மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

டிஜிட்டல் திண்ணை: வெளிநாட்டுப் பயணம்: இடையிலேயே திரும்புகிறாரா எடப்பாடி?

டிஜிட்டல் திண்ணை: வெளிநாட்டுப் பயணம்: இடையிலேயே திரும்புகிறாரா எடப்பாடி?

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன் லைனில் வந்தது.

“தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகஸ்ட் 28 ஆம் தேதியிலிருந்து வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை இருந்த முதல்வர் அதன்பிறகு புறப்பட்டு அமெரிக்கா சென்றுள்ளார்.

அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் முதல்வர் முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வசதியாக யாதும் ஊரே என்ற திட்டத்தை செப்டம்பர் 4 ஆம் தேதி தொடங்கி வைத்தார். 19 நிறுவனங்கள் சுமார் 2,300 கோடி ரூபாய் அளவிற்குத் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாகவும் தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடியின் ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின்படி செப்டம்பர் 7 ஆம் தேதியோடு அவரது அமெரிக்கப் பயணம் முடிகிறது. 8, 9 தேதிகளில் துபாய் செல்லும் முதல்வர் அங்கு தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பத்தாம் தேதி சென்னை திரும்புகிறார் என்பதுதான் ஏற்கனவே அரசு வெளியிட்டிருந்த முதல்வரின் நிகழ்ச்சி நிரல்.

இந்த நிலையில் முதல்வரின் இந்த பயணத் திட்டத்தில் மாற்றம் இருக்கலாம் என தலைமைச் செயலக வட்டாரத்திலிருந்து தகவல்கள் வருகின்றன.. ஏழாம் தேதி அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பி விட்டு சென்னையிலிருந்து மீண்டும் துபாய் செல்லலாம் என்பதுதான் முதல்வரின் திட்டமாக இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டின் நடப்பு அரசியல் நிகழ்வுகள் அரசு நிர்வாக செயல்பாடுகள் பற்றி அமைச்சர் தங்கமணியோடும், வேலுமணியோடும் முதல்வர் உரையாடிக் கொண்டிருக்கிறார். தலைமைச் செயலாளர் முதல்வர் கூடவே இருப்பதால் அதிகாரிகள் வட்டாரத்தை அவரைப் பார்த்துக் கொள்கிறார்.

தலைமைச் செயலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி இல்லை என்றாலும் அவ்வப்போது தங்கமணி அலுவலகத்துக்கு வந்து முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார் நடத்தி வருகிறார் இதனை அவர் முதல்வருக்கும் ரிப்போர்ட் செய்து வருகிறார்.

அப்படிப் பேசும்போதுதான், ‘நீங்க ஊரை விட்டு போயி ரெண்டு வாரம் ஆகுது...’ என்று ஆரம்பித்து தங்கமணி அதிமுகவில் நடந்துவரும் சில விஷயங்களையும், தமிழக பாஜகவில் தலைவர் மாற்றம் உட்படமற்ற கட்சிகளில் நடக்கும் விஷயங்களையும் பற்றிப் பேசியிருக்கிறார். அப்போதுதான் அமெரிக்காவில் இருந்து துபாய் செல்வதற்கு பதிலாக, தமிழகத்துக்கு வந்து தலையைக் காட்டிவிட்டு மீண்டும் துபாய் செல்லலாம் என்றும் தங்கமணி யோசனை சொல்லியிருக்கிறார். அதனையடுத்து அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பி அதன் பிறகு இங்கிருந்து சில மணி நேரங்களே பயண நேரம் ஆகும் துபாய்க்கு செல்லலாம் என்ற முடிவில் முதல்வர் இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி முதல்வர் திட்டமிட்டதற்கு இரு நாட்கள் முன்பே சென்னை திரும்பினால், அன்று பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளையும் கவனித்தாக வேண்டும். பிறகு துபாய் பயணத்தை முடித்துவிட்டு வரும்போதும் வரவேற்பு அளிக்க வேண்டும். எனவே இரு முறை வரவேற்பு அளிப்பதா என்ற குழப்பமும் அதிமுக அமைச்சர்களிடையே இருக்கிறது.

அதனால் திட்டமிட்டபடி 10 ஆம் தேதி சென்னை திரும்புவதா அல்லது இடையில் ஒருமுறை சென்னையில் தலைகாட்டிவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடர்வதா என்ற ஆலோசனை தொடர்ந்துகொண்டிருக்கிறது” என்ற தகவலுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி!


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால்தானே அபராதம்: வைரல் வீடியோ!


ஸ்டாலினை பாஜக தலைவர் பாராட்டிய மர்மம்!


சிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா


வெள்ளி, 6 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon