மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 15 ஜன 2021

ஆட்டோ, டூவீலர் விலையை விட அதிகமாகும் அபராதம் !

ஆட்டோ, டூவீலர் விலையை விட அதிகமாகும் அபராதம் !

திருத்தப்பட்ட மோட்டார் வாகன தண்டனைச் சட்டம் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது, ஆர்.சி புக், லைசென்ஸ் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, மதுபோதையில் வாகனம் ஓட்டுவது போன்ற பல்வேறு சாலை விதிமீறல் குற்றங்களுக்காக விதிக்கப்படும் அபராதத் தொகை பன்மடங்கு உயர்த்தப்பட்டது. இந்த சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தபின்னர் பல்வேறு வாகன ஓட்டிகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையைப் பார்த்து அதிர்ந்து போயுள்ளனர்.

டில்லியை அடுத்த குர்கான் பகுதியில் தினேஷ் மதன் என்பவருக்கு அம்மாநிலப் போக்குவரத்து காவல்துறையினர், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பயணித்தற்காக 5 ஆயிரம் ரூபாய், ஆர்.சி புக் இல்லாமல் சென்றதற்காக 5 ஆயிரம் ரூபாய், வாகன காப்பீடு இல்லாததிற்காக 2 ஆயிரம் ரூபாய், சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதற்காக 10,000 ரூபாய் மற்றும் ஹெல்மெட் அணியாததற்காக 1000 ரூபாய் என மொத்தம் இருபத்துமூன்றாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இது குறித்து தினேஷ் கூறும் போது ‘நான் ஓட்டி வந்த வாகனத்தை விற்றாலே 15000 ரூபாய் தான் எனக்குக் கிடைக்கும். ஆனால் எனக்கு 23 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது அநியாயமாகத் தெரிகிறது’ என்று கூறியிருந்தார்.

இதே போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மதுபோதையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வந்த வெங்கடேசன் என்பவருக்கு 16000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பஞ்சாப் மாநிலம் குருகிராமில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளின் கீழ் 32 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒடிசா மாநிலத்தில், உரிய ஆவணங்கள் இல்லாமல் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு அம்மாநிலப் போக்குவரத்து காவல்துறையினர், 47 ஆயிரம் ரூபாய் அபாரதம் விதித்துள்ளனர். அதிகபட்சமாக ஹரியானா மாநிலம் குருகிராமில், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக டிராக்டர் ஓட்டுநர் ஒருவருக்கு 59 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சம்பவங்களால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகத்தில் பல காவலர்கள் அபராதம் விதிப்பதால் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவி வந்தது. அபராதம் விதிக்க வேண்டிய அதிகாரிகள் யார் என்ற கேள்வி எழுந்து வந்தது. இந்தநிலையில் இதற்கு தீர்வு காணும் விதத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. சிறப்பு நிலை துணை ஆய்வாளருக்கு நிகரான போக்குவரத்து அதிகாரிகளே அபராதம் வசூலிக்கலாம் என்றும் சிறப்பு நிலை துணை ஆய்வாளருக்கு குறைவான அதிகாரம் கொண்ட போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் விதிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

25000 ரூபாய்க்கு வாங்கிய ஆட்டோவிற்கு 47000 ரூபாய் அபராதம் விதிப்பதும், 15000 ரூபாய் மதிப்புடைய இருசக்கர வாகனத்திற்கு 23000 ரூபாய் அபராதம் விதிப்பதும் எந்த விதத்தில் நியாயமாகும் என்று பல தரப்பினரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி!


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால்தானே அபராதம்: வைரல் வீடியோ!


சிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா


பாஜகவில் ரஜினி கேட்கும் பதவி!


வியாழன், 5 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon