மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 3 செப் 2019

அதிகாரம் - அறநெறி: சமகாலத்தின் இரு சாட்சிகள்!

அதிகாரம் - அறநெறி:  சமகாலத்தின் இரு சாட்சிகள்!

- இனியன் ஜான்

தமிழகம் நேற்று மாலையில் இருந்து அந்த இருவரைப் பற்றித்தான் ஒப்பிட்டுப் பேசி வருகிறது. இருவருமே தமிழ்நாட்டின் அடையாளங்களாகக் கருதப்படுபவர்கள்.

இருவரும் பெரும் செல்வந்தர்கள். வறுமை என்பதை இருவரும் அறியாதவர்கள். இருவருமே மாநிலக் கல்லூரியில் பயின்றவர்கள். இருவருமே சட்டப் படிப்பு படித்த பட்டதாரிகள். இருவரும் நாடாளுமன்றத்தை அலங்கரித்த ஜாம்பவான்கள். இருவரும் மதிநுட்பம் காெண்டவர்கள். இருவர் பேசினாலும் நாடாளுமன்றம் செவி சாய்க்கும். இருவருக்கும் வயது 75. இருவருமே நாட்டுக்கு உழைக்க வந்தவர்கள்.

“விடுதலைப் புலிகளை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரித்தேன், நாளையும் ஆதரிப்பேன்” என்று நாடாளுமன்றத்தில் ஒருவர் முழங்கியதைத் திருமங்கலம் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியதற்காக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது 2004இல்...

அமெரிக்காவில் தமது சுற்றுப்பயணத்தை முன்கூட்டியே முடித்துக்கொண்டு 'தாயகம்' தமிழகத்துக்கு வந்தடைகிறார் ஒருவர். வீட்டுக்குச் செல்லக்கூட அனுமதிக்கவில்லை. விமான நிலையத்தில் கைது செய்யப்படுகிறார். சென்னை மதுரை வேலூர் என அலைக்கழிக்கப்படுகிறார். ஏறத்தாழ 19 மாதக் காலம் 'பொடா' சட்டத்தை எதிர்த்து களத்தில் நிற்கிறார். தம் மீதான குற்றத்தை ஒருபோதும் அவர் மறுக்கவில்லை. ஆனால், வழக்கைத் தவிடு பொடியாக்குகிறார். காரணம் தமது கொள்கையின் உறுதி.

“தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரிப்பதோ, அவர்களுக்கு ஆதரவாக உரையாற்றுவதோ, கூட்டம் போட்டு பேசுவேதா குற்றம் அல்ல” எனக் கருத்துரிமைக்கு களம் அமைத்துக் கொடுக்கிறார் அந்த ஒருவர்.

தன்மீது பெரிதும் அன்பும், பாசமும், நட்பும் வைத்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்... “I Salute you...” - “நான் உங்களை வணங்குகிறேன்” என்று அந்த மனிதரைப் பாராட்டுகிறார்.

அதே பிரதமர் மன்மோகன் சிங், ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் மெளனமாக இருந்ததைக் கண்டு, 2009இல் “குற்றம் சாட்டுகிறேன்” - “I Accuse” என்று நூல் எழுதுகிறார். அதன் வெளியீட்டு விழாவில் பேசுகிறார் ஒருவர். அவர் மீதான வழக்கு - தேசத் துராேக வழக்கு - வழக்காடு மன்றத்தில் வருகிறது.

ஏறத்தாழ 10 ஆண்டுகள் அந்த வழக்கு நடைபெறுகிறது. வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் தேசத் துரோக வழக்கு - பல்வேறு தலைவர்கள் மீது வெள்ளையர்களால் போடப்பட்டது. சுதந்திர இந்தியாவில் தேசத் துரோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒரே ஒருவர்தான்.

அஞ்சவில்லை, அசரவில்லை... “நீங்கள் கேட்டுக்கொண்டதால்.... குறைந்தபட்ச தண்டனையை தங்களுக்கு வழங்குகிறேன்” என்கிறார் நீதிபதி. அதிர்ச்சி அடைந்த அந்த மனிதர், “குறைந்தபட்ச தண்டனையை நான் எப்போது கேட்டேன்? நீதிமன்றத் தீர்ப்பைத் திருத்துங்கள். அதிகபட்ச தண்டனையை வழங்குங்கள்” என்று முழங்குகிறார். நீதிபதி திடுக்கிடுகிறார். நீதிமன்றமும் மக்கள் மன்றமும் திகைத்து நிற்கிறது அந்த ஒருவரைக் கண்டு.

மற்றொருவர்...

1972இல் அரசியல் களத்திற்கு வருகிறார். 1976இல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர், 1985 இல் காங்கிரஸ் கட்சியின் தேசிய இணைச் செயலாளர் என்று கட்சி பதவிகளை மட்டுமல்ல... 1985 முதல் 2014 வரை சில காலங்கள் தவிர்த்து பெரும்பாலான காலங்களில் மத்திய அமைச்சராகப் பல்வேறு பொறுப்புகளை அலங்கரிக்கிறார்.

முன்னவரோ... மத்திய அமைச்சர் பதவி தமக்கு வந்தபோதும் வேண்டாம் என்றவர். பின்னவரோ... வர்த்தகத் துறை, உள்விவகாரத் துறை, நிதித் துறை, உள் துறை என்று பல்வேறு அதிகாரமிக்க பதவிகளை அலங்கரித்தவர்.

அவர்... அழுத்தமான வாதங்களை தம் அடி வயிற்றிலிருந்து எழுப்புவார்.

இவர்... அழகு தரும் நவீன ஆங்கிலத்தில் உரையாற்றுவார்.

அவர்... தம் லட்சிய நோக்கத்திற்காக பலமுறை சிறை சென்றவர். தண்டனையை விரும்பி ஏற்றவர். நீதிமன்றத்தில் தம் நியாயங்களை எடுத்துரைத்து வென்றவர்.

இவர்... ஊழல் வழக்கில் இப்போது மட்டுமல்ல...1991லேயே தமது அமைச்சர் பதவியை விட்டு விலகியவர். இப்போதும் ஊழல் வழக்கில் கைதாகி இருப்பவர்.

முன்னவர்... குறைந்தபட்ச தண்டனை வேண்டாம். அதிகபட்ச தண்டனையைத் தாருங்கள் என்று கம்பீரமாக முழங்கியவர்.

பின்னவர்... வயதாகிவிட்டது என்னைச் சிறையில் அடைத்து விடாதீர்கள் என்று கெஞ்சுகிறார்.

இருவருமே தாய்த் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டுமே நீதிமன்றங்களில் நிகழ்ந்து வரும் காட்சிகள்.

முன்னவர் வைகோ... விமர்சனங்கள் பல இருப்பினும் அவரது எதிரிகள்கூட அவரின் லட்சியத்தின் மீது குறை காண இயலாது.

பின்னவர் ப.சிதம்பரம்... பாராட்டுகள் பல இருப்பினும் அவரது நண்பர்கள்கூட அவரது நேர்மை மீது குறை காண இயலும்.

பதவிகளை அலங்கரிப்பவர்களை விட... லட்சியத்திற்காக வாழ்பவர்களையே மக்கள் நினைவில் வைத்திருப்பர்.

20 ஆண்டுகளுக்கு முன்னர், தமிழகத்தின் வேளாண்மைத் துறை அமைச்சர் யார், இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் யார் என்னும் கேள்விக்கு உடனடி பதில் நம்மிடம் இல்லை.

ஆனால்... 50 ஆண்டுகள் கழிந்தும் காமராசரும், கக்கனும், ஜீவாவும் நினைவுகூரப்படுகிறார்கள்.

அதிகாரம் பெரிதல்ல... அறநெறி அரசியலே பெரிது என்பதை நீதிமன்றங்கள் உணர்த்துகின்றன. மக்கள் மன்றங்கள் உணரும் நாள் என்னாளோ ?

கட்டுரையாளர் குறிப்பு:

இனியன் ஜான்...

கல்லூரிக் காலம் தொட்டே அரசியலில் ஈடுபட்டு வந்த இனியன் ஜான், வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தளம் கட்சியில் மாணவர் அணி மாநிலப் பொதுச் செயலாளராக இருந்தவர். தமிழருவி மணியன் நடத்திய ரவுத்திரம் இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர். துடிப்பான அரசியல் பணிகளுக்காக இளைய தலைமுறை என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார்.

தொடர்புக்கு [email protected]


மேலும் படிக்க


ரஜினிக்கு அதிகரிக்கும் அழுத்தம்!


டிஜிட்டல் திண்ணை: அறிவிக்கப்படாத துணை முதல்வர்கள்!


கலைஞர் வீட்டு நிகழ்ச்சியில் விஜய்


சதாசிவம் இனி ஆளுநர் இல்லை: எடப்பாடிக்கு இழப்பா?


சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் அளித்த சலுகை!


கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

செவ்வாய் 3 செப் 2019