மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

சினிமா சங்கங்களை மிரட்டுகிறதா ஆலோசனை குழு?

 சினிமா சங்கங்களை மிரட்டுகிறதா ஆலோசனை குழு?

தமிழ் சினிமா சங்கங்களும் அத்துமீறல்களும் - 3

இராமானுஜம்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமனம் செய்யப்பட்ட பிறகு அவருக்கு சங்கத்தின் அன்றாடப் பணிகளில் ஆலோசனை கூறுவதற்காக நியமிக்கப்பட்ட ஒன்பது உறுப்பினர்களில் ஒருவரான டி.ராதாகிருஷ்ணன் அதில் உடன்பாடு இல்லாத காரணத்தினால் வெளியேறினார்.

“தொடக்கத்திலேயே நான் ராஜினாமா செய்து விட்டேன் காரணம் எந்த ஒரு முடிவையும் அதிகாரபூர்வமாக அமுல் படுத்த முடியாது. மேலும் வரம்பு மீறிய செயல்பாடுகள் இருக்கும் என்பதாலும் விலகி வந்தேன். அது உண்மை என்பது தற்போதுநிரூபணமாகியிருக்கிறது” என்கிறார் ராதாகிருஷ்ணன்.

சங்கத்திற்கு தனி அதிகாரி நியமனம் செய்யப்பட்டதற்கு பின்னால் ஆலோசனைக்குழு உறுப்பினர்களான அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஜேஎஸ்கே சதீஷ் ஆகிய இருவரும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மொத்த நிர்வாக நடைமுறைகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். இவர்கள்தான் சங்கத்தின் அன்றாட பணிகளை நிர்வகிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கினார்கள் என்கின்றனர்.

இவர்கள் முயற்சியில் திருச்சி ஏரியா விநியோகப் பகுதியில் ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படம் திரையிடுவது சம்பந்தமாக ஏற்பட்ட சிக்கலை சுமுகமாக பேசி தீர்க்க முடியாமல் அதனை இறுதிவரை விஸ்வரூப பிரச்சனையாக மாற்றி படம் வெளியாவதில் இறுதிவரை பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தினார்கள்.

கோமாளி படத்தை திரையிடுவதற்கு இடையூறு செய்தால் அப்பகுதியில் இருக்கும் திரையரங்குகள் தாங்கள் விற்பனை செய்யும் டிக்கெட்டுகளுக்கு முறையாக ஜி.எஸ்.டி ,கேளிக்கை வரியை செலுத்துகிறார்களா என்பதை கண்காணித்து அரசுக்கு புகார் செய்வோம் என்று மிரட்டுகிற தொனியில் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிடப்பட்டதாக கூறுகின்றனர் திருச்சி ஏரியா திரையரங்கு உரிமையாளர்கள்.

கோமாளி படத்தை திரையிடுவதற்கு திரையரங்குகள் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் எந்தத் தவறுகளையும் செய்துகொள்ளலாமா என்கிற கேள்வி, அப்போது திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் எழுப்பப்பட்டது.

படத்தை வெளியிடுவதற்கு செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களை நேரடியாக சந்தித்து ஜேஎஸ்கே சதீஷ் புகார் மனு அளித்ததுடன் எதுவாக இருந்தாலும் அரசை நேரடியாக என்னால் தொடர்பு கொள்ள முடியும் என்கிற பிம்பத்தை உருவாக்கினார்.

ஆனால் திருச்சி திரையரங்கு உரிமையாளர்கள் தங்களது முடிவில் இறுதிவரை உறுதியாக இருந்தனர். கோமாளி படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிடாவிட்டால் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்கிற காரணத்தினால் திருச்சி ஏரியாவில் மூத்த விநியோகஸ்தர் பரதன் பிலிம்ஸ் உரிமையாளர் விஸ்வநாதன் திரையரங்க உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி குறிப்பிட்ட ஒரு தொகையை மிஸ்டர் லோக்கல் படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு வழங்குவதாக உறுதியளித்த பின்னரே கோமாளி படம் திருச்சி ஏரியாவில் ரிலீஸானது.

ஆனால் அதற்கு நாங்கள் தான் காரணம் என்று ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜேஎஸ்கே சதீஷ் வெளியிட்ட ஆடியோ பதிவு திரையரங்கு உரிமையாளர்களால் காமெடியாக பார்க்கப்பட்டது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டது, ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டது இவர்களுக்கு இருக்கக்கூடிய அதிகார வரம்பு, பொறுப்பு சம்பந்தமாக பத்திரிக்கையாளர்களும் தயாரிப்பாளர்களும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தகவல் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்கள். அவ்வாறு விண்ணப்பித்தவர்களிடம் இது சம்பந்தமாக மேற்கொண்டு எந்தவிதமான முயற்சிகளிலும் ஈடுபடவேண்டாம் என்று ஆலோசனைக் குழு, மக்கள் தொடர்பாளர்கள் சார்பாக மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சினிமாத்துறை என்பதால் அது சம்பந்தப்பட்டவர்களை சந்திப்பதற்கு அமைச்சர்கள் விரைவில் அனுமதி அளிப்பதால் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அரசுடன் நெருக்கமாக இருப்பதாக ஒரு பிம்பத்தை ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜேஎஸ்கே சதீஷ் ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

அதன் விளைவாக அவரது செயல்பாட்டில் அதிருப்தி அடைந்த பிரம்மாண்ட தயாரிப்பாளர் ஒருவர் அமைச்சரிடம் தனக்கு இருக்கும் தனிப்பட்ட நட்பின் அடிப்படையில் புகார் கூறியிருக்கிறார். அது சம்பந்தமாக விசாரிக்கிறேன் என்று கூறிய அமைச்சர் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஒருவரிடம் இதுபற்றி விசாரித்திருக்கிறார். அவரிடம் அப்போது மழுப்பலாக பதில் சொல்லி சமாளித்தவர் புகார் கூறிய தயாரிப்பாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘நான் யார் தெரியுமா, நானும் அமைச்சரும் உறவினர்கள் என்னை உங்களால் எதுவும் செய்ய முடியாது’ என்று கூறியிருக்கிறார். இதனைக் கேட்ட பிரம்மாண்ட தயாரிப்பாளர் அதிர்ந்து போய் ஆலோசனைக் குழு உறுப்பினர் என்ற கோதாவில் சங்கத்தில் அமர்ந்துகொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார் என்று சக தயாரிப்பாளர்களிடம் கூறியதுடன் அவர்மீது புகார் அளிப்பதற்கும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பரபரப்பாக படத் தயாரிப்பில் உள்ள எந்த தயாரிப்பாளரும் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வருவதுமில்லை, அவர்கள் சொல்வதை கேட்பதும் இல்லை.

படம் எடுக்கிற தயாரிப்பாளர் படம் வெளியீட்டிற்கு முன்னால் அதனை வணிகரீதியாக வெற்றிபெற செய்வதற்கு ஊடகங்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் தேவை என்பது தொடர்ந்து படம் தயாரித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களுக்கு தெரியும்.

திரைப்படத்தை என்ன பட்ஜெட்டில் தயாரிக்க வேண்டும், அதனை என்ன விலைக்கு விற்க வேண்டும், அதனை எப்படி வணிகமயமாக்க வேண்டும் என்பது அப்படத்தின் தயாரிப்பாளர் சம்பந்தப்பட்ட தனி உரிமை.

இதிலும் தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் குழு உறுப்பினர் என்கிற கோதாவில் ஜேஎஸ்கே சதீஷ் அம்மா கிரியேஷன்ஸ் சிவா ஆகிய இருவரும் தலையிட்டனர்.

திரைப்படம் சம்பந்தமான செய்திகளை ஊடகங்கள் வாயிலாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் பிரதான பணி செய்பவர்கள் பத்திரிகைத் தொடர்பாளர்கள் எனக்கூறப்படும் பிஆர்ஓக்கள். இவர்களுக்கென்று தனி சங்கம் ஒன்று உள்ளது. சங்கத்தின் நிர்வாகிகளையும் உறுப்பினர்களையும் அழைத்து கூட்டமொன்றை தயாரிப்பாளர் சங்கத்தில் இவர்களிருவரும் நடத்தியுள்ளனர்.

ஒரு படத்தின் செய்தியை ஊடகங்கள் வாயிலாக தயாரிப்பாளர்களுக்கு நட்சத்திரங்களுக்கு இயக்குநர்களுக்கு தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சாதகமாக கொண்டு செல்வது எப்படி என்று பிஆர்ஓக்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.

ஒரு படம் தொடங்கும் பொழுது தயாரிப்பாளருடன் முதல் ஆளாக இணைவது பிஆர்ஓ. அந்த படம் வெளியாகி வெற்றி தோல்வி எதுவாக இருந்தாலும் அப்படத்தில் நடித்த பணிபுரிந்த அனைவரும் வேறு படங்களுக்கு பணியாற்ற சென்றுவிடுவார்கள். ஆனால் தயாரிப்பாளருடன் இறுதிவரை பயணிக்க கூடியவர் பிஆர்ஓ மட்டுமே. தயாரிப்பாளரின் பொருளாதார நிலைமை சூழலைப் புரிந்துகொண்டு பணிபுரிவார்கள்.

தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற பிஆர்ஓ குழுக்கூட்டத்தில் இனிவரும் காலங்களில் நாங்கள் சொல்கிற அடிப்படையில் தான் பத்திரிக்கையாளர் சந்திப்பு பத்திரிக்கையாளர் காட்சி போன்றவை நடத்தப்பட வேண்டும் என்று அறிவுரை கூறப்பட்டது. இது சாத்தியமில்லாத ஒன்று என்று கூறப்பட்டாலும் நாங்கள் சொல்வதை அமல்படுத்துங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

படத்தின் வெற்றி தோல்வியில் ஏற்படுகிற அனைத்து விஷயங்களையும் எதிர்கொள்ளப்போவது தயாரிப்பாளர் மட்டுமே. அவரது தயாரிப்பை வணிகமயமாக்குவது அதற்கு ஊடகங்களை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதை தயாரிப்பவர் மட்டுமே தீர்மானிக்க முடியும். இதில் அதிகாரமற்ற ஆலோசனைக்குழு உறுப்பினர் தலையிடுவது அதிகாரம் செய்வது நியாயமற்றது என்கிற அதிருப்தி குரல்கள் தயாரிப்பாளர்கள் மத்தியில் எழுந்தது.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றும் கூறப்படும் பத்திரிகைகள் அதில் பணியாற்றும் பத்திரிக்கையாளர்கள் பிரதம மந்திரி முதல் சாமானியர் வரை பிரச்சனையின் அடிப்படையில் அவர்களிடம் கேள்வி கேட்கும் உரிமை உள்ளவர்கள் அவர்களையே கட்டுப்படுத்தக்கூடிய அத்துமீறிய செயலை ஆலோசனைக்குழு அமல்படுத்த பிஆர்ஓக்களை நிர்பந்தம் செய்தது.

இச்செயல் பத்திரிக்கையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அதற்கு எதிர்வினையாற்றாமல் ஆலோசனைக் குழு உறுப்பினர்களிடம் சரணடைந்தது எதிர்பாராத திருப்பம்.

பத்திரிகையாளர் அடையாள அட்டையில் உள்ள தனிஅதிகாரி கையெழுத்து உண்மையானதா?

ஆலோசனைக் குழு உறுப்பினரிடம் தினசரி பத்திரிகையாளர்கள் போட்ட தனி டீல்.

நாளை

சிங்கம் நடமாடிய காட்டில் நரிகள் நாட்டாமை!


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி!


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால்தானே அபராதம்: வைரல் வீடியோ!


சிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா


பாஜகவில் ரஜினி கேட்கும் பதவி!


வியாழன், 5 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon