மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

நீதிபதிகள் தேர்வில் சீனியாரிட்டி புறக்கணிப்பு: நீதிபதி பானுமதி

நீதிபதிகள் தேர்வில் சீனியாரிட்டி புறக்கணிப்பு: நீதிபதி பானுமதி

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வில் சீனியாரிட்டி புறக்கணிக்கப்படுவதாக உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி ஆர்.பானுமதி குற்றம்சாட்டியுள்ளார்.

நீதிபதிகள் நியமனம் தொடர்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி கொலிஜியம் கூட்டம் நடந்தது. அதில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக இருக்கும் ராமசுப்பிரமணியம், ரவீந்திர பட், கிருஷ்ணா முராரே, ரிஷிகேஷ் ராய் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டனர்.

ஆனால், கொலிஜியத்தின் பரிந்துரையில் சீனியாரிட்டி கருத்தில் கொள்ளப்படவில்லை என்று இந்தியாவின் 6ஆவது மூத்த நீதிபதியான ஆர்.பானுமதி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இந்திய அளவில் நீதிபதிகள் சீனியாரிட்டி அடிப்படையில் இமாச்சல பிரதேச தலைமை நீதிபதி ராமசுப்பிரமணியன் 43ஆவது இடத்தில் இருக்கிறார். சீனியாரிட்டி அடிப்படையில் 3ஆவது இடத்தில் உள்ள மணிப்பூர் தலைமை நீதிபதி ராமலிங்கம் சுதாகரை உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு ஏன் பரிந்துரை செய்யவில்லை” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நீதிபதி ராமசுப்பிரமணியம் 2006ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2009இல் நிரந்த நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார். அதன்பிறகு தெலங்கானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றலாகிய ராமசுப்பிரமணியம், கடந்த ஜூன் மாதம் இமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார். ஆனால் ராமசுப்பிரமணியத்திற்கு முன்பே 2005 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட ராமலிங்கம் சுதாகர், 2007 இல் நிரந்த நீதிபதியானார். கடந்த 2018 மே மாதம் முதல் மணிப்பூர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.

நீதிபதி பானுமதி கொலிஜியம் குழுவில் உறுப்பினராக இல்லை. ராமசுப்பிரமணியம் பணியாற்றிய சென்னை உயர் நீதிமன்றத்தில்தான் பானுமதியும் பணியாற்றினார் என்பதால் அவரிடம் ராமசுப்பிரமணியன் நியமனம் குறித்து கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் பானுமதி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். பானுமதி, ராமசுப்பிரமணியம், ராமலிங்கம் சுதாகர் மூவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக பணியாற்றியவர்கள் என்பதும் நினைவுக்கூறத்தக்கது.

இதேபோல கொலிஜியத்தின் முடிவுக்கு கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி!


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால்தானே அபராதம்: வைரல் வீடியோ!


சிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா


பாஜகவில் ரஜினி கேட்கும் பதவி!


வியாழன், 5 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon