மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

தயாரிப்பாளர் ஆலயம் ஸ்ரீராம் காலமானார்!

தயாரிப்பாளர் ஆலயம் ஸ்ரீராம் காலமானார்!

ஆசை, பம்பாய், இருவர் போன்ற படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஆலயம் எஸ்.ஸ்ரீராம் மாரடைப்பால் இன்று காலமானார்.

தயாரிப்பாளர் எஸ். ஸ்ரீராம் இயக்குநர் மணிரத்னமுடன் இணைந்து ஆலயம் புரொடகஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி முதல் படமாக, விஜயகாந்த் நடித்த சத்ரியன் படத்தை 1990ஆம் ஆண்டு வெளியிட்டார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரோஜா, இருவர், திருடா திருடா, பம்பாய் ஆகிய படங்களை மணிரத்னமுடன் இணைந்து தயாரித்தார் ஸ்ரீராம். ஆலயம் புரொடக்‌ஷன்ஸ் சரத்குமார் நடிப்பில் வெளியான தசரதன், அஜித்குமார் நடிப்பில் வெளியான ஆசை ஆகிய படங்களையும் தயாரித்தது. ஆசை படத்தின் வெற்றி வளர்ந்து வரும் நடிகராக அப்போது இருந்த அஜித்துக்கு திருப்புமுனையாக அமைந்தது.

அதன் பின்னர் ஸ்ரீராம் நீண்ட வருடங்களுக்கு பிறகு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான சாமுராய் படத்தை தயாரித்தார். இப்படம் தோல்வியடையவே சினிமா தயாரிப்பிலிருந்து ஸ்ரீராம் விலகினார்.

64 வயதான ஸ்ரீராம் இன்று காலை மாரடைப்பினால் உயிரிழந்தார். இவரது மனைவி நளினி ஸ்ரீராம் தமிழ் சினிமாவின் முன்னணி ஆடை வடிவமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். நாளை இவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

புதன், 4 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon