மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

பல்கலை மாணவர் நீக்கம்: ஆளுநர் மாளிகை தலையீடா?

பல்கலை மாணவர் நீக்கம்: ஆளுநர் மாளிகை தலையீடா?

ஆளுநர் மாளிகை தலையீட்டால் தனது அட்மிஷன் ரத்து செய்யப்பட்டிருப்பதாக மாணவர் ஒருவர் புகார் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் துறையில் எம்.ஏ (புத்திஸம்) படித்து வருபவர் கரூரைச் சேர்ந்த மாணவர் கிருபா மோகன். கடந்த ஜூலை 31ஆம் தேதி முதல் ஒரு மாத காலமாக வகுப்புகளுக்குச் சென்று வருகிறார். இதற்கு முன்பு இதே பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்ட மேற்படிப்பை இவர் முடித்துள்ளார்.

இந்த நிலையில் கிருபா மோகனை தத்துவவியல் துறைத் தலைவர் வெங்கடாசலபதி அழைத்துப் பேசியிருக்கிறார். அப்போது, உங்களை நீக்கச் சொல்லி ஆளுநர் மாளிகை தனக்கு அழுத்தம் தருவதாகச் சொல்லியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, எலிஜிபிலிட்டி சான்றிதழ் அளிக்கவில்லை என்று கூறி கிருபா மோகனின் அட்மிஷனை சென்னைப் பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது. இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சேர்க்கையின்போது, ஏற்கனவே சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்ததால் எலிஜிபிலிட்டி சான்றிதழ் வேண்டாம் என்று நிர்வாகம் கூறியதாகவும் ஆனால், அதை மட்டுமே முதன்மையான காரணமாகக் கொண்டு தன்னை நீக்கியிருப்பதாகக் கூறும் மாணவர் கிருபா மோகன், தன்னுடன் படிக்கும் இரண்டு மாணவர்கள் எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்காத நிலையில், பழிவாங்கும் நோக்கில் தனது அட்மிஷன் மட்டும் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டுகிறார்.

இதுதொடர்பாக கிருபா மோகனைத் தொடர்புகொண்டு விரிவாகப் பேசினோம்...

“கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி தத்துவவியல் துறைத் தலைவர் பேராசிரியர் வெங்கடாஜலபதி என்னை அழைத்து, ‘ஆளுநர் மாளிகையிலிருந்து தொடர்ந்து பிரஷர் வருவதால் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி, உங்களது அட்மிஷனை ரத்து செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார். மாணவரிடம் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவரது சான்றிதழ்களும் சரியாக உள்ளது. எதைச் சொல்லி அவரது அட்மிஷனை ரத்து செய்வேன் என்று நான் துணைவேந்தரிடம் கூறினேன்’ என்றார்.

இதைக் கேட்டதும் நான் பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன். ‘எனது கல்வி சான்றிதழ்களிலோ, கல்வி சார்ந்த நடவடிக்கைகளிலோ ஏதாவது பிரச்சனை இருக்கிறதா, எதற்கு என்னுடைய அட்மிஷனை ரத்து செய்யச் சொல்கிறார்கள்’ என்று கேட்டேன்.

அதற்கு துறைத் தலைவரோ, ‘நீங்கள் அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டம் என்கிற மாணவர் அமைப்பில் ஏற்கெனவே செயல்பட்டு இருக்கிறீர்களாமே. அதனால்தான், உங்களை நீக்கச் சொல்கிறார்கள். எதையாவது சொல்லி உங்களது அட்மிஷனை ரத்து செய்யச் சொல்கிறார்கள். தினந்தோறும் துணைவேந்தரிடம் இருந்தும் ஆளுநர் மாளிகையிலிருந்தும் எனக்கு பிரஷர் கொடுக்கிறார்கள். எனக்கும் ஆளுநர் மாளிகைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தனிப்பட்ட விரோதமும் இல்லை. ஏன் இவ்வாறு நடக்கிறது என்று எனக்குப் புரியவில்லை’ என்றார். அதன் பிறகு ஒருவார காலம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருந்தது” என்று தெரிவித்த கிருபா மோகன் தொடர்ந்து....

“மீண்டும் கடந்த 29ஆம் தேதி என்னை அழைத்த துறைத் தலைவர், ‘தொடர்ச்சியாக ஆளுநர் மாளிகை மற்றும் துணைவேந்தரிடமிருந்து உங்களது அட்மிஷனை ரத்து செய்யச் சொல்லி பிரஷர் கொடுக்கின்றனர். எனது 20 ஆண்டுக்கால பணி அனுபவத்தில் இதுபோன்ற பிரஷரை எதிர்கொண்டதில்லை. எனவே, உங்களது அட்மிஷனை ரத்து செய்துள்ளேன். அதற்கான கடிதத்தையும் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்றார்.

வகுப்புகள் தொடங்கி ஒருமாத காலத்துக்குப் பிறகு இவ்வாறு செய்வது நியாயமா என்று கேட்டேன். அதற்கு, ‘நீங்கள் எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்கவில்லை. இதை முன்னிட்டு உங்கள் அட்மிஷனை ரத்து செய்யச் சொல்லி துணைவேந்தர் கூறினார்’ என்று புதிதாக ஒரு காரணத்தைக் கூறினார் துறைத் தலைவர் வெங்கடாஜலபதி.

ஆனால், எனது அட்மிஷனின்போது ஏற்கனவே சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளதால், எலிஜிபிலிட்டி சான்றிதழ் தேவையில்லை, முதுகலை புரவீஷ்னல் சான்றிதழே போதுமானது என்று நீங்கள்தானே கூறினீர்கள் என்றேன். அதற்கு அவர், ‘ஆளுநர் தரப்பில் இருந்து பிரஷர், என்னால் ஒன்றும் செய்ய முடியாது’ என்று கூறிவிட்டார். எனது அட்மிஷனையும் ரத்து செய்துள்ளார்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “சென்னைப் பல்கலைக்கழக விதிகளின்படி, வேறு பல்கலைக்கழகத்திலிருந்து சென்னைப் பல்கலைக்கழகத்துக்குப் படிக்க வந்தால்தான் எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்க வேண்டும். நான் ஏற்கெனவே சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளதால் எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்க வேண்டிய தேவையில்லை. அவ்வாறு எலிஜிபிலிட்டி சான்றிதழ் பெற வேண்டும் என்றாலும், அந்தந்த துறைகள் மூலமாகத்தான் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இருந்து சான்றிதழ் பெற முடியும். தனிப்பட்ட ரீதியாக எலிஜிபிலிட்டி சான்றிதழ் பெற முடியாது. எனக்குப் பிறகு தத்துவவியல் துறையில் அட்மிஷனான இரண்டு மாணவர்கள் தற்போதுவரை எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்காத நிலையில், என்னுடைய அட்மிஷன் மட்டும் எதற்காக ரத்து செய்யப்பட்டுள்ளது” என்று கேள்வி எழுப்பும் கிருபா மோகன்,

“பிரச்சினை எலிஜிபிலிட்டி சான்றிதழ் பற்றியது அல்ல. எந்தக் காரணத்தையாவது சொல்லி எனது அட்மிஷனை நீக்க வேண்டும் என்பதுதான் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் நோக்கமாக உள்ளது. உரிய சான்றிதழ் கொடுத்து, கட்டணமும் செலுத்தி ஒருமாத காலம் வகுப்புகளுக்கும் சென்ற பிறகு சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் எனது அட்மிஷனை ரத்து செய்து பழிவாங்கியுள்ளது.

கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்திலிருந்து முதல் தலைமுறையாகப் படிக்க வந்தவர்களில் நானும் ஒருவன். முறையான எவ்வித காரணங்களும் இல்லாமல், அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டத்தில் இணைந்து செயல்பட்ட காரணத்துக்காக, அம்பேத்கர் பெரியாரின் கருத்துகளைப் பேசியதற்காக, சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் எனது அட்மிஷனை ரத்து செய்துள்ளது. இது எனக்கு மிகுந்த மன உளைச்சலையும் கடும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது” என்றும் வேதனையுடன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.


மேலும் படிக்க


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


டிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ


தினகரன் -ஸ்டாலின் பப்பீஸ் டீல் : அதிமுகவின் தேர்தல் திட்டம்!!


பாஜகவில் ரஜினி கேட்கும் பதவி!


‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி


வியாழன், 5 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon