மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 3 செப் 2019

டிஜிட்டல் திண்ணை: திமுக புள்ளிகளுக்கு பாஜக வலை!

டிஜிட்டல் திண்ணை:  திமுக புள்ளிகளுக்கு பாஜக வலை!

மொபைல் டேட்டாவை ஆன் செய்த சில நிமிடங்களில், காலை வணக்கம் சொல்லி ஆங்கில ரோஜாப் பூக்கள் வாட்ஸ் அப்பின் வழியே வந்து விழுந்தன. அடுத்த சில நிமிடங்களில் மெசேஜ் வந்தது.

“தமிழகத்தில் பாஜகவைக் காலூன்ற வைப்பதற்காகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் அதன் அகில இந்திய தலைவர் அமித் ஷா. எதிரியை பலவீனப்படுத்துவதன் மூலம் தான் பலமாவது என்பது அரசியலின் அடிப்படை சூத்திரங்களில் ஒன்று. அந்த வகையில் தமிழ்நாட்டில் சக்தி வாய்ந்த கட்சிகளாக இருக்கும் திமுக, அதிமுக ஆகிய இரண்டுமே பாஜகவின் வளர்ச்சியை பாதிக்கும் காரணிகள்தாம். எனவே இவ்விரு கட்சிகளையும் பலவீனப்படுத்திவிட்டு, பாஜகவுக்கு ஒரு மின்சாரத் தலைமையைக் கொண்டுவந்தால் வரும் சட்டமன்றத் தேர்தலில் காலூன்றலாம் என்பது அமித் ஷாவின் கணக்கு.

இதில் எதிரிகளை பலவீனப்படுத்துதல் என்ற வகையில் இப்போது கூட்டணிக் கட்சியாக இருக்கும் அதிமுகவின் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் பற்றி முழு விவரங்களும் பாஜகவின் கையில் இருக்கின்றன. அதனால்தான் பாஜகவுக்கு எதிராக வாய் திறக்க முடியாமல் அவர்கள் அடக்கி வாசிக்கிறார்கள். அதேநேரம் திமுக இப்போது தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருப்பதால் பாஜகவை எதிர்த்து பலமாக முழக்கமிட்டு வருகிறது.

திமுகவை பலவீனப்படுத்துவது குறித்து பல்வேறு திட்டங்களை வைத்திருக்கிறது பாஜக. அதில் ஒன்றுதான் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு அரசியல் ரீதியாக அல்லாமல் வேறு வகைகளில் வழக்குகள் மூலம் நெருக்கடி தருவது என்ற முடிவு. ஆனால் தலைவர் மீது கைவைக்கும் அதேநேரம், திமுகவின் பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் முக்கியப் பிரமுகர்களை நோக்கி கவனம் திருப்பியிருக்கிறது பாஜக.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக அபார வெற்றி பெற்றதில் இருந்தே, திமுகவின் அனைத்து எம்.பி.க்களின் ஜாதகத்தையும் கலெக்ட் செய்யச் சொல்லி உத்தரவிட்டிருந்தார் அமித் ஷா. கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி மின்னம்பலத்தில் வெளியான செய்தியில், ‘23 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி சார்பில் வென்ற உறுப்பினர்கள் ஆகியோரின் அரசியல் ஜாதகத்தை விசாரித்து தனக்கு அறிக்கை அளிக்க வேண்டுமென மத்திய உளவுத் துறைக்கு மட்டுமல்ல, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார் அமித் ஷா. அரசியல் ஜாதகம் என்றால்... அவர்கள் ஒவ்வொருவரும் எந்தக் கட்சியிலிருந்து அரசியல் வாழ்வைத் தொடங்கினார்கள், கட்சி மாறுவதில் அவர்களின் வரலாறு என்ன, அவர்களின் ஆரம்பக்கால தொழில் என்ன, இப்போதைய தொழில் என்ன, இதன் மூலம் எகிறிய சொத்து மதிப்பு என்ன, இன்னும் குறிப்பாக இந்த 37 எம்.பி.க்களில் கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பவர்கள் யார், வலை விரித்தால் விழக் கூடியவர்கள் யார் என்பன போன்ற விவரங்களைத்தான் அமித் ஷா அறிக்கையாகக் கேட்டிருக்கிறார். இதற்காக முழு மூச்சில் தகவல் திரட்டும் பணி நடந்துவருகிறது’ என்று தகவல் வெளியிட்டிருந்தோம்.

அந்தத் தகவல் திரட்டும் பணி முடிந்து அமித் ஷாவின் மேஜைக்குத் தகவல்கள் சென்றுவிட்டன. திமுக எம்.பி.க்களின் அரசியல் ஜாதகத்துக்குள் அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் அவரவருக்கான உட்கட்சி அரசியல் எதிரிகள் யார் என்ற பட்டியலும் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆக, திமுகவில் சீனியர்களாக இருந்து அல்லது கடுமையான உழைப்பாளிகளாக இருந்தும்கூட கட்சித் தலைமையால் பதவி அளிக்காமல் ஒதுக்கப்பட்டவர்களைத்தான் பாஜக குறி வைக்கிறது. அந்தந்த மாவட்டங்களில் நல்ல செல்வாக்கு இருந்தும்கூட தலைமையால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் திமுகவில் அநேக மாவட்டங்களில் இருக்கிறார்கள். அவர்களை நோக்கித்தான் இப்போது பாஜகவின் தூண்டில் வீசப்படுகிறது.

‘மத்திய அரசின் ஒவ்வொரு துறையிலும் ஏராளமான அரசு நியமனப் பதவிகள் இருக்கின்றன. பல்வேறு துறைகளின் ஆணையம், வாரியம் உள்ளிட்ட அமைப்புகளில் உங்களை நியமிக்கிறோம். தேசிய அரசியலுக்கு ஆதரவு தாருங்கள்’ என்று திமுகவில் நீண்ட காலமாக அதிருப்தியில் இருக்கும் அந்த செல்வாக்குப் பிரமுகர்களிடம் பேச ஆரம்பித்துவிட்டனர் பாஜகவினர். மேலும், திராவிடக் கொள்கையில் பிடிப்பாக இருப்பவர்களையே தங்கள் கட்சிக்குக் கொண்டுவர தீவிரம் காட்டுகிறது பாஜக. அப்போதுதான், ‘இவர்களே பாஜகவுக்குப் போகிறார்கள் என்றால் நாமும் போகலாம்’ என்று மற்ற கட்சியினரையும் யோசிக்கவைக்கும் என்பதே இதற்கான பின்னணி.

இந்த வகையில் திமுகவில் இப்போது செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் என்று மாற்றுக் கட்சிகளிலிருந்து வந்தவர்களுக்கே திமுகவில் பதவிகள் வழங்கப்படுவதைக் கண்டு அதிருப்தியில் இருக்கும் சில முக்கிய திமுக பிரமுகர்களுக்கு ஸ்கெட்ச் போட்டுவிட்டது பாஜக. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க எல்லாம் திமுகவிலிருந்து பாஜகவுக்குச் செல்வார்கள் என்கிறார்கள் சில ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள். அதாவது மற்ற மாநிலங்களில் செய்து வரும் ஆபரேஷனை தமிழகத்திலும் நடத்திப் பார்க்க முடிவெடுத்துவிட்டது பாஜக” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

அதை காப்பி செய்து ஷேர் செய்துகொண்ட ஃபேஸ்புக், “திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் இந்த தகவல் அரசல் புரசலாக போயிருக்கிறது. கட்சியில் ஊசலாட்டத்தில் இருப்பவர்களையும், வழக்கு விவகாரங்களில் சிக்கியிருப்பவர்களையும் பெரிய அளவு பதவி கொடுத்தும், வழக்கைக் காட்டி பயப்படுத்தியும் தூக்குவதற்கு பாஜக பேரம் பேசுகிறது என்பதை அவரும் அறிந்தே வைத்திருக்கிறார். அதனாலோ என்னவோ சில வாரங்களாகவே ஸ்டாலினின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள். முன்பெல்லாம் ஸ்டாலினின் கவனத்துக்கு ஒரு சில விஷயங்களைப் புகார்களாகக் கொண்டு சென்றால் அது கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கும். நடவடிக்கை எடுத்தாலும் மிக தாமதமாகவே எடுப்பார். சில புகார்களில் நடவடிக்கையே எடுக்க மாட்டார் என்று புகார் கொடுத்தவர்களுக்கே தெரியும். ஆனாலும் கொடுக்க வேண்டும் என்பதற்காகக் கொடுப்பார்கள். ஆனால், சில வாரங்களாக ஸ்டாலினின் அணுகுமுறை மாறியிருக்கிறது. தன்னிடம் வரும் உட்கட்சிப் பிரச்சினைகள் பற்றி உடனடியாக சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுகிறார். அவற்றைத் தீர்க்க முனைப்பு காட்டுகிறார். இதற்கும் பாஜகவின் திமுக பிரமுகர்கள் வலை வீச்சுக்கும் சம்பந்தம் இருக்குமோ என்று தெரியவில்லை” என்ற ஸ்டேட்டஸை போஸ்ட் செய்துவிட்டு ஆஃப் லைன் போனது ஃபேஸ்புக்.


மேலும் படிக்க


ரஜினிக்கு அதிகரிக்கும் அழுத்தம்!


டிஜிட்டல் திண்ணை: அறிவிக்கப்படாத துணை முதல்வர்கள்!


கலைஞர் வீட்டு நிகழ்ச்சியில் விஜய்


சதாசிவம் இனி ஆளுநர் இல்லை: எடப்பாடிக்கு இழப்பா?


சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் அளித்த சலுகை!


கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

செவ்வாய் 3 செப் 2019