மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

சிதம்பரம்: 75 ஆவது பிறந்தநாள் திகார் சிறையில்!

சிதம்பரம்: 75 ஆவது பிறந்தநாள் திகார் சிறையில்!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ப.சிதம்பரம் கடந்த 22ஆம் தேதி முதல் சிபிஐ காவலில் இருந்த நிலையில் இன்று (செப்டம்பர் 05) அவரை செப்டம்பர் 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திகார் சிறையில் தனி அறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து தனது 75 ஆவது பிறந்தநாளை சிதம்பரம் திகார் சிறையில் கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரை சிபிஐ அதிரடியாக கைது செய்தது. அவருக்கு ஜாமீன் பெற சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்டோர் வாதிட்டு வந்தனர். ஆனால், சிதம்பரத்துக்கு ஜாமீன் பெற முடியவில்லை. தொடர்ந்து சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி அஜய் குமார் குஹார் முன்பு சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தி வந்தனர். அடுத்தடுத்து சிதம்பரத்துக்கு 5 முறை சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டது. அதன்படி இன்றுவரை 15 நாட்கள் சிபிஐ காவலில் சிதம்பரம் இருந்தார். சிபிஐ காவலுக்கான அதிகபட்ச காலம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று (செப்டம்பர் 5) மீண்டும் நீதிபதி அஜய் குமார் குஹார் முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

அப்போது சிபிஐ தரப்பில் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார். ”இந்த வழக்கில் சிதம்பரத்தால் ஆதாரத்தை அழிக்க வாய்ப்பு உள்ளது என்ற வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுகொண்டது. அவர் சக்தி வாய்ந்த நபர் என்பதால் ஆதாரங்களை அழிக்க கூடும். எனவே அவரை வெளியே விடக் கூடாது. அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

இதற்கிடையே, ஒருவேளை சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்டால் திகார் சிறையில் அடைக்க நேரிடும் என்பதால், அதனை தடுக்கும் வகையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத் துறையிடம் ஆஜராகத் தயார் என்று சிதம்பரம் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. வழக்கறிஞர் கபில் சிபல் முன்வைத்த வாதத்தில், போலீஸ் காவல் முடிந்தால் நீதிமன்ற காவல் என்பது அவசியமானது என சட்டத்தில் எந்த கொள்கையும் இல்லை. என்று தெரிவித்தார். ஆதாரங்களே இல்லாத நிலையில் சிதம்பரம் ஆதாரத்தை அழித்துவிடுவார் என்ற சிபிஐ வாதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை அரை மணி நேரத்துக்கு பின்னர் வழங்குவதாக தெரிவித்தார். பின்னர் 5 மணியளவில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சிதம்பரத்தை 19ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதன்மூலம் சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்படுகிறார். சிதம்பரம் தரப்பில் வெஸ்ட்டர்ன் டாய்லட், மருத்துவ வசதியுடன் கூடிய தனி அறை வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து, அவருக்கு தனி அறை ஒதுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இன்று காலை அமலாக்கத் துறை வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, சிபிஐ காவலுக்கு எதிரான மனுவை சிதம்பரம் தரப்பு திரும்ப பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது,

நிபந்தனை முன் ஜாமீன்

ஏர்செல்' நிறுவனத்தில் 'மேக்சிஸ்' நிறுவனம் அன்னிய நேரடி முதலீடு செய்வதற்கு முறைகேடாக அனுமதி பெற்றதாக சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தன. இந்த வழக்குகளில் முன்ஜாமீன் கேட்டு இருவரும் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி சைனி, சிதம்பரம், கார்த்தி ஆகியோருக்கு முன்ஜாமின் வழங்கினார். , இருவரும் வெளிநாடு செல்லக்கூடாது என்றும் ரூ.1 லட்சம் பிணைத்தொகை செலுத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார்.

திகாரில் பிறந்தநாள்- அமித் ஷா ஆசை நிறைவேறியது

இப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்தபோது 2010 ஆண்டில் சொரபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில் அவரைக் கைது செய்தார் அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம். அந்த கணக்கைத் தீர்க்கும் வகையில் அதே வகையில் சிபிஐ மூலம் இப்போது ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சிதம்பரம் கைதானது முதல் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி ப.சிதம்பரத்தின் 75 ஆவது பிறந்தநாள். ‘அப்பாவின் பிளாட்டினம் ஜூப்ளி பிறந்தநாள் வருது. கூடவே நான் எம்பியாகி வரும் முதல் பிறந்தநாள். அதனால ரொம்ப கிராண்டா சிலிபிரேட் பண்ணணும்’ என்று தன் தந்தை ப.சிதம்பரத்தின் 75 ஆவது பிறந்தநாளைக் கொண்டாட கடந்த ஒரு மாதமாகவே திட்டம் போட்டு வந்திருக்கிறார் கார்த்தி சிதம்பரம். இதற்காக முன்னேற்பாடுகளையும் செய்து வந்தார்.

ஆனால் இன்று சிபிஐ நீதிமன்றம் செப்டம்பர் 19 ஆம் தேதி வரை திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டதன் மூலம், செப்டம்பர் 16 ஆம் தேதி சிதம்பரத்தின் 75ஆவது பிறந்தநாள் திகார் சிறையில் கழியப் போகிறது. அதற்குள் எப்படியாவது ஜாமீனில் வெளியே வர வைக்க சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி!


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால்தானே அபராதம்: வைரல் வீடியோ!


சிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா


பாஜகவில் ரஜினி கேட்கும் பதவி!


வியாழன், 5 செப் 2019

அடுத்ததுchevronRight icon