மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 18 ஜன 2021

தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!

தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!

புதுக்கோட்டை மாவட்ட அமமுக செயலாளராக இருந்த பரணி கார்த்திகேயன் இன்று (செப்டம்பர் 3) திமுகவில் இணைந்தார்.

சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த, புதுக்கோட்டை மாவட்ட அமமுக செயலாளர் பரணி கார்த்திகேயன், தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். அப்போது, திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் உடனிருந்தனர். திமுகவில் இணைந்த பரணி கார்த்திகேயன், அறந்தாங்கி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதியின் சகோதரரும் கூட.

புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவராக இருந்துள்ள பரணி கார்த்திகேயனை சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவிலிருந்து நீக்கி உத்தரவிட்டார் ஜெயலலிதா. அதன்பின்பு அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தவர், தினகரன் தனி கட்சி கண்டபோது அதில் இணைந்து மாவட்டச் செயலாளரும் ஆனார். எம்.எல்.ஏ.வாக இருந்த ரத்தினசபாபதி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததையடுத்துதான், அவரது தம்பியான பரணி கார்த்திகேயனுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

கடந்த ஜூனில் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்த சமயத்தில் தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்த ரத்தினசபாபதி, அரசுக்கு ஆதரவளிப்பதாகவும் அதிமுகவில் இணைந்து பணியாற்றப் போவதாகவும் அறிவித்தார். அமைச்சர் விஜயபாஸ்கர்தான் ரத்தினசபாபதியிடம் பேசி திரும்பவும் அதிமுகவுக்கு அழைத்து வந்திருக்கிறார். இதுதொடர்பாக நாம் புதுக்கோட்டை: விஜயபாஸ்கர் வலையில் ரத்தினசபாபதி என்று செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், “ரத்தினசபாபதியைத் தொடர்ந்து அவரது தம்பியான பரணி கார்த்திகேயனும் அதிமுகவுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கர் இங்கிலாந்து பயணம் மேற்கொண்ட மேற்கொண்ட நேரத்தில், ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்துவிட்டார் பரணி கார்த்திகேயன். இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவினரிடம் விசாரித்தபோது, “எம்.எல்.ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக ரத்தினசபாபதிக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர ரத்தினசபாபதிக்கு பல்வேறு உதவிகளை செய்தது திமுக தரப்பு. இதனால் அமமுகவிலிருந்து விலகுவது என்ற முடிவெடுத்தபோது, அதிமுக செல்லாமல் ரத்தினசபாபதி திமுக செல்வதாகத்தான் இருந்தது.

ஆனால், காலத்தின் கட்டாயத்தால் சட்டத்திற்கு உட்பட்டு தன்னுடைய பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக விஜயபாஸ்கர் மூலம் முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். தற்போது தனக்கு உதவி செய்த திமுகவுக்கு கைம்மாறாகவே திமுகவில் தனது தம்பியை இணையச் சொல்லியிருக்கிறார் ரத்தினசபாபதி” என்கிறார்கள்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: திமுக புள்ளிகளுக்கு பாஜக வலை!


அதிகாரம் - அறநெறி: சமகாலத்தின் இரு சாட்சிகள்!


ரஜினிக்கு அதிகரிக்கும் அழுத்தம்!


ஜெ. நினைவிடம்: வெளிநாட்டில் இருந்தபடி பன்னீரை ஆட்டுவிக்கும் எடப்பாடி


சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் அளித்த சலுகை!


செவ்வாய், 3 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon