கும் தனுஷ், முந்தும் சித்தார்த்


பொருளாதாரம் பற்றிதான் கவலை: திகாரில் சிதம்பரம்


வெள்ளி, 6 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon