அமமுகவின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பரணி கார்த்திகேயன் நேற்று (செப்டம்பர் 3) அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.
இதுகுறித்து அதிமுக கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மா, ‘இணையும் பரிதாபங்களுக்கு இரண்டு நிமிட அனுதாபம்’ என்ற தலைப்பிட்டு விமர்சித்துள்ளது.
அதில், “இவை யாருமே பப்பீஸ் ஹோட்டல் ஒப்பந்தப்படி திட்டமிட்ட திரைக்கதைகளின் நீட்சிதானே. தன்னை பத்தாண்டுகாலம் தமிழகத்தின் எல்லைக்குள் விடாமல் பதுங்குக் குழிகளில் பயந்து கிடக்க வைத்த கழகத்தை கரன்சி கொண்டு கைப்பற்ற முடியாது போனதால் வன்மம் கொண்டு அலையும் தினகரன் என்கிற உதயசூரியனின் ஏற்பாடுதான் இப்படி. அவரது வலது கரங்களும் இடது கரங்களுமான செந்தில்பாலாஜி, கலைராஜன், தங்க தமிழ்ச்செல்வன், இப்போது பரணி கார்த்திகேயன் என வரிசை கட்டிய ஆட்களின் திமுக சரணாதிக்குக் காரணம்.
இந்த வரிசையில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் தோல்விக்குப் பின் தினகரனே திமுகவில் போய் சேர்வார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபற்றி நாம் அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, “வருகிற சட்டமன்றத் தேர்தலில் தினகரனுக்கும், ஸ்டாலினுக்குமான பப்பீஸ் ஹோட்டல் ஒப்பந்தம் பற்றிதான் அதிமுகவின் வேகமான பிரச்சாரம் இருக்கப் போகிறது. ஆர்.கே.நகரில் தினகரன் சுயேச்சையாக போட்டியிட்டபோதே திருப்பூர் பப்பீஸ் ஹோட்டலில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். அதன் பிறகே வலுவான வேட்பாளரை நிறுத்தாமல் மீண்டும் மருது கணேஷையே வேட்பாளராக நிறுத்தியது திமுக. அதன் பிறகு மதுரை பப்பீஸ் ஹோட்டலிலும் ஸ்டாலினும், தினகரனும் சந்தித்ததாக தகவல்கள் இருக்கின்றன. அதிமுக அதுபற்றி முழுமையான தகவல்களை திரட்டிவிட்டது. இந்த சட்டமன்றத் தேர்தல் களத்தில் தினகரனுக்கும், ஸ்டாலினுக்குமான டீல்களை வெளியிடுவோம்” என்கிறார்கள்.
“பப்பீஸ் ஹோட்டலில் ஸ்டாலினை சந்தித்திருந்தால் சிசிடிவி காட்சிகளை எடுத்துப் பார்க்கலாம்” என்று ஏற்கனவே தினகரன் மறுப்பு தெரிவித்திருந்தார். இதை அதிமுகவினரிடம் குறிப்பிட்டுக் கேட்டபோது,
“சிசிடிவி கேமராக்களை கழற்றுவதில் அவர்கள் கைதேர்ந்தவர்கள்” என்று பதில் அளிக்கின்றனர்.
மேலும் படிக்க
டிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ
‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி
தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!
சிதம்பரத்தைத் தொடர்ந்து சிவக்குமார் கைது!
பிக் பாஸ் 3: கவின் காலி செய்த பிக் பாஸ் ஸ்கிரிப்ட்!