மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 செப் 2019

காஷ்மீரில் நுழைந்த தீவிரவாதிகள்: ராணுவம் வெளியிட்ட வீடியோ!

காஷ்மீரில் நுழைந்த தீவிரவாதிகள்: ராணுவம் வெளியிட்ட வீடியோ!

ஜம்மு காஷ்மீர் எல்லை வழியாக நுழைய முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு லக்‌ஷர்-இ-தைபா தீவிரவாதிகளின் ஒப்புதல் வாக்குமூலம் அடங்கிய வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டது.

இன்று(செப்டம்பர் 4) காலை இந்திய இராணுவ அதிகாரியான லெப்டினண்ட் ஜெனரல் கே.ஜே.எஸ் தில்லான், ஜம்மு காஷ்மீர் போலீஸ் தலைமை அதிகாரி முனிர் கான் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது எல்லை தாண்டி காஷ்மீருக்குள் நுழைந்த இருவரின் ஒப்புதல் வாக்குமூலம் அடங்கிய வீடியோவை அளித்தனர்.

ஆகஸ்ட் 21 ஆம் தேதியன்று, பாகிஸ்தானைச் சேர்ந்த கலீல் அஹ்மத், மோஜம் கோஹர் ஆகியோர் பாராமுல்லா மாவட்டத்திலுள்ள(காஷ்மீர்) போனியர் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டின் அருகில் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் போது, தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவுக்கும் அவர்களுக்கும் தொடர்பு இருந்ததாக தெரியவந்துள்ளது.

லெப்டினண்ட் ஜெனரல் கே.ஜே.எஸ் தில்லான் கூறும் போது, “காஷ்மீர் பள்ளத்தாக்கின் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரவாதிகளை அனுப்புகிறது. காஷ்மீருக்குள் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் லஷ்கர்-இ-தைபா பெரும் குழுவுடன் காஷ்மீருக்குள் நுழைய முயற்சிக்கின்றனர். அதன் முதல்கட்டமாக வழிகாட்டியான இவர்களை அனுப்பியிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஏராளமான தீவிரவாதிகள் எல்லைப் புறத்தில் இருப்பதாகவும், பாகிஸ்தான் ஒவ்வொரு இரவும் இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகளை அனுப்ப முயற்சி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.