மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 செப் 2019

காட்டுவாசிகளிடம் கற்றவை -3

காட்டுவாசிகளிடம் கற்றவை -3

பா.நரேஷ்

விளாங்கொம்பை. நவீனத்தின் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டாத உயரத்தில், நான்கு மலைகளுக்கு நடுவில் இருக்கும் பளியர் பழங்குடிகளின் ஊர். அவ்வூரின் நடுவில் இருந்து சுற்றிப்பார்த்தால், மலைகளின் மடியில் சுருங்கிக்கிடப்பதைப்போன்ற உணர்வு உந்தித்தள்ளும். ஈரோட்டிலிருந்து விநோபா நகர் வழியாக விளாங்கொம்பைக்கு செல்ல வேண்டும். பேருந்து வாகனம் போன்ற போக்குவரத்து வசதிகள் எல்லாம் இல்லை. மலையின் மடிமீது நடந்துதான் செல்லவேண்டும். எக்காலமும் எக்களித்துக்கொண்டு ஓடும் நதி ஒன்று, அவ்வூருக்கு செல்லும் வாகன வழியை மறைத்துவிடுகிறது. மலையின் மனதறிந்தவரை, அந்நதி வற்றியதில்லை. ஆனால், சமீபகாலங்களாக அந்நதியில் நீரில்லை. நதி நீரால் மொட்டையடிக்கப்பட்ட கற்கள், மொழு மொழுவென்று வெய்யிலை வாங்கி பல் இளித்துக்கொண்டிருந்தது. இதற்கு காலநிலை மாற்றம்தான் காரணம் என்பதை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் பருவநிலை சீரழிவைக்கூட பார்த்திராத மக்கள் அவர்கள்.

விளாங்கொம்பைக்கு செல்லும் வழியில், தூரத்தில் ஒரு ஊர் தென்பட்டது. அங்கிருந்து விளாங்கொம்பைக்கு மூன்று கிலோமீட்டர் தூரம்தான். குட்டியாக குடியிருந்துகொண்டிருந்த ஊரை குறைந்தது எட்டிப்பார்த்தாவது எட்டெடுத்து வைப்போம் என்று எண்ணி நடந்தோம். அருகில் சென்ற பிறகுதான் தெரிந்தது, மூன்று பேர் மட்டுமே குடியிருக்கும் மிகவும் குட்டியான ஊர் என்று. அங்கே கோவணத்துடன் ஒரு கிழவர் அமர்ந்திருந்தார்.

“ஆரு? என்ன விசேசம்.” என்றவரிடம் உரையாடல் தொடர்ந்தது.

“பட்டணத்துல இருந்து வர்றோம். விளாங்கொம்பைக்கு போவனும். போர வழியில இந்த ஊரப்பாத்து வந்தோம்.”

“ஆஞ்சரி.., நல்லா பாருங்க. அதென்ன படம்புடிக்கவா? நல்லா புடிச்சுக்கங்க”.

“ஒரு ஆளுதான் இருக்கீங்க. இங்க இத்தனை வீடு இருக்கே தாத்தா?” என்றோம். தோராயமாக அங்கே 6 வீடுகள் இருந்தது.

“அந்தா அங்குன தெரியுற ரெண்டு குடிசையும், இந்த கல்லு . வீடும் எம்முடையது. மத்ததெல்லாம் ஆள் இருந்தாக. இப்போ கீழ்நாட்டுக்கு பொறுக்க பொயிட்டாக.”

”இப்ப இங்க எத்தன பேர் இருக்கீங்க?”

“நானு, என் வூட்டம்மா. என் மாமியா..”

அதிர்ச்சியாக இருந்தது. அந்த கிழவருக்கு கிட்டத்தட்ட 95 வயதிருக்கும். அவருடைய மாமியார் உயிருடன் இருக்கிறார் என்பது ஆச்சர்யமாக இருந்தது. உடல் நிலை சரியில்லாமல், அந்த வயதான மூதாட்டி உள்ளே படுத்திருப்பார் என்று நினைத்தோம்.

“உங்க மாமியார் எந்த வீட்டுல படுத்திருக்காங்க?”

“படுத்திருக்கா..? அது ஆடு மேய்க்க போயிருக்கு. செத்த நேரத்துல ஆடுகளுக்கு தண்ணி காட்ட வரும்” என்றார்.

அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது அவருடைய மனைவியும், மாமியாரும் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தனர். சற்று கூன் விழுந்திருந்தாலும் திடமாக நடந்துவந்தார் அந்த மூதாட்டி. அந்நியர்கள் இருப்பதை அரை கிலோமீட்டர் தூரத்திலிருந்தே கண்டுபிடித்து, “ஆரு ஆளு..” என்று கத்தினார்.

“ஆடுக வருது. தண்ணி கிடக்க எடத்துல நிக்காம வெலக நில்லுங்க!” என்றார்.

மூச்சடைத்து நின்றோம். இந்த தள்ளாத வயதிலும் துல்லியமான பார்வை. வேகமான நடை. கனமான குரல்.

“கீழிருந்து வர்றோம். உங்களையெல்லாம் பேட்டியெடுக்க.” என்றோம். அவர் நம்மை துளியும் சட்டை செய்யாமல் நகர்ந்து சென்றார்.

“உங்களுக்கு எத்தனை வயசாச்சு பாட்டி?”

பதிலில்லை.

“ஆடு மேய்க்க..எவ்ளோ தூரம் நடந்து போவீங்க?”

நம்மை அவர் கவனிக்கக்கூட இல்லை. அப்போதுதான் கிழவரின் மனைவி ஒரு கட்டு விறகை சுமந்து வந்தார்.

“அம்மாவுக்கு காது கேக்காது.. என்ன விசியம்?” என்றார்.

எந்த குறையும் இல்லாமல் இவ்வளவு வயதான மூதாட்டி எப்படி இருக்க முடியும் என்று வியந்துகொண்டிருந்த எங்களுக்கு, அவருக்கு காது சரியாக கேட்கவில்லை என்ற தகவல் ஒரு சின்ன ஆறுதலாக இருந்தது.

“அவங்களுக்கு என்ன வயசிருக்கும் மா?” என்றோம்

“தெரியலையேய்யா.. அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி நூத்தஞ்சு வயசத் தாண்டுனாங்கன்னு பேட்டி எடுத்துட்டு போனாங்க..இப்போ என்னானு தெரியலையேய்யா..” என்றுவிட்டு ஆடுகளை பட்டிக்குள் துரத்த ஆரம்பித்தார்.

அம்மூதாட்டி முதல் வீட்டுக்குள் நுழைந்தார். ஆடுகளுக்கு நீரிரைத்துவிட்டு வந்தார் கிழவர்.

”உங்க மூணு பேருக்கும் மூணு தனி தனி வீடா தாத்தா?”

“அப்படியில்லையா.. இங்க ஆணை வரும். சூடு ஏறுன சமயத்துல வீட்ட உடைச்சு போட்டுடும். வயசானப்புறம் வீடு கட்ட முடியாதுல்ல? அதான் இப்பவே கட்டிட்டிருக்கோம். அந்தா, அந்த வீட்டுக்கு மட்டும் கீத்து மாத்தனும்.” என்றார்.

அவர் தன்னை இப்போது வயதானவராக உணரவில்லை. வயதாகிவிட்டால் வீடு கட்ட முடியாது என்று 95 வயதில் ஒரு மனிதர் நினைக்கிறார்! இதுதான் பழங்குடிகளின் வாழ்வியல். இதுதான் இம்மக்களின் வாழ்வு!

நிம்மதியான வாழ்க்கை, நீடித்த ஆயுளைத் தவிர மனிதப்பிறவிக்கென்ன கடன் மீதமிருக்கிறது? அதை தொலைத்த நவீன மனிதர்களுக்கு, தொலைத்த இடத்தில் தேடிக்கொடுப்பதற்குத்தான் இத்தொடர்.

தொடர்ந்து கற்போம்...

முந்தைய பகுதி


மேலும் படிக்க


தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!


டிஜிட்டல் திண்ணை: திமுக புள்ளிகளுக்கு பாஜக வலை!


பிக் பாஸ் 3: கவின் காலி செய்த பிக் பாஸ் ஸ்கிரிப்ட்!


அதிகாரம் - அறநெறி: சமகாலத்தின் இரு சாட்சிகள்!


5%: கஸ்டடியில் இருந்து மோடியை கலாய்த்த ப.சி


கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

புதன் 4 செப் 2019