மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

எப்படி இருக்கிறது ‘இந்திய’ காஷ்மீர்?

எப்படி இருக்கிறது ‘இந்திய’ காஷ்மீர்?

முகேஷ் சுப்ரமணியம்

சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்குப் பின் ஒரு மாத காலத்தை கடந்த இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட ஜம்மு - காஷ்மீர் எப்படியிருக்கிறது?

நாம் வசிக்கும் தெரு, மக்களின் அன்றாட செய்கைகளால் விழிப்புற்று, தெருவாசிகளின் வாழ்வியலுக்குள் இயங்கி அவர்களாலேயே இரவு கண்ணுறங்குகிறது. எப்போதும் மக்களின் மூச்சுக்காற்றையே சுவாசித்துக் கொண்டிருக்கும் தெரு, திடீரென சீருடை அணிந்த வீரர்கள், ராணுவ வாகனங்கள், துப்பாக்கிகள், வேலிகள், சோதனை இடுகைகள் என நிரம்பி வழியத் தொடங்கினால் என்னவாகும்?

1990ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை (AFSPA) இந்தியா அமலுக்கு கொண்ட வந்த பிறகு, காஷ்மீரின் தெருக்கள் ராணுவத்தினரால் விழிப்படைந்து, அவர்களாலேயே கண்ணுறங்காமல் ஒவ்வொரு இரவும் விழித்துக் கிடக்கின்றது.

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர், காஷ்மீர் தெருக்களில் ராணுவத்தின் நெடி இன்னும் அடர்த்தியாகவும் காஷ்மீர் பூர்வ குடிகளுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் வகையிலும் ’வளர்ச்சி’ அடைந்திருக்கிறது.

ராணுவத்தை பார்க்கும் போதெல்லாம் காஷ்மீர் மக்கள் தொந்தரவுக்கு உள்ளாகிறார்கள். இந்தியா தங்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்ததாக காஷ்மீரிகள் குரல் எழுப்புகின்றனர். இளம் காஷ்மீரிகளோ, இடைக்காலத்திற்குள்(medieval times) தள்ளப்பட்டதாக உணர்கிறோம் என்கின்றனர். எதிர்காலம் குறித்த அச்சம் நாளுக்கு நாள் அவர்கள் மனதில் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தான ஆர்டிகள் 370, ஆர்டிகள் 35A-ஐ நீக்கியது. இந்த இரண்டு அரசியலமைப்பு விதிகளும், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் சுயாட்சிக்கு உத்தரவாதம் அளித்தன. மேலும், காஷ்மீர் மாநிலத்தின் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு நிலத்தின் மீது சொந்த உரிமையை இச்சட்டம் காஷ்மீர் மக்களுக்கு வழங்கியது. ஆனால், இச்சட்டத்தை விலக்கியவுடன் காஷ்மீர் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன.

இந்த அறிவிப்பை அமித் ஷா பாராளுமன்றத்தில் அறிவிப்பதற்கு முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் ஜம்மு காஷ்மீரில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தன. அதிகப்படியான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். ஜூலை மாத இறுதியில் மத்திய ஆயுத காவல் படையின் (சிஏபிஎஃப்) வீரர்கள் 10,000 பேர் கூடுதலாக நிறுத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1,2 ஆகிய தேதிகளில் மேலும் 28,000 படை வீரர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிறுத்தப்பட்டனர்.

அடுத்த கட்ட நடவடிக்கையாக தொலைபேசி, லேண்ட்லைன், இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இணைய சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்படன. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் கிளம்பின. அமித் ஷாவின் அறிவிப்பு வெளியாகி ஒரு மாதம் ஆன நிலையிலும், ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொலைபேசி மற்றும் இணைய இணைப்புகள் இன்னும் முழுமையாக மீட்கப்படவில்லை.

முழுமையான இருட்டடிப்பு

கருத்து வேறுபாடு மற்றும் கருத்துச் சுதந்திரத்தைத் தடுப்பதற்காக, உலகின் சில அரசாங்கங்கள் இணைய சேவையை உடனடியாக முடக்குவது போன்ற கடுமையான நடவடிக்கையை எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. உலகம் முழுவதும், எமர்ஜென்சி காலங்களில் இணைய பணிநிறுத்தம் என்பது பொதுவான ஒன்று. உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளைக் காட்டிலும் இந்தியா தனது இணைய சேவையை அடிக்கடி முடக்குகின்றது.

வைஸ் நியூஸ் வெளியிட்டுள்ள அக்சஸ் நவ் தரவுகளின்படி, ஜனவரி 2016 முதல் மே 2018 வரை இந்தியா 154 இணைய சேவைகளை முடக்கியுள்ளது. இது இரண்டாவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தானை(19 முறை) விடவும், ஈராக் மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளை(தலா 8) விடவும் மிகப் பெரிய இடைவெளி.

அரசியல் கொந்தளிப்பு, எதிர்ப்பு அல்லது இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இணைய சேவைகளை அடிக்கடி இந்தியா துண்டித்து வருகின்றது. 2017 ஆம் ஆண்டு டார்ஜிலிங்கில் தனி மாநிலம் கேட்டு கூர்காக்கள் நடத்திய போராட்டங்களில் 45 நாட்கள் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. பீகாரில் நவாடா வகுப்புவாத மோதல்களின் விளைவாக 40 நாட்கள் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டது. காஷ்மீரில் இது அடிக்கடி நிகழ்ந்து வருகின்றது.

இணைய சேவைகளை முடக்குவது ஊடகவியலாளர்களின் பணிகளை முக்கியமான வழிகளில் தடைசெய்கின்றன. இணையம் தடைசெய்யப்படும் போது, மெதுவாக இயங்கும்போது, சமூக ஊடகங்கள் மூடப்படும் போது அத்தியாவசியமான தகவல்தொடர்பு இழக்கப்படுகிறது. இது மக்களின் தகவல் அறியும் உரிமையை தடுக்கிறது.

பிஸினஸ் டிவி இந்தியாவின் ஆசிரியர்களுள் ஒருவரான ஆதித்யா ராஜ் கெளல் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “பாகிஸ்தானில் இருந்து தீவிரவாத தாக்குதல்கள் நடக்கும் போது, பதட்டமான சூழ்நிலைகள் இருக்கும் போது குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் இணைய சேவை துண்டிக்கப்படும். தற்போது தான் முதன் முறையாக காஷ்மீர் மாநிலம் முழுவதுமே மூன்று வாரங்களுக்கும் மேல் லேண்ட் லைன், மொபைல், இணையம் என அனைத்தும் ஒரே சமயத்தில் துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது” என்கிறார்.

இந்திய மீடியாக்களும் சர்வதேச மீடியாக்களும்

சிறப்பு நிலை விளக்கத்துக்குப் பின், பெரும்பாலான இந்திய மீடியாக்கள் தங்கள் இந்திய மனநிலையிருந்தும், ஆளும் இந்திய அரசின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர்களாக மட்டுமே நின்றும் செய்திகள் தெரிவித்து வந்தன. திரும்ப திரும்ப மக்கள் மனங்களில் செய்திகளின் வாயிலாக ‘இயல்பு நிலை’ என்பது மருந்தைப் போல உட்செலுத்தப்பட்டது.

சர்வதேச ஊடகங்கள் இந்திய ஊடகங்களை ‘மோடி அரசின் ஊதுகுழல்கள்’ எனக் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தன. காஷ்மீர் மக்களின் நிலையையும், அங்கு நிலவும் கள நிலவரங்களையும் மீடியாக்கள் தங்கள் வெளிச்சத்துக்குள் நின்றபடியே இருட்டடிப்பு செய்தன.

ஸ்ரீநகரைச் சேர்ந்த முகமது ஹனீஃப் அல்ஜசீராவுக்கு அளித்த பேட்டியில், “முதலில் இது காஷ்மீருக்கு எதிரான இந்தியாவின் போர் அறிவிப்பா அல்லது வேறு ஏதாவதா என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் இங்குள்ள ஒவ்வொரு சேவையையும் நிறுத்தி வைத்துள்ளனர். அவர்கள் கூறுகிறார்கள்: காஷ்மீரில் இயல்புநிலை உள்ளது. இது என்ன வகையான இயல்பு நிலை?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறப்பு நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று ஸ்ரீநகரில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின், சுமார் பத்தாயிரம் பேர் வீதிகளில் இறங்கிப் போராடினர். ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததால் இந்திய படைகள் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். இதனை ராய்ட்டர் ஊடகம் அம்பலப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அல்ஜசீரா, பிபிசி போன்ற ஊடகங்கள் இந்த வீடியோக்களை ஆதாரத்துடன் வெளியிட்டன.

ஆனால் இந்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் “ஸ்ரீநகரில் 10,000 பேர் சம்பந்தப்பட்ட ஒரு எதிர்ப்பு இருப்பதாக ஒரு செய்தி அறிக்கை முதலில் ராய்ட்டர்ஸில் வெளியிடப்பட்டது. இது முற்றிலும் புனையப்பட்டது மற்றும் தவறானது. ஸ்ரீநகர் பாரமுல்லாவில் ஒரு சில தவறான போராட்டங்கள் நடந்துள்ளன. மேலும் 20 பேருக்கும் மேல் அக்கூட்டத்தில் யாருமில்லை” என அப்பட்டமாக மறுத்தார்.

பிரான்ஸ் 24 சானலைச் சேர்ந்த சுரபி தண்டன் என்ற சிறப்பு நிருபர், “நீங்கள் ஒரு தொலைக்காட்சி நிருபராக இருக்கும் பட்சத்தில், உங்களது செய்தி சானல் நீங்கள் எதைக் கூற வேண்டும், எதைக் கூற வேண்டாம் என திட்டவட்டமாக சில தகவல்களை மட்டுமே அளிக்கும் போது, அந்த வரையரைகளையும் கடந்து நியூஸ் ஸ்டோரிக்குள் உங்களால் ஆழமாகப் போகமுடியாது.

எங்களின் நிருபர்கள் மூலம் நாங்கள் இந்த செய்தி சானல்களில்(இயல்பு நிலை என தெரிவித்த இந்திய மீடியாக்களிடம்)பணிபுரியும் நிருபர்களை தொடர்பு கொண்டோம். நீங்கள் ஸ்ரீநகர் சென்று இந்தத் தகவல்களை சேகரித்தீர்களா எனக் கேள்வி எழுப்பினோம். அவர்களது பதில் ‘இல்லை’ என்பதாகவே இருந்தது. அப்படியெனில் உங்களால் அங்கு நடக்கும் ஆர்பாட்டங்களை பற்றி செய்தி அளிக்க முடியாது என்பது தான் நிஜம். நீங்கள் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளுக்கும் மேல் பார்வையிடவில்லை என்றால், எல்லாமே ‘இயல்பு நிலை’யில் தானே இருக்கிறதென்று செய்திகளில் சொல்லப் போகிறீர்கள்.” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

காஷ்மீர் நாவலாசிரியரும் பத்திரிகையாளருமான மிர்சா வாகீத் கூறுகையில், “பல காஷ்மீரிகளுக்கு, இந்தியா ஒருபோதும் ஜனநாயகமாக செயல்படவில்லை. ஒரு முறை இந்திய எழுத்தாளர் ஒருவர் ஜனநாயகத்தில் உலகின் மிகப்பெரும் பரிசோதனை களம் இந்தியா என்று வர்ணித்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, உலகின் மிகப்பெரும் பரிசோதனைக் களம் தோல்வியடைகிறது” என்று அவர் கூறினார்.

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் காஷ்மீர் மக்களின் போராட்டங்கள், அன்றாட நெருக்கடிகள் ஆகியவற்றை மதியம் 1 மணி பதிவில் பார்க்கலாம்..

பகுதி 2


மேலும் படிக்க


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


டிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ


தினகரன் -ஸ்டாலின் பப்பீஸ் டீல் : அதிமுகவின் தேர்தல் திட்டம்!!


பாஜகவில் ரஜினி கேட்கும் பதவி!


‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி


வியாழன், 5 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon