மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

எடப்பாடிக்கு பாராட்டு விழா: ஸ்டாலின்

எடப்பாடிக்கு பாராட்டு விழா: ஸ்டாலின்

வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு முதலீடுகளை கொண்டுவந்தால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தத் தயாராக இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும், திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான வெள்ளக்கோயில் சாமிநாதன் இல்லத் திருமணம் திருப்பூரில் இன்று (செப்டம்பர் 5) நடைபெற்றது. அதில் திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக பாஜக முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், “கலைஞருக்கு பிறகு யார் என்று வரும்போது தளபதியாக மட்டுமல்லாமல் எங்களையெல்லாம் வீழ்த்திய வெற்றித் தளபதியாக ஸ்டாலின் உள்ளார். அதிலிருந்து நான் ஒன்றைத்தான் எடுத்துக்கொள்கிறேன். கலைஞரைப் போல நாங்கள் இன்னும் உழைக்க வேண்டியுள்ளது” என்று புகழ்ந்தார்.

அதனைத் தொடந்து நிறைவுரையாற்றிய ஸ்டாலின், “பாஜகவின் முன்னணி தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசும்போது மனம் திறந்து பேசினார். பாஜகவை திமுக வீழ்த்திவிட்டதாகக் கூறினார். அதனை நான் சிறிது திருத்திச் சொல்கிறேன். பாஜகவை திமுக வீழ்த்தவில்லை. தோற்கடித்திருக்கிறது. திமுக கூட அல்ல மக்கள்தான் தோற்கடித்திருக்கிறார்கள்” என்று சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பதிலளித்தார்.

தொடர்ந்து முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்துப் பேசிய ஸ்டாலின், “தமிழகத்தில் 220 நிறுவனங்கள் தொழில் தொடங்கிவிட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டில் சென்று பேசியுள்ளார். எந்த ஊரில் எந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது என்று வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று சட்டமன்றத்திலும் அதன்பிறகும் தொடர்ந்து பேசியுள்ளேன். இரண்டு முறை நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடுகளில் 5 லட்சம் கோடி முதலீடு வந்துள்ளதாக அறிவித்துள்ளனர். அவை எங்கே என்றே இன்னும் தெரியவில்லை.

தற்போது அமெரிக்கா சென்று 2780 கோடி ரூபாய்க்கு முதலீடு பெற்றிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. முதலீடுகளை வந்தால் மகிழ்ச்சிதான். அதனை பாராட்டுகிறோம். முதலீடுகள் தமிழகத்திற்கு வரும் என்றால் திமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுக் கூட்டம் நடத்துவதற்கு தயாராக உள்ளோம். ஆனால், அது வருமா?” என்று கேள்வி எழுப்பினார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி!


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால்தானே அபராதம்: வைரல் வீடியோ!


கமலைக் குறிவைக்கிறாரா மதுமிதா?


சிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா


வியாழன், 5 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon