காலை வாரும் ஹாரர், தப்பிப்பாரா நயன்?

நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள புதிய படமும் ஹாரர் பாணியில் உருவாகவுள்ளது.
தமிழ் சினிமாவில் வசூல் முக்கியத்துவமுள்ள நடிகர்களான ரஜினி, விஜய் ஆகியோர் நடிக்கும் படங்கள் ஒரே நேரத்தில் தயாராகிவருகின்றன. இந்த இரு படங்களிலும் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தாலும் பிரதான கதாபாத்திரத்தில் நடிப்பதையும் விடாமல் தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் இவர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
ஆண்ட்ரியா, சித்தார்த் இணைந்து நடித்த அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இந்தப் புதிய படத்தை இயக்கவுள்ளார். அவள் திரைப்படம் ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்த நிலையில் இந்தப் படமும் அதே பாணியில் உருவாக உள்ளது. இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் லுக் கென்னி நடிக்கிறார். இவர் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான ஸேக்ரட் கேம்ஸ் வெப்சீரிஸில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும், நாய் ஒன்று திரைக்கதையில் முக்கிய இடம்பெற்றுள்ளது.
பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகளுக்குப் பெரும்பாலும் ஹாரர் த்ரில்லர் படங்களே அமைகின்றன. நயன்தாராவும் இந்த ஜானரில் பல படங்களில் நடித்திருந்தாலும் அறம், கடந்த ஆண்டு வெளியான கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தனது ஹிட் லிஸ்ட்டை அதிகப்படுத்தினார். ஆனால் இந்த ஆண்டு அவர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ஐரா, கொலையுதிர் காலம் ஆகிய இரு ஹாரர் படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பு பெறவில்லை.
இந்த நிலையில் மிலிந்த் ராவ் இயக்கத்தில் மீண்டும் ஹாரர் படத்தில் நடிக்கும் நயன்தாரா அதை வெற்றிப் படமாக்குவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க
தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்
டிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ
தினகரன் -ஸ்டாலின் பப்பீஸ் டீல் : அதிமுகவின் தேர்தல் திட்டம்!!
‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி