மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

கோலி பறிகொடுத்த ‘நம்பர் 1’ இடம்!

கோலி பறிகொடுத்த  ‘நம்பர் 1’ இடம்!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் நேற்று (செப்டம்பர் 3) வெளியானது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஒயிட் வாஷ் செய்ததன் மூலம் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளைப் பெற்றுத் தந்த கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார் விராட் கோலி. இருப்பினும் நேற்று வெளியான தரவரிசைப் பட்டியலில் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் தனது முதலிடத்தை ஒரு புள்ளி வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித்திடம் பறிகொடுத்தார்.

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனான ரஹானே மீண்டும் ‘டாப் 10’ பட்டியலுக்குள் இடம்பிடித்தார். 7ஆம் இடத்தை அவர் கைப்பற்றினார். ஆண்டிகுவா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஒரு சதமும், ஒரு அரை சதமும் அடித்தார். ஜமைக்கா டெஸ்ட் போட்டியில் ஒரு அரை சதம் அடித்தார். மேலும் இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்த (289) வீரரான ஹனுமா விஹாரி ஒரே பாய்ச்சலில் 40 இடங்களைக் கடந்து 30ஆவது இடத்தைப் பெற்றார். இவர் ஆறு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியது குறிப்பிடத்தக்கது.

கோலி இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னின்ஸில் 76 ரன்களிலும், இரண்டாவது இன்னிங்ஸில் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலாக தற்போது நடைபெற்றுவரும் ஆஷஸ் தொடரில் ஸ்மித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் நிலையில் கோலியை அவர் முந்தினார். தற்போது புள்ளிப்பட்டியலில் ஸ்மித் 904 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் கோலி 903 புள்ளிகள் பெற்றுள்ளார்.

பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஸ்மித்துக்கு ஓர் ஆண்டு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கோலியே தொடர்ந்து முதலிடத்தை அலங்கரித்துவந்தார். ஆஷஸ் தொடரின் நான்காவது போட்டி நடைபெறும் நிலையில் ஸ்மித் மேலும் சில புள்ளிகளைப் பெறவாய்ப்புகள் உள்ளன.

கோலி, ஸ்மித்தை முந்தி முதலிடம் பிடிக்க அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கும் இந்திய, தென்னாப்பிரிக்கத் தொடரில் சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டும்.

பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய பும்ரா மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். அவரைத் தவிர, முதல் 10 இடங்களில் வேறு எந்த இந்திய வீரரும் இல்லை. ஜடேஜா 11ஆவது இடத்திலும், அஸ்வின் 14ஆவது இடத்திலும் உள்ளனர்.


மேலும் படிக்க


தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!


டிஜிட்டல் திண்ணை: திமுக புள்ளிகளுக்கு பாஜக வலை!


பிக் பாஸ் 3: கவின் காலி செய்த பிக் பாஸ் ஸ்கிரிப்ட்!


அதிகாரம் - அறநெறி: சமகாலத்தின் இரு சாட்சிகள்!


5%: கஸ்டடியில் இருந்து மோடியை கலாய்த்த ப.சி


புதன், 4 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon