மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஏப் 2020

கனவுத் திட்டம்: அமெரிக்காவில் முதல்வர் ஆய்வு!

கனவுத் திட்டம்: அமெரிக்காவில் முதல்வர் ஆய்வு!

வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கும் தமிழக முதலமைச்சர் நேற்று செப்டம்பர் 2ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள பஃபல்லோ நகருக்குச் சென்றார். அப்போது சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைய உள்ள தனது கனவுத் திட்டமான கால்நடை ஆராய்ச்சி நிலையம் பற்றிய விரிவான ஆய்வில் ஈடுபட்டார் முதல்வர்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் சேலம் மாவட்டம் வீரகனூரில் நடைபெற்ற விழாவில் பேசிய முதல்வர், “ஏழை, எளிய விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்பதற்காக ஆடு, பசு மாடு, கொடுக்கும் திட்டம் போன்றவற்றைச் செயல்படுத்தியிருக்கிறோம். இந்தியாவில் வேறு எங்கும் இந்தத் திட்டம் இல்லை. இந்தத் திட்டம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதற்காக உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி நிலையம் ஒன்று கூட்டுரோடு அருகில் 800 ஏக்கர் பரப்பளவில், பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்திருந்தார். தமிழக சட்டமன்றத்தில் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி, விதி எண் 110இன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை தொழிலை மேம்படுத்தும் வகையில் ஆசியாவிலே மிகப்பெரிய கால்நடை பூங்கா 600 ஏக்கர் பரப்பளவில், 396 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்” என்றும் அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி.

மக்கள் மன்றம், சட்டமன்ற அறிவிப்பைத் தொடர்ந்து அந்தக் கால்நடை ஆராய்ச்சி நிலையம் தொடர்பாக சர்வதேச மன்றத்திலும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருக்கிறார் முதல்வர். செப்டம்பர் 2ஆம் தேதி அமெரிக்காவின் பஃபல்லோ நகரில் இருக்கும் கால்நடை பண்ணைக்குச் சென்றார் எடப்பாடி.

பல்வேறு நாட்டு இன மாடுகளின் மரபணு பராமரிப்பு மற்றும் அந்த மரபணுவைக் கொண்டு அதிகமாகப் பால் தரக்கூடிய மாற்றங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தையும் நோய் எதிர்ப்பு சக்தி உடைய புதிய ரக மாடுகள் மற்றும் ஆடுகள் உருவாக்கம் தொழில்நுட்பத்தையும் இந்த நிறுவனம் செய்து வருகிறது.

இந்தப் பண்ணை நிறுவனத்துக்குச் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்குள்ள தொழில்நுட்பங்கள் பற்றிக் கேட்டறிந்தார். மேலும், சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த கால்நடை பூங்காவில் இந்தத் தொழில்நுட்பங்களைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கேட்டறிந்தார்.

மேலும் பஃபல்லோ பண்ணையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தாழ்வான கொட்டகை அமைப்பு, சிறந்த எரு மேலாண்மை, சமச்சீர் தீவனம், தீவன வங்கிகள், பண்ணைப் பதிவேட்டு முறைகள், வெப்பம் மற்றும் குளிரினால் ஏற்படும் அயர்ச்சிகளைக் குறைக்கும் வழிமுறைகள், புதிதாகப் பிறந்த கன்றின் உடல்நலம் சார்ந்த குறிப்பேடுகள், தடுப்பூசி அட்டவணை பற்றியும் மடிவீக்க நோய், கருப்பை அழற்சி நோய், வளர்சிதை மாற்ற நோய்கள் போன்ற நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றியும் முதலமைச்சர் ஆர்வமுடன் கேட்டறிந்தார்.

பண்ணையிலுள்ள கால்நடைகளை ஆர்வமாகப் பார்வையிட்ட முதல்வர் அவற்றின் சிறப்புகள் பற்றியும் அங்குள்ளவர்களிடம் கேட்டறிந்தார். தற்போது அமெரிக்கப் பயணத்தின் முக்கிய விஷயமாக இந்த ஆய்வை நடத்தி உள்ளார் முதலமைச்சர் இதன் மூலம் கிடைக்கும் தகவல்கள், தரவுகளைக் கொண்டு சேலத்தில் அமைக்கப்படவுள்ள தலைவாசல் கால்நடை ஆராய்ச்சி நிலையம் தரமானதாக அமையும் என்கிறார்கள் அதிகாரிகள் தரப்பில்.

இந்த ஆய்வின்போது முதல்வருடன் தொழில்துறை அமைச்சர் சம்பத், தகவல் துறை அமைச்சர் உதயகுமார், பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் பல அதிகாரிகள் இருந்தனர்.


மேலும் படிக்க


ரஜினிக்கு அதிகரிக்கும் அழுத்தம்!


டிஜிட்டல் திண்ணை: அறிவிக்கப்படாத துணை முதல்வர்கள்!


கலைஞர் வீட்டு நிகழ்ச்சியில் விஜய்


சதாசிவம் இனி ஆளுநர் இல்லை: எடப்பாடிக்கு இழப்பா?


சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் அளித்த சலுகை!


செவ்வாய், 3 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon