மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல்: தயாராகும் தேர்தல் ஆணையம்!

நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல்: தயாராகும் தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் வரும் நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத சூழல் நிலவி வருகிறது. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் உள்ளாட்சிப் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை என்று விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், விரைவில் தேர்தலை நடத்த வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்குகளிலும், உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கிலும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் பலமுறை அவகாசம் கோரியது.

இந்த நிலையில் வரும் அக்டோபர் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் கடந்த ஜூலை மாதம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. பலமுறை இதேபோல நீதிமன்றத்தில் அவகாசம் கோரப்பட்டதால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என்றே பலரும் நினைத்துவந்தனர். இந்த நிலையில் வரும் நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வார்டு வரையறை செய்வது, வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது என உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தமிழக தேர்தல் ஆணையம் தற்போது தயாராகி வருகிறது. வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 10ஆம் தேதி தமிழகம் திரும்ப இருக்கிறார். முதல்வர் வந்த பிறகு, தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மூன்று ஆண்டுகள் ஓரே இடத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட இருக்கிறார்கள்.

அதன்பின்பு உச்ச நீதிமன்றத்தில் சொன்னது போலவே அக்டோபர் மாத இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நவம்பர் மாதம் முதல் வாரத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறலாம் என்றும், 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படலாம் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இடைத் தேர்தல்

மற்ற மாநிலங்களில் காலியாகவுள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஒரு தொகுதி 6 மாதம் வரை மட்டுமே காலியாக இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதன்படி வரும் டிசம்பர் மாதத்திற்குள் இரு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதனால், அவகாசம் முடிவதற்கு சில நாட்கள் முன்பாக தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 4 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon