மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

காஷ்மீருக்குள் இனி அமைதி திரும்புமா?

காஷ்மீருக்குள் இனி அமைதி திரும்புமா?

எப்படி இருக்கிறது ‘இந்திய’ காஷ்மீர் - 3?

ஜூலை 27ஆம் தேதி மத்திய ஆயுத காவல் படையின் (சிஏபிஎஃப்) வீரர்கள் 10,000 பேரை மத்திய அரசு காஷ்மீர் பள்ளத்தாக்குக்குள் அனுப்பியது. திடுதிப்பென அதிகரித்த ராணுவ படைகளை பார்த்து காஷ்மீர் மக்கள் என்ன விபரீதம் நடக்கப் போகிறதோ என தங்களுக்குள் உரையாடத் தொடங்கினர். எவருக்கும் ஒன்றும் புரியவில்லை.

மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பி.டி.பி) தலைவர் மெஹபூபா முப்தி, “இது மக்களிடையே ஒரு ‘அச்ச மனநோயை’ ஏற்படுத்துகிறது” என அச்சமயத்தில் கூறினார். ஆகஸ்ட் 3 ஆம் தேதி அமர்நாத் யாத்ரீகர்கள் தங்கும் நாட்களை குறைக்குமாறு மாநில அரசு எச்சரிக்கை விடுத்தபோது காஷ்மீர் மக்களின் பீதி அதிகரித்தது. அதே நாளில், ஆளுநர் சத்யபால் மாலிக் அரசியல் தலைவர்களுக்கு, "35 ஏ பிரிவை நீர்த்துப்போகச் செய்வதற்கோ, மூன்று பிரிவாக பிரிப்பதற்கோ எந்த நடவடிக்கையும் இல்லை" என்று தெளிவுபடுத்த முயன்றார்.

ஆனால் காஷ்மீரில் வெளியாகும் பத்திரிக்கைகள், முக்கியமான சில இந்திய ஊடகங்கள் மட்டும் முன் கூட்டியே இதனை பற்றிய எச்சரிக்கைகளை வெளிப்படுத்தின. நமது மின்னம்பலத்திலும் இது குறித்த செய்திகளை வெளியிட்டோம்.

அப்போது நடந்த ஆளுனர் சந்திப்பிற்கு பிறகு வெளியே வந்த மெஹபூபா, “கவலைப்பட ஒன்றுமில்லை என்று ஆளுனர் உறுதியளிக்கிறார். ஆனால், உண்மையைச் சொல்வதானால், அவர் அளித்த உறுதிமொழியில் நாங்கள் திருப்தியடையவில்லை” எனக் கூறினார்.

அதற்கு அடுத்த நாள்(ஆகஸ்ட் 4) காஷ்மீர் மாநிலத்தின் லேண்ட்லைன், மொபைல் மற்றும் இணைய தகவல்தொடர்புகள் துண்டிக்கப்பட்டது. பிரிவு 144 பயன்படுத்தப்பட்டது; மாநிலத்தின் சுதந்திரமான இயக்கங்கள் கட்டுப்பட்டது; அதையும் மீறி ஏதேனும் நடந்தால், முன்னெச்சரிக்கையாக எந்தவொரு எதிர்ப்பையும் கட்டுப்படுத்த அதிவேகமாக அதிகரித்த இராணுவ சக்தியும் அதற்காகவே தயார் படுத்தப்பட்ட நிலையில் இருந்தது.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி, அமித் ஷா பாராளுமன்றத்தில் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக அறிவித்தார். மெஹபூபா முப்தி இதை ‘இந்திய ஜனநாயகத்தில் இருண்ட நாள்’ என்று அழைத்தார். முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா இதை ‘ஜம்மு காஷ்மீர் மக்களின் நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட துரோகம்’ என்று அழைத்தார். மெஹபூபா முப்தி, உமர் அப்துல்லா இருவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டனர்.

இவர்களுக்கே இந்த நிலைமை எனில், சாதாரண மக்களுக்கு? காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பின், முதல் பெல்லட் குண்டு 17 வயதே நிரம்பிய அகீல் தார் மீது ஒரு சிபிஆர்எஃப் அதிகாரியின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்தது. ஒன்றல்ல, இரண்டல்ல.. ஸ்ரீநகர் மருத்துவமனையில் அகீல் தர் அனுமதிக்கப்பட்ட போது, முகத்தில் நேரடியாக ஒரு குண்டு உட்பட, அவரது உடலில் 90 குண்டுகள் பாய்ந்த துளைகள் காணப்பட்டது.

ஆகஸ்ட் 6ஆம் தேதி, பதினொன்றாவது படிக்கும் அஸர் கான் எனும் சிறுவன் வீட்டிற்கு வெளியே நின்றிருக்கும் போது, ராணுவத்தினரால் கண்ணீர் புகைக் குண்டு மற்றும் பெல்லட் குண்டால் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். ஒரு மாத கால சிகிச்சை பலனின்றி கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி இறந்திருக்கிறான் அஸர் கான்.

ஸ்ரீநகரில் உள்ள மருத்துமனைகளில் இதே போல பல இளைஞர்கள், சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை நான்கு பேர் இறந்துள்ளதாக கார்டியன் பத்திரிக்கை கூறியிருக்கிறது. குண்டடி பட்ட இளைஞர்களில் சிலர் காயங்களுடன் மருத்துவமனைக்கு செல்ல பயந்து கொண்டு வீட்டிலேயே அவதிபட்டுக் கொண்டிருக்கின்றனர். சுடப்பட்ட பல இளைஞர்களின் ஒரு கண் தெரியாமல் போயிருக்கின்றது. சிலருக்கு இரு கண்களுமே.

காஷ்மீரின் இளைஞர்களின் உடல்கள் பெல்லட்களாலும், ராணுவத்தின் காட்டுமிராண்டித்தன துன்புறுத்தல்களாலும் சிதைந்து கிடக்கின்றன. இளைஞர்கள் சக்தி இந்திய அரசுக்கு எதிரான மனநிலையிலேயே இருக்கின்றது. அடிப்படை சுதந்திரம், கல்வி, வேலைவாய்ப்பு என எல்லா மூலைகளிலும் முடக்கப்பட்ட நிலையே அங்குள்ளது.

மக்களுக்கான அடிப்படை பாதுகாப்புகளை வழங்காமல், நிம்மதியான வாழ்க்கைக்கு நம்பிக்கை அளிக்காமல் மத்திய அரசு பெரும் முதலீட்டாளர்களை உள்ளிழுக்கிறது. 2007ஆம் ஆண்டில் லடாக் பள்ளத்தாக்கில் செறிவான யுரேனியங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது அங்கு யுரேனியத்தை முன்னிட்டு பல திட்டங்கள் போடப்பட்டுள்ளன. லடாக்கை முன்வைத்து பல திட்டங்களுக்கு பெருநிறுவனங்கள் காய்களை நகர்த்தி வருகின்றன. எரிசக்தி உற்பத்தி, காற்றாலைகள் மூலம் மின்சார உற்பத்தி என அடுத்தடுத்த திட்டங்கள் இயற்கையின் பொக்கிஷ நிலத்தின் மீது குறிவைத்துள்ளது.

லடாக்கில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இந்த சட்டத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். ஏனெனில், புவியியல், கலாச்சாரம், சூழல் என அனைத்திலும் லடாக் தனித்துவம் கொண்டது. ஜம்மு-காஷ்மீரோடு ஓப்பிடுகையில் இந்திய அரசுக்கு இணக்கமான சூழலே அங்கு நிலவி வருகின்றது.

ஆனால், ஜம்மு-காஷ்மீரை பொறுத்த மட்டில் அவர்கள் முற்றிலும் எதிரான மனநிலையிலேயே இருக்கிறார்கள். ராணுவம் அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக நசுக்கி வருகின்றது. குறிப்பாக தெற்கு காஷ்மீரிலுள்ள கிராமப் பகுதிகள் இதனால் அதிகம் பாதிப்படைந்திருக்கிறார்கள். ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் பதட்டம் இன்னும் தனியவில்லை. இந்திய ராணுவம் துண்டுப் பிரசுரங்களை ஆர்டிகள் 370, ஆர்டிகள் 35A மாற்றத்தால் ஏற்படும் நன்மைகள்’ என விநியோகித்து வருகின்றது.

எப்படியாவது மக்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என எந்த உரையாடலுக்கும் முன்வராமல் அரசு சிந்திக்கிறது. ஆனால், காஷ்மீரிகள் உண்மையில் பேச விரும்புகிறார்கள். அவர்களின் விருப்பத்தை வெளிப்படுத்த, மற்ற மாநில மக்கள் போல ஒரு சராசரியான உத்திரவாதமான வாழ்க்கை வாழ, அந்த நில மக்களாக உரிமையை கோருகிறார்கள்.

பகுதி 1

பகுதி 2


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: வெளிநாட்டுப் பயணம்: இடையிலேயே திரும்புகிறாரா எடப்பாடி?


ஹெச்.ராஜா மிரட்டுகிறார்: டி.கே.எஸ்.இளங்கோவன்


வடிவேலு ஆசானுக்கு வாழ்த்து சொல்லணும்: அப்டேட் குமாரு


ஒதுங்கும் தனுஷ், முந்தும் சித்தார்த்


பொருளாதாரம் பற்றிதான் கவலை: திகாரில் சிதம்பரம்


வெள்ளி, 6 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon