மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

தெலங்கானா ஆளுநராகியிருக்க வேண்டிய சுஷ்மா

தெலங்கானா ஆளுநராகியிருக்க வேண்டிய சுஷ்மா

தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசையிடம், அதற்கான ஆணையை தெலங்கானா ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரி செப்டம்பர் 4 ஆம் தேதி நேரடியாக சென்னை வந்து தந்து விட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில் தமிழிசைக்கு தெரியாமலேயே அவருக்கு அறிவிக்கப்பட்ட இந்த ஆளுநர் பதவி சுஷ்மா ஸ்வராஜுக்கு சென்றிருக்க வேண்டியது என்று ஒரு தகவல் டெல்லியிலிருந்து கிடைக்கிறது. இது பற்றி விசாரித்தோம்.

“ பாஜகவின் மூத்த தலைவராக இருந்த சுஷ்மா சுவராஜ் உடல்நிலை காரணமாக 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. மேலும் அவர் மோடியின் மீதும் அமித் ஷாவின் மீதும் சிறிது வருத்தத்தில் இருந்ததாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் சிறுநீரக அறுவை சிகிச்சைக்குப் பின்னும் தனது வழக்கமான அலுவல்களை கவனித்துக்கொண்டிருந்த சுஷ்மா ஸ்வராஜுக்கு தெலங்கானா ஆளுநர் பதவியை அளித்து அவரது வருத்தத்தை போக்குவது என்று அமித் ஷா முடிவு செய்து வைத்திருந்தார். நீண்ட சட்டமன்ற, நாடாளுமன்ற அனுபவம், ராஜதந்திரங்களில் பரிச்சயம் ஆகியவற்றுக்காக சுஷ்மாவுக்கு ஆளுநர் பதவி பொருத்தமாகவே பட்டது. அதற்கேற்ப முன்னேற்பாடுகளையும் செய்து வைத்திருந்தார் அமித் ஷா. இந்நிலையில் தான் காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுக்க வேண்டியதாகி அதில் தொடர்ந்து அமித்ஷா கவனம் செலுத்திய நிலையில் சுஷ்மா ஸ்வராஜ் எதிர்பாராதவிதமாக ஆகஸ்ட் 6ஆம் தேதி காலமாகிவிட்டார்.

இது அமித் ஷாவுக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் சுஷ்மா ஸ்வராஜ் என்ற பெண்மணிக்காக முடிவு செய்யப்பட்ட தெலங்கானா ஆளுநர் பதவியை இன்னொரு பெண்மணிக்கே கொடுப்பது என்று முடிவு செய்தார் அமித் ஷா. அதன்படி பாஜகவில் யாருக்கு கொடுக்கலாம் என்று ஆலோசனை நடத்தியபோது, தமிழக பாஜக தலைவராக இருக்கும் தமிழிசை தேர்தலில் தோல்வியுற்ற நிலையில் அவரை தமிழகத்திலிருந்து தற்போதைக்கு மத்திய அமைச்சராகவும் இணைத்துக் கொள்ள முடியாத சூழல் இருப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. அதன்படி தமிழிசையை தெலங்கானா ஆளுநராக நியமித்தால் என்ன என்ற ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் அமித் ஷா.

அதன் பிறகுதான் குடியரசுத் தலைவர் மாளிகை, உள்துறை அமைச்சகம் உட்பட முக்கிய அலுவலகங்களிலிருந்து ஆகஸ்ட் 31ஆம் தேதி அவரது முழு பெயரை கேட்டு தமிழிசைக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தன. அடுத்தநாள் அவர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துகொண்டிருக்கும் போதே அவரை தெலங்கானா ஆளுநர் பதவிக்கு நியமனம் செய்யப் பட்டிருக்கும் தகவலும் வெளிவந்தது.

சுஷ்மாவுக்காக நிச்சயிக்கப்பட்ட தெலங்கானா ஆளுநர் பதவி அவரது திடீர் மரணத்தால் தென்னிந்தியா பக்கம் திரும்பி தமிழிசைக்கு கிடைத்து விட்டது என்கிறார்கள் டெல்லி பாஜக வட்டாரத்தினர்


மேலும் படிக்க


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


டிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ


தினகரன் -ஸ்டாலின் பப்பீஸ் டீல் : அதிமுகவின் தேர்தல் திட்டம்!!


பாஜகவில் ரஜினி கேட்கும் பதவி!


‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி


வியாழன், 5 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon