மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

டி.கே சிவகுமார் கைது: கர்நாடகாவில் வலுக்கும் போராட்டம்!

டி.கே சிவகுமார் கைது: கர்நாடகாவில் வலுக்கும் போராட்டம்!

பண மோசடி வழக்கில் கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமாரை அமலாக்கத் துறை கைது செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகாவில் காங்கிரஸ் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அம்மாநிலத்தின் ராம்நகர் பகுதியில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக முன்னாள் அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவகுமார், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து போராட்டம் நடைபெறும் என்று மாநில காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் அறிவித்திருந்தார், அதன்படி நேற்று முதல் கர்நாடகாவில் பல இடங்களில் அமலாக்கத் துறைக்கு எதிராக காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூரு, ராம்நகர், மண்டியா, பெல்லாரி, தும்கூரு உள்ளிட்ட இடங்களில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இன்றும் தொடர்கிறது. இதனால் ராம்நகர் பகுதியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் சாலைகளில் செல்லும் வாகனங்கள் மீது கல் வீசி தாக்குதலும் நடத்தியிருக்கின்றனர். கனகபுரா தொகுதியில் அரசுப் பேருந்துகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியிருக்கின்றனர். போலீசாருக்கும் . போராட்டக்காரர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது.இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக நூற்றுக்கணக்கானவர்களை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

டி.கே. சிவகுமாரை வரும் 13ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்கச் சிறப்பு நீதிபதி அஜய் குமார் அனுமதி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 5 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon