மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

ஒரே ரேஷன் அட்டை திட்டத்தில் தமிழகமா? வலுக்கும் எதிர்ப்பு!

ஒரே ரேஷன் அட்டை திட்டத்தில் தமிழகமா? வலுக்கும் எதிர்ப்பு!

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் தமிழகம் இணையக் கூடாது என்று ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை என்ற அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியானபோது அதற்கு தமிழகம் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் நடந்த மாநில உணவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், “இதுவரை 14 மாநிலங்கள் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் சேர ஆயத்தமாக உள்ளன. டிசம்பர் மாதத்தில் அந்த மாநிலங்களில் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும். தமிழ்நாட்டில் ஆதார் இணைப்பில் குறைபாடுகள் உள்ளன. அது சரிசெய்யப்பட்டவுடன் இந்தத் திட்டத்தில் தமிழ்நாடும் இணைக்கப்பட்டுவிடும்” என்று தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் காமராஜ், “தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல், பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வருகை தரும் தொழிலாளர்கள் நியாய விலைக் கடைகளில் பொருட்கள் பெற்றுக் கொள்ளும் முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 4) மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, “ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் தமிழக அரசு கண்டிப்பாக இணையும்” என்று கருத்து தெரிவித்தார். அதே நேரத்தில், திருவாரூரில் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் காமராஜ், “அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து கூறியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது” என்று தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

திமுக தலைவர், ஸ்டாலின்

“ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் சேருவதற்குத் தயார் என்று டெல்லியில் நடைபெற்ற மத்திய உணவு அமைச்சர் தலைமையிலான கூட்டத்தில், தமிழக உணவு அமைச்சர் காமராஜ் சம்மதம் தெரிவித்துவிட்டு வந்திருப்பதும், 'இந்தத் திட்டத்தில் தமிழகம் நிச்சயம் இணையும்' என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியளித்திருப்பதும் கடும் கண்டனத்துக்குரியது.

மாநில உரிமையை விட்டுக்கொடுத்து மாநிலத்தில் உள்ள பொது விநியோகத் திட்டத்துக்கும் ஆபத்தை உருவாக்கும் வகையில் “ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை” திட்டத்தில் தமிழகம் நிச்சயமாக இணையக் கூடாது என்றும், அவ்வாறு ஒரு முடிவு எடுக்கும் முன்பு 1.99 கோடி கார்டு உரிமையாளர்களிடமும், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலம் ஜனநாயக ரீதியாகக் கருத்துகளைக் கேட்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.”

மதிமுக பொதுச் செயலாளர், வைகோ

“பெயர் அளவுக்குக்கூட இந்தத் திட்டத்தை எதிர்க்காமல், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தைத் தமிழ்நாட்டில் செயல்படுத்த, மத்திய பாஜக அரசின் அழுத்தத்துக்குத் தமிழக அரசு அடிபணிந்து இருப்பதையே அமைச்சரின் கருத்து எதிரொலிக்கிறது. இது தமிழக மக்களுக்கு இழைக்கப்படுகின்ற பச்சைத் துரோகம் ஆகும். மத்திய அரசின் அழுத்தத்துக்கு அடிபணிந்து ஒரே; ஒரே குடும்ப அட்டை திட்டத்தைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தினால், தமிழக பொதுப்பகிர்வு முறை சீர்குலைந்து விடும். எனவே, ‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தில் தமிழகத்தை இணைக்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

அதே சமயம் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை வரவேற்றுள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா, “இந்தியா முழுவதும் ஒரே ரேஷன் அட்டை திட்டம் வரவேற்கப்படக்கூடிய ஒன்றாக உள்ளது. இதன் காரணமாகக் கள்ளச் சந்தையில் பொருட்கள் பதுக்கப்படுவது குறைக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.


மேலும் படிக்க


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


டிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ


தினகரன் -ஸ்டாலின் பப்பீஸ் டீல் : அதிமுகவின் தேர்தல் திட்டம்!!


பாஜகவில் ரஜினி கேட்கும் பதவி!


‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி


வியாழன், 5 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon