புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின்படி, போக்குவரத்து விதிமீறல்களுக்கு முன்பு இருந்த அபராதத் தொகை, இப்போது பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டம், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி சாலை ஒழுங்குமுறை விதிகளை மீறினால் குறைந்தபட்ச அபராதம் ரூபாய்.100இல் இருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு ரூ.200இல் இருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது, அதிகாரிகளின் உத்தரவுகளை மீறினால் 500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாகவும், லைசென்ஸ் இல்லை என்றால் ரூ.5,000 அபராதமும், அதிவேகமாக ஓட்டினால் ரூ,5,000 அபராதமும், மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000, சீட் பெல்ட் அணியாததற்கு ரூ.1,000, வாகனத்துக்கு பர்மிட் இல்லை என்றால் ரூ.10,000, சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் உரிமையாளருக்கு ரூ. 25,000 அபராதம் மற்றும் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை என சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டது.
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் போக்குவரத்து போலீசார், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அபராதம் வசூலித்து வருகின்றனர். டெல்லியைச் சேர்ந்த தினேஷ் மதன் என்பவருக்கு மட்டும் பல்வேறு வகைகளில் சாலை விதிகளை மீறியதாக ரூ.23,000 அபராதம் தொகை விதித்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டு மக்களிடையே போக்குவரத்து போலீசார் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒருபக்கம் என்றால், திருப்பூரில் காரில் பின் இருக்கையில் அமர்ந்து சென்றவர்கள் ஹெல்மெட் அணியவில்லை என அந்த காரின் உரிமையாளருக்கு இ-சலான் அனுப்பப்பட்டுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த பனியன் கம்பெனி உரிமையாளர் செல்வக்குமார் தனது குடும்பத்துடன் பொள்ளாச்சி சென்றுவிட்டுத் திரும்பியுள்ளார். தாராபுரம் சாலையில் வந்துகொண்டிருந்தபோது செல்வக்குமார் செல்லுக்கு திருப்பூர் போக்குவரத்து போலீசாரிடம் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் பின்னால் அமர்ந்திருந்தவர் ஹெல்மெட் அணியவில்லை. எனவே ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து செல்வக்குமார் காவல் துறையில் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.
இந்தச் சூழலில், ஹரியானா ஐபிஎஸ் அதிகாரி பங்கஜ் நயின் தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் ஹெல்மெட் அணியாத பலர் அபராதத் தொகை கட்ட வேண்டிய நிர்பந்தத்தைத் தவிர்க்க வண்டியை ஓட்டி செல்லாமல், தள்ளிக்கொண்டு செல்லும் வகையில் உள்ளது. அந்த வீடியோவில் ”ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டினால் குற்றம். ஆனால், நடந்து சென்றால் அல்ல” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
This is hilarious.
— Pankaj Nain IPS (@ipspankajnain) September 3, 2019
Innovative ways to avoid traffic challans
☺️☺️
Pls follow traffic rules to avoid such situations #MotorVehiclesAct2019 pic.twitter.com/hh7c1jWC80
பங்கஜ் நயின் அந்தப் பதிவில், இது மிகவும் வேடிக்கையானது. அபராதத் தொகையைத் தவிர்ப்பதற்கான புதுமையான வழிகள். ஆனால், இதுபோன்ற இக்கட்டான சூழலைத் தவிர்க்கத் தயவுசெய்து சாலை விதிகளைப் பின்பற்றுங்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறார். இந்தப் பதிவைத் தொடர்ந்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க
தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்
டிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ
தினகரன் -ஸ்டாலின் பப்பீஸ் டீல் : அதிமுகவின் தேர்தல் திட்டம்!!
‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி