இயக்குநராகும் ஸ்டண்ட் மாஸ்டர்!

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி சண்டைப் பயிற்சிக் கலைஞராக வலம் வரும் பீட்டர் ஹெய்ன் இயக்குநராக அறிமுகமாகிறார்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் பெயரிடப்படாத புதிய படத்தை நல்லமலுப்பு புஜ்ஜி தனது நரசிம்மா புரொடக்ஷன் சார்பில் தயாரிக்கிறார். படம் குறித்து பேசிய புஜ்ஜி, “பீட்டர் ஹெய்ன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அவர் கூறிய திரைக்கதை மிகவும் உற்சாகத்தை தந்தது. வலுவான கதையும் அவர் கூறிய விதமும் பெரிதும் ஈர்த்தது. இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. தசரா பண்டிகையை முன்னிட்டு பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம். படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று கூறினார்.
திரைத்துறையைச் சார்ந்த கலைஞர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் தேசிய விருது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. திரைத்துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் கலைஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டாலும் சண்டைப் பயிற்சிக் கலைஞர்களுக்கு மட்டும் வழங்கப்படாமல் இருந்தது. 2017ஆம் ஆண்டு இந்தப் பிரிவில் முதன்முறையாக விருது வழங்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு வெளியான புலிமுருகன் படத்திற்காக இந்த விருதை முதன்முறையாக பெற்றவர் பீட்டர் ஹெய்ன்.
இதுதவிர பல்வேறு மாநில விருதுகளையும், பிலிம் ஃபேர் விருதுகளையும் பெற்றுள்ளார். தென்னிந்தியாவில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் பணியாற்றும் படங்கள் என்றால் அதில் பீட்டர் ஹெய்ன் பெயர் பெரும்பாலும் இடம்பெற்றுவிடும். எந்திரன், பாகுபலி, மகதீரா, கஜினி உள்ளிட்ட பல படங்கள் அவரது சண்டைப் பயிற்சிக்காக பாராட்டுகளை அள்ளின.
சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டுவந்தாலும் பீட்டர் ஹெய்ன் இயக்குநராக அறிமுகமாக உள்ளார் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தகவல் வெளியானது. மலையாளத்தில் மோகன் லாலை கதாநாயகனாகக் கொண்டு இயக்குகிறார் எனக் கூறப்பட்ட நிலையில் அந்தப் படம் தொடங்கப்படவே இல்லை. தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தெலுங்கிலிருந்து தன் இயக்குநர் பயணத்தை பீட்டர் ஹெய்ன் தொடங்குகிறார்.
மேலும் படிக்க
டிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ
‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி
தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!
சிதம்பரத்தைத் தொடர்ந்து சிவக்குமார் கைது!
பிக் பாஸ் 3: கவின் காலி செய்த பிக் பாஸ் ஸ்கிரிப்ட்!