மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 2 செப் 2019

ஜெ. நினைவிடம்: வெளிநாட்டில் இருந்தபடி பன்னீரை ஆட்டுவிக்கும் எடப்பாடி

ஜெ. நினைவிடம்: வெளிநாட்டில் இருந்தபடி பன்னீரை ஆட்டுவிக்கும் எடப்பாடி

எடப்பாடி வெளிநாட்டுப் பயணம் புறப்படும்போது ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு செல்லவில்லை என்பது பற்றியும், ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் அலங்காரம் செய்யும் பொறுப்பை, எடப்பாடி தமிழகத்தில் இல்லாத நேரம் பார்த்து பன்னீரின் இளையமகன் ஜெய பிரதீப் எடுத்துக் கொண்டது பற்றியும், அதிமுகவுக்குள் சலசலப்புகள் ஏற்பட்டன.

இந்த சலசலப்புகளுக்கு வெளிநாட்டில் இருந்தபடியே செக் வைத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி.

அந்த செக் என்ன என்பது பற்றிப் பார்க்கும் முன் செப்டம்பர் 1 ஆம் தேதி மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் நாம் குறிப்பிட்ட சில வரிகளைப் பார்த்துவிடுவோம்.

“கடந்த வியாழக்கிழமை காலை 7.29 மணிக்கு பூங்குன்றன் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தின் படத்தை தன் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். கண்ணீர் வருவதாகக் குறிப்பிட்டு அவர் பதிவிட்டிருந்த அந்தப் படத்தில் ஜெ சமாதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பூக்கள் மிகச் சிறிதளவே வைக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருந்தார். அடுத்த சில மணி நேரங்களில் ஜெ சமாதியில் நினைவிடப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையிலும் ஒரு டீம் உள்ளே சென்று மளமளவென மலர் அலங்காரங்களைச் செய்தார்கள். இதுபற்றி பூங்குன்றனுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது மதியம் 2 மணிக்குமேல் அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் காலையில் கண்ணீர், இப்போது ஆனந்தக் கண்ணீர் என்று குறிப்பிட்டு ஜெவின் சமாதியில் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்ததைக் காட்சியாகப் பதிவிட்டார்.

மெரினாவில் இருக்கும் கலைஞரின் நினைவிடத்தில் தினம்தினம் ஒவ்வொரு விதத்தில் மலர் அலங்காரம் செய்யப்பட்டு காண்போரை கவர்ந்து இழுக்கிறது. ஆனால், ஆளும்கட்சியாக இருக்கும் அதிமுகவின், முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதா சமாதியில் மலர் அலங்காரம் செய்வதற்கு யாரும் இல்லை என்ற நிலைமை. இதைக் குறிப்பிட்டுத்தான் பூங்குன்றன் கண்ணீர் வருகிறது என்று குறிப்பிட்டார். இந்தப் பதிவைப் பார்த்து சிலர் உடனடியாக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் கவனத்துக்குக்கொண்டு சென்றனர். அடுத்த சில மணி நேரங்களில் மலர் அலங்காரம் நடைபெற்றுவிட்டது. இனிமேல் ஜெவின் நினைவிடத்தில் மலர் அலங்காரம் செய்யும் பணியை ஓபிஎஸ்ஸின் மகன் ஜெயபிரதீப் வசம் ஒப்படைத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

இந்த நிலையில் நினைவிடத்தை மையமாக வைத்து இன்னும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது ஓபிஎஸ் வட்டாரம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் வாழ்க்கையில் முதன்முறையாக அரசு முறை பயணமாக வெளிநாடு செல்கிறார். அப்படிப்பட்டவர் ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்து மரியாதை செலுத்திவிட்டு சென்றிருக்க வேண்டும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. தனக்கு இப்படிப்பட்ட இடத்தை உருவாக்கிக் கொடுத்த ஜெயலலிதாவுக்கே மரியாதை செய்யாமல் அவர் வெளிநாடு புறப்பட்டு இருக்கிறார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு நெருக்கமான வட்டாரங்களில் அதிருப்தியைப் பகிர்ந்து வருகிறார். இந்தத் தகவல் வெளிநாட்டில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியிடமும் கொண்டு செல்லப்பட்டு விட்டது” என்பதுதான் மின்னம்பலம் வெளியிட்ட டிஜிட்டல் திண்ணை செய்தி.

அதாவது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஜெயலலிதாவின் நினைவிடம் மீது அக்கறையில்லை என்ற தோற்றத்தை ஓ.பன்னீர் உருவாக்க முயல்கிறார் என்பதாகவே அதிமுக வட்டாரத்தில் இது பார்க்கப்பட்டது. தகவல் முதல்வரை சென்றடைந்தவுடன், முதல்வரின் உத்தரவுக்கேற்ப அமைச்சர் ஒருவர் ஓ.பன்னீரைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்.

“இந்த விஷயத்துல முதல்வர் அதிருப்தியா இருக்காரு. உடனே இதுபத்தி ஒரு விளக்கம் கொடுக்கச் சொல்லுங்க. அம்மா நினைவிடத்துல கட்டுமானப் பணி நடக்கும்போது எப்படி போக முடியும்? அதுவும் இல்லாமல் பூ அலங்காரத்தை ஜெய ப்ரதீப் செய்ய வேண்டாம். தலைமைக் கழகமே செய்யும். இதை உங்க தரப்பை விட்டே விளக்கம் கொடுக்க வையுங்க” என்று சொல்லியிருக்கிறார் அந்த அமைச்சர்.

இதையடுத்து இன்று ஜெயபிரதீப்பே ஒரு விளக்கத்தை அளித்திருக்கிறார். அதில், “அம்மாவின் நினைவிடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் எல்லாரும் உள்ளே செல்ல இயலாது. மேலும் தலைமைக் கழகம் சார்பாகவே பூ அலங்காரம் நடைபெறும்” என்று அதில் தெரிவித்திருக்கிறார்.

வெளிநாட்டில் இருந்தபடியே பன்னீரை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள் அதிமுகவினர்.

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

திங்கள் 2 செப் 2019