மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

சதாசிவம் இனி ஆளுநர் இல்லை: எடப்பாடிக்கு இழப்பா?

சதாசிவம் இனி ஆளுநர் இல்லை:  எடப்பாடிக்கு  இழப்பா?

குடியரசுத் தலைவர் இன்று (செப்டம்பர் 1) வெளியிட்டுள்ள புதிய ஆளுநர்கள் பட்டியலில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட செய்தியே தமிழக ஊடகங்களை ஆக்கிரமித்து வருகிறது.

ஆனால் அதைவிட முக்கியமாக ஆளுந்தரப்பு கவலையோடு கவனிக்கும் இன்னொரு விஷயம், கேரள ஆளுநராக இருந்த சதாசிவத்துக்கு பதில் ஆரிஃப் முகமது கான் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதைத்தான். லண்டனில் இருந்து அமெரிக்கா புறப்படும் பிசியில் இருந்த தமிழக முதல்வர் எடப்பாடிக்கு கேரள ஆளுநர் மாற்றம் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் மேல்நிலை பிரமுகர்கள் சிலரிடம் நாம் பேசியபோது,

“உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம் பணி ஓய்வுக்குப் பின் கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்போது இது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் நம்பிக்கையாக இருந்தது. ஏனெனில் சதாசிவமும் கொங்கு பகுதியைச் சேர்ந்தவர்தான் . எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர் சதாசிவம்.

2017 ஆம் ஆண்டு முதன் முதலாக முதல்வர் ஆன புதிதில் டெல்லியின் பல்வேறு நடவடிக்கைகளை எதிர்கொள்ளவும், டெல்லிக்கும் -எடப்பாடிக்கும் பாலம் அமைத்துக் கொடுத்தவரும் சதாசிவம்தான் என்பது முதல்வருக்கு நெருக்கமானவர்களுக்கு நன்கு தெரியும்.

இப்போது மத்திய அரசு நினைத்திருந்தால் சதாசிவத்தின் பதவிக் காலத்தை நீட்டித்திருக்க முடியும். ஆனால் நீட்டிக்கவில்லை. இதன் மூலம் மத்திய அரசுக்கு தொடர்புடைய ஒரு அந்தஸ்தான பதவியில் இப்போது சதாசிவம் இல்லை. எனவே இது தனிப்பட்ட முறையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு இழப்புதான். அதேநேரம் ஆரம்ப காலத்தில் சதாசிவத்தின் அறிவுரைகளைக் கேட்டு எடப்பாடி இப்போது தன்னை நிலை நிறுத்திக் கொண்டுவிட்டார். அதனால் இப்போது பெரிய பிரச்சினை இல்லை. ஆனாலும் இதன் மூலம் எடப்பாடிக்கு மத்திய அரசு ஏதேனும் ஒரு செய்தியை சொல்ல முன்வருகிறதோ என்பது குறித்தும் அதிமுகவின் சீனியர் அமைச்சர்கள் யோசிக்கத் தொடங்கிவிட்டனர்” என்கிறார்கள்.

ஞாயிறு, 1 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon