சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டலை நியமிக்க கொலிஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து தஹில் ரமணி பொறுப்பில் இருந்துவருகிறார். இந்த நிலையில் அண்மையில் கூடிய கொலிஜியம் குழு, தஹில் ரமணியை மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்தது. 75 நீதிபதிகள் கொண்ட மிகப்பெரிய உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஒருவரை, 3 நீதிபதிகளைக் கொண்ட இந்தியாவின் மிகச்சிறிய உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பணியிடமாற்றத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கொலிஜியம் குழுவிற்கு தலைமை நீதிபதி தஹில் ரமணி கடந்த 2ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார். ஆனால், அதனை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட 5 பேர் அடங்கிய கொலிஜியம் குழு நிராகரித்துள்ளது.
“இதுதொடர்பான சாதக அம்சங்களையும் கவனமாக ஆலோசித்தோம். ஆனால், இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற தஹில் ரமணியின் கோரிக்கையை ஏற்பதற்கான சாத்தியம் இல்லை. எனவே கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி பரிந்துரைத்தபடி தஹில் ரமணி மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப் பரிந்துரைக்கப்படுகிறார்” என்று கொலிஜியம் குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டலை நியமிக்க கொலிஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது. இவர் தற்போது மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்துவருகிறார்.
மேலும் படிக்க
டிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ
‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி
தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!
சிதம்பரத்தைத் தொடர்ந்து சிவக்குமார் கைது!
பிக் பாஸ் 3: கவின் காலி செய்த பிக் பாஸ் ஸ்கிரிப்ட்!