மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 செப் 2019

தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்

தமிழக பாஜக தலைவர் ஆகிறார்  ஏ.பி. முருகானந்தம்

தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பதுதான் இன்றைய அரசியல் வட்டாரத்தின் பலத்த கேள்வியாக இருக்கிறது. பாஜக பெரிதாக செல்வாக்கு எதையும் நிரூபிக்காத நிலையில், அதன் மாநிலத் தலைவர் பதவி ஏன் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது என்ற கேள்வியையும் விமர்சகர்கள் முன் வைக்கிறார்கள்.

ஆனால் மத்தியில் ஆளுங்கட்சியாக இருப்பதாலும், தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக நடக்கும் முக்கிய அரசியல் நகர்வுகளுக்கு மத்திய ஆளுங்கட்சி என்ற முறையில் பாஜக பெரும்பங்காற்றியிருப்பதாலும் தமிழக பாஜக தலைவர் யார் என்ற கேள்வி பரபரப்பாக கேட்கப்படுவதில் ஆச்சரியம் இல்லை.

தமிழிசையின் பதவிக் காலம் வரும் டிசம்பர் மாதம் முடிவடையும் நிலையில், ஏற்கனவே அடுத்த தலைவர் யார் என்பதற்கான ஆலோசனைகள் ஆரம்பித்திருந்தன. ஆனால் திடீரென தமிழிசை தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதால், உடனடியாக தமிழக பாஜக தலைவரை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக பாஜக தலைவர் பதவிக்கான பொருத்தமான நபர் யார் என்று கடந்த ஓரிரு மாதங்களாகவே மத்திய உளவுத்துறை விசாரணை நடத்தியிருக்கிறது. பாஜகவின் சென்னை முதல் டெல்லி வரை விசாரித்த விவரங்களை மின்னம்பலம் வாசகர்களுக்குத் தருகிறோம்.

“தமிழக பாஜகவுக்கு இனி மூத்த தலைவர்கள் வேண்டாம் என்ற முடிவுக்கு தலைமை வந்துவிட்டது. ஏனெனில் இரவு பகல் பார்க்காமல் ஓடி உழைக்கும் ஒருவரையே தலைவராக்க வேண்டும் என்று கருதுகிறார் அமித் ஷா.

அந்த வகையில் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா ஆகியோர் மூத்தோர் பட்டியலில் இருக்கிறார்கள். இவர்களுக்கு தலைவர் பதவி அல்லாமல் வேறு எந்த பதவிகள் வேண்டுமானாலும் தரப்பட வாய்ப்பிருக்கிறது.

அதேபோல இரண்டாம் கட்டத் தலைவர்களில் வானதி சீனிவாசன், நரேந்திரன், கருப்பு முருகானந்தம் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன. கடந்த ஐந்து வருடம் பெண் தலைமையில் கட்சி செயல்பட்டது. மீண்டும் பெண் தலைவரா என்ற கேள்வியே வானதிக்கு குறுக்கே நிற்கிறது. துணைத் தலைவராக இருக்கும் நரேந்திரன் பெரிய அளவு அறிமுகம் இல்லாவிட்டாலும் முரளிதர் ராவின் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார். கருப்பு முருகானந்தம் அதிரடிக்கு பெயர் போனவர். முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலத்தில் இருந்துதான் இவரது பெயரே அரசியல் உலகுக்கு தெரியவந்தது.

இந்த மூவருக்கு அடுத்தபடியாக மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர் என்ற கேட்டகிரியில் இருக்கிறார் நயினார் நாகேந்திரன். அதிமுகவில் ஜெ. பேரவை ஆரம்பிக்கப்பட்டபோது முதலில் நயினார் நாகேந்திரனிடம்தான் அதற்கான பொறுப்பைக் கொடுத்தார். தன்னை நியமித்த மூன்றே மாதத்தில் தமிழகம் முழுதும் பூத் அளவில் பேரவைக்கு நிர்வாகிகளை நியமித்து பலப்படுத்தியவர், களத்தில் செயல்படக் கூடியவர், பணத்துக்குப் பஞ்சமே இல்லாதவர் என்பதுதான் பாஜக தலைமைக்கு நயினார் பற்றி சென்றிருக்கக் கூடிய ரிப்போர்ட்.

மூன்றாவது செட் தான் முக்கியமான செட். இதில் பாஜகவின் துடிப்பான இளைஞர்கள் யார் யார் என்று கேட்டதில் முதல் இடத்தில் இருப்பது ஏ.பி.முருகானந்தத்தின் பெயர். ஏ.பி. முருகானந்தம் இப்போது தேசிய பாஜக துணைத் தலைவராக இருக்கிறார். இதைவிட இவருக்கு அமித் ஷாவிடமும், மோடியிடமும் பெயர் வாங்கித் தந்த பொறுப்பு தேசிய போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் என்பதே.

அண்மையில் மேற்கு வங்காளத்தில் மம்தா அரசுக்கு எதிராக அமித் ஷா நடத்திய போராட்டம், கேரளாவில் பாஜக நடத்திய ஜனரட்சக யாத்திரை என்ற மக்கள் பாதுகாப்பு யாத்திரை உட்பட இந்தியா முழுதும் பாஜக நடத்திய வலுவான போராட்டங்களில் களப்பணி மேற்கொண்டு ஓரிரு மாதங்கள் தங்கி போராட்டங்கள் வெற்றிபெற காரணமாக இருந்தவர் ஏ.பி. முருகானந்தம். இதனால் மோடிக்கும் அமித் ஷாவுக்கும் மிகவும் நெருக்கமானவர்.

2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடி செல்வதற்கு முன் மத்திய அரசு அதிகாரிகள், பாஜக நிர்வாகிகள் அடங்கிய குழுவொன்று சீனா சென்றது. அக்குழுவில் இடம்பெற்றிருந்தவர்களில் முருகானந்தமும் ஒருவர். மோடியின் இந்தப் பயணத்தில்தான் லேப்டாப் உற்பத்திக்குப் புகழ் பெற்ற ஷாங்கிங் நகருடன் சென்னை சகோதரிகள் நகரம் என்ற ஒப்பந்தம் சென்னை மேயர் சைதை துரைசாமி, ஷாங்கிங் மேயர் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது. (இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்த தமிழக அரசு உரிய அக்கறை காட்டவில்லை என்பது தனிக் கதை)

இவ்வாறு தேசிய தலைவர்களுக்கு நன்கு அறிமுகமான போராட்டக் களத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஏ.பி.முருகானந்தத்தின் பெயர் இளைய தலைவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

இளைய தலைவர்கள் பட்டியலில் வினோஜ், கே.டி. ராகவன், ஏ.என்.எஸ்.பிரசாத் உள்ளிட்டோர் பெயர்களும் இருக்கின்றன. இவர்களில் வினோஜ் தமிழக இளைஞரணித் தலைவர். கே.டி.ராகவனுக்கு ஆர்.எஸ்.எஸ். பின்புலம் இருந்தாலும் கட்சியில் பலரும் அவரை விரும்புவதாகத் தெரியவில்லை. தமிழிசை தலைவரான பின்பு கட்சியில் முக்கியத்துவம் பெற்ற ஏ.என்.எஸ்.பிரசாத் அவரால்தான் ஊடகப் பிரிவுத் தலைவராகவும் ஆனார்.

தலைவர் பதவிக்காக மட்டுமல்லாமல் பல்வேறு ப்ரமோஷன்களுக்காக மேற்கண்ட பட்டியலை தயாரித்து வைத்திருக்கிறது பாஜக மேலிடம். இதில் தற்போதைக்கு மாநிலத் தலைவர் பட்டியலில் தேசிய இளைஞரணித் தலைவர் முருகானந்தம் பெயரே முதலிடத்தில் இருக்கிறது என்கிறார்கள் டெல்லி பாஜக வட்டாரங்களில்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ


தினகரன் -ஸ்டாலின் பப்பீஸ் டீல் : அதிமுகவின் தேர்தல் திட்டம்!!


‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி


தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!


சிதம்பரத்தைத் தொடர்ந்து சிவக்குமார் கைது!


ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

புதன் 4 செப் 2019