மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 7 ஜுன் 2020

பாஜகவினர் ஆளுநர்களா? புதுவை முதல்வர்

பாஜகவினர் ஆளுநர்களா? புதுவை முதல்வர்

பாஜகவினரை ஆளுநர்களாக நியமனம் செய்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தெலங்கானா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். தெலங்கானாவின் முதல் பெண் ஆளுநராக பாஜக தமிழக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, பாஜக தமிழகத் தலைவர் பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தமிழிசை விலகியுள்ளார். மேலும் கடும் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்தான் இது என்றும் பெருமிதமாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழிசைக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று (செப்டம்பர் 2) செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் நாராயணசாமி, “தமிழகத்தை சேர்ந்த தமிழிசைக்கு ஆளுநர் பதவி கிடைத்து இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது, அவருக்கு வாழ்த்துக்கள். சர்காரியா கமிஷனின் பரிந்துரையில் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களை ஆளுநர்களாகவோ அல்லது துணை நிலை ஆளுநர்களாகவோ நியமிக்கக் கூடாது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸும் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களை ஆளுநராக நியமனம் செய்துள்ளதுதான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் பாஜக அரசு அப்பட்டமாக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினரையும், பாஜகவினரையும் ஆளுநர்களாக நியமித்து வருவது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது” என்று தெரிவித்துள்ளார்.

புதுவை துணை நிலை ஆளுநராக இருக்கும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி, பாஜகவில் இணைந்து அக்கட்சியின் சார்பில் டெல்லி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர். தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, புதுவை துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆனால், கிரண் பேடிக்கும், புதுவை முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: அறிவிக்கப்படாத துணை முதல்வர்கள்!


சதாசிவம் இனி ஆளுநர் இல்லை: எடப்பாடிக்கு இழப்பா?


லண்டன்: உடையும் எடப்பாடியின் இரண்டாவது ஒப்பந்த மர்மம்!


எடப்பாடியை விமர்சிக்க விரும்பவில்லை: தினகரன்


புழல் சிறை: முஸ்லிம் கைதிகள் மீது தாக்குதலா?


திங்கள், 2 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon