மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

கார்த்தி சிதம்பரத்தின் ரூ.10 கோடி: உச்ச நீதிமன்றம் மறுப்பு!

கார்த்தி சிதம்பரத்தின் ரூ.10 கோடி: உச்ச நீதிமன்றம் மறுப்பு!

கார்த்தி சிதம்பரம் செலுத்திய பிணைத் தொகை ரூ.10 கோடியை நீதிமன்ற கருவூலத்தில் மேலும் 3 மாதங்களுக்கு டெபாசிட்டாக வைத்திருக்க உச்ச நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 6) உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது ஏர்செல் மேக்சிஸ், ஐஎன்எக்ஸ் மீடியா உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. இந்த வழக்குகள் தொடர்பாக அமலாக்கத் துறையும், சிபிஐயும் விசாரித்து வருகிறது. தன் மீது உள்ள வழக்குகளால், கடந்த ஆண்டு ரூ.10 கோடி உச்ச நீதிமன்றத்தில் பிணைத் தொகையாக செலுத்தி கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தார்.

இந்நிலையில் ரூ.10 கோடியைத் திரும்ப அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை மே முதல் வாரம் விசாரித்த நீதிமன்றம் இந்த மனுவை இப்போது விசாரிக்க அவசரமில்லை என்று கூறிவிட்டது. கடந்த மே 29 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கடன் பெற்றுப் பிணை தொகை செலுத்தப்பட்டது. இதனால் அதற்கு வட்டி கட்டும் நிலை உள்ளது. எனவே ரூ.10 கோடியை திரும்ப அளிக்க வேண்டும் என்று மீண்டும் கார்த்தி சிதம்பரம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் சிவகங்கை தொகுதியில் கவனம் செலுத்துங்கள் என்று கார்த்தி சிதம்பரத்துக்கு அறிவுறுத்தியது.

இந்த மனு நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கார்த்தி சிதம்பரம் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரது பெயரில் செலுத்தப்பட்ட பிணை தொகையை உடனடியாக திருப்பி அளிக்க நீதிபதி மறுப்புத் தெரிவித்தார். மேலும் அவர் செலுத்திய ரூ. 10 கோடியை மேலும் 3 மாதங்களுக்கு நீதிமன்ற கருவூலத்தில் டெபாசிட்டாக வைத்திருக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இதற்கிடையே. சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்புடைய ஏர்செல் மேக்சிஸ் வழக்கு விசாரணையை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார். சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் 6 வார கால அவகாசம் கோரிய நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

வெள்ளி, 6 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon