மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

2.5 லட்சம் கம்பெனிகள் நீக்கம்: நிர்மலாவுக்கு சரமாரி கேள்விகள்!

2.5 லட்சம் கம்பெனிகள் நீக்கம்: நிர்மலாவுக்கு சரமாரி கேள்விகள்!

இந்திய கம்பெனிகள் சட்டத்தின் 248(5) பிரிவின் கீழ் அண்மையில், இரண்டரை லட்சம் நிறுவனங்களை கம்பெனிகளுக்கான பதிவேட்டில் இருந்து நீக்கி கம்பெனிகளுக்கான பதிவாளர் உத்தரவிட்டிருந்தார். இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி.யான டி.கே. ரங்கராஜன் நேற்று (செப்டம்பர் 4) கடிதம் எழுதியிருக்கிறார். அதில் சரமாரியாக கேள்விகளைத் தொடுத்திருக்கிறார்.

அந்தக் கடிதத்தில், “கம்பெனிகள் சட்டத்தின்படி இதுபோன்ற உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பாக பதிவாளர் அந்த நிறுவனத்திற்கு வந்து சேர வேண்டிய தொகைகள் அனைத்தையும் பெறுவதற்கும், அந்த நிறுவனத்தின் கடன்கள் மற்றும் இதர பொறுப்புகள் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கான தொகை ஆகியவற்றுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.

இவ்வாறிருக்கும் நிலையில் ஒரேயடியாக இரண்டரை லட்சம் நிறுவனங்களை பட்டியலில் இருந்து அவசர அவசரமாக நீக்கியுள்ளார் பதிவாளர். அப்படியென்றால் அந்த நிறுவனங்களுக்கு வந்து சேரவேண்டிய தொகை மற்றும் அதன் கடன்களையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதற்கான தொகை ஆகிய ஏற்பாடுகள் குறித்து அவர் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற 248(6)வது பிரிவிற்கு உகந்த வகையில் நடந்து கொள்ளவில்லை என்பதை மிகத் தெளிவாகவே எடுத்துக் காட்டுகிறது.

கம்பெனிகள் சட்டத்தின் 248(5)வது பிரிவின் கீழ் கம்பெனிகளுக்கான பதிவாளர் ஒரு நிறுவனத்தின் பெயரை பட்டியலில் இருந்து நீக்குவதற்கு முன்பாக அந்த நிறுவனத்தின் சொத்துக்களை பாதுகாப்பது, கடன்களை அடைப்பதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றுக்கான பொறுப்பு கொண்டவராக பதிவாளர் இருக்கிறார் என்பதை 248(6)வது பிரிவு விரிவாகவே தெரிவித்துள்ளது.

இப்போது கம்பெனிகளுக்கான பதிவாளர் ஒரேயடியாக சுமார் இரண்டரை லட்சம் நிறுவனங்களை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளார். இதன் விளைவுகள் படுமோசமானதாக உள்ளன. இதற்கு அவரே பொறுப்பேற்பாரா?” என்று கேட்டுள்ள டி.கே. ரங்கராஜன்,

“அதிகமான காலத்தை கோரும்படியான செயல்முறையை மேற்கொள்ளாமல் இந்த நிறுவனங்களிடமிருந்து பெறப்பட வேண்டிய வரிகளை எவ்வாறு வசூலிக்க முடியும்? அரசு நிர்வாகிகள் இந்த அதிகமான நேரத்தை செலவு செய்வதில் ஈடுபட வேண்டியிருக்கும் என்பதோடு, அரசின் கருவூலத்திற்கு மிகப்பெரும் இழப்பையும் இது ஏற்படுத்தாதா?

இந்த நிறுவனங்களிடமிருந்து வரவேண்டிய ஜிஎஸ்டியின் நிலை என்னவாக இருக்கும்? இவற்றிடமிருந்து ஜிஎஸ்டியை வசூலிக்க திட்டமிட்ட ஏற்பாடுகள் ஏதாவது உருவாக்கப்பட்டுள்ளதா?

இத்தகைய நிறுவனங்களை பட்டியலில் இருந்து நீக்குவதன் மூலம் தவறான செயல்களில் ஈடுபட்ட இயக்குநர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ள இது உதவாதா? தவறான செயல்களில் ஈடுபட்ட இத்தகைய இயக்குநர்களின் மீது அரசு எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கவிருக்கிறது?

இறுதியாக, இந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட வங்கிகள் இதுகுறித்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமானால், தான் மேற்கொண்ட இந்த செயல் குறித்து கம்பெனிகளின் பதிவாளர் ரிசர்வ் வங்கிக்கு முறையாகத் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதா?” என்று கேள்விகளைத் தொடுத்துள்ளார் டி.கே. ரங்கராஜன்.

மேலும், “இந்த நடவடிக்கையின் பின்விளைவுகளை சமாளிக்க உங்கள் அமைச்சகம் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் ஒரு புறத்தில் இந்த நிறுவனங்களிடமிருந்து பெறப்பட வேண்டிய நிலுவைத் தொகைகளை அதிகாரிகள் பெற முடியும் என்பதோடு தவறாகச் செயல்பட்ட இயக்குநர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க அனுமதிக்காமல் இருக்கவும் முடியும்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார் டி.கே. ரங்கராஜன்.

வியாழன், 5 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon