மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

நண்பன் வெளிநாடு செல்வதை தடுக்க வெடிகுண்டு மிரட்டல்!

நண்பன் வெளிநாடு செல்வதை தடுக்க வெடிகுண்டு மிரட்டல்!

ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் அளித்த பதில் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கடந்த 3ஆம் தேதி ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இமெயில் மூலம் வந்த மிரட்டலில், ”நாளை நான் வெடிகுண்டு மூலம் விமான நிலையத்தைத் தகர்க்கப் போகிறேன்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அனுப்பியவரின் தகவலாக சாய்ராம் என்றவரின் மின்னஞ்சலும், மொபைல் எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மேலும், சிறப்புக் குழுக்கள் வரவழைக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையில், அவர் அனுப்பிய இமெயில் முகவரியை வைத்து, ஐபி அட்ரஸ் மூலம் அந்த மர்ம நபரை தேடி வந்தனர்.

இதையடுத்து சஷிகாந்த் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. சஷிகாந்த் போலீசாரிடம், ”நான் வேலை இல்லாமல் இருக்கிறேன். ஆனால் எனது நண்பர் சாய்ராம் மேல் படிப்புக்காகக் கனடா செல்ல தயாராகினான். அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பயணத்தைத் தடுக்க நினைத்தேன்” என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாகவும் கனடா தூதரகத்துக்கு சாய்ராம் குறித்து தவறான தகவலை அனுப்பியதாகவும் தெரிவித்திருக்கிறார் சஷிகாந்த்.

அவரை ஹைதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர், பின்னர் காவல் நிலையத்தில் சஷிகாந்தை சந்தித்த சாய்ராம், அவருக்கு ரூ.500 கொடுத்துவிட்டு போய்வருவதாகத் தெரிவித்து, அங்கிருந்து சென்றுள்ளார். நண்பன் மீதான பொறாமையால் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி!


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால்தானே அபராதம்: வைரல் வீடியோ!


கமலைக் குறிவைக்கிறாரா மதுமிதா?


சிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா


வியாழன், 5 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon