மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 23 பிப் 2020

இடைவெளியற்ற நெருக்கடிகளும், கண் சிமிட்டும் கனவும்!

இடைவெளியற்ற நெருக்கடிகளும், கண் சிமிட்டும் கனவும்!

ஒரு கப் காபி!

நம்மை நாம் அறிவதற்கு முன்பே நம் கனவுகளை நாம் அறிந்து விடுகிறோம். அதன் வாயிலாகவே நம்மையும் நாம் அறியத் துவங்குகிறோம். வளரும் பருவத்தில் காதலை விட மகத்துவமாகவும் மயக்கமாகவும் இருப்பது நம் எதிர்காலத்தைப் பற்றிய லட்சிய கனவுகள் தான்.

ஒரு விதை ஒன்று உள்ளுக்குள் நட்டுவிட்டோம். அது மனதிற்குள் ஆழமாய் பதிந்து விட்டது. இனி அதுதான் மையம்; அதுதான் ஈர்ப்பு விசை. நாம் வளர வளர விதையும் வளர்கின்றது. செடியாய்; சிறு மரமாய். ஒரு கட்டத்தில் வாழ்வின் காட்டாற்று வெள்ளத்தில் நாம் வேறெங்கோ அடித்துச் செல்லப்பட, விதையின் வளர்ச்சி தடைபடுமா என்ன?

தீடீரென்று ஒரு நாள், உள்ளிருக்கும் மரத்தை பார்க்கும் போது; அது விஸ்வரூபம் எடுத்து ராட்சஸ மரமாக மாறியிருக்க; விதைத்த நாம் அதே சிறுவனாக அதன் முன் நின்றிருக்கும் போது - ஒரு திகைப்பு. அந்த திகைப்பு தான் ஒரு கலைஞனுக்கான குற்றவுணர்ச்சி; அந்த திகைப்பு தான் ஆட்காட்டி.

அன்றாட வாழ்வு கொண்டிருக்கும் பொருளாதார சிக்கல்களும், தனிப்பட்ட வாழ்வின் மீதான கடமைகளும், கனவுகளை நோக்கிய ஓட்டத்தின் வேகத்தை கணிசமாக குறைக்கத் துவங்குகின்றன. வேகக் குறைவு மனக் குறைவாகவும் கற்பனைக் குறைவாகவும் பிம்பங்களை உண்டாக்கத் துவங்குகின்றன. சத்யஜித் ரேவின் மகாநகர் படத்தில் வரும் ஒரு வசனம் போல, “Our daily bread has made us cowards".

துவக்க நாட்களில் கனவுகளுக்காக மட்டுமே செலவிடப்பட்ட ஒரு தினம் ஒரு காலமாக மாறி, ஒரு தினத்தில் கனவுக்கான நேரத்தை விரல் விட்டு எண்ண வைக்கும் நிலையை அடைகிறது.

கலீல் ஜிப்ரானின் ஒரு கதையில், ஒரு நரி சூரிய உதயத்தில் அதன் நிழலைப் பார்த்து, “எனக்கு இருக்கும் பசிக்கு இன்று மதிய உணவிற்கு ஒரு ஒட்டகமே வேண்டும்” எனக் கூறுகிறது. காலை முழுவதும் அது ஒட்டகங்களை தேடி பார்த்து களைத்தது தான் மிச்சம். நண்பகலில் நரி மீண்டும் தனது நிழலைக் கண்டது. அப்போது அது கூறுகிறது, “எனக்கொரு எலி இருந்தால் போதும்”. இக்கதையின் நோக்கம் வேறென்றாலும், கனவுகளுடன் மற்றொரு வடிவிலும் பொருத்திப் பார்க்கலாம்.

இக்கதை அனைத்துப் பசிக்கும் பொருந்தும். நாளடைவில் வாழ்வின் மீதான களைப்பு அந்த நரி போல ஒட்டகத்திற்கு ஆசைப்பட்டு எலிக்கு திருப்தி அடையும் நிலைக்கு தள்ளுகிறது.

ஆனால், எப்படி ஒரு சிலரால் மட்டும் அது சாத்தியமாகிறது. அவர்கள் ஒட்டகத்தை விரும்பினார்கள், ஒட்டகத்தை மட்டுமே தேடினார்கள், திசை மாறினாலும் ஒட்டகத்தின் மீதான கண்ணை விடவில்லை..

கனவுகளை அடைந்த லட்சியர்கள் அனைவரும் கங்காரு தன் குட்டியை பற்றியிருப்பதைப் போல விடாமல் தங்கள் தத்துவத்தை பற்றியே இருப்பார்கள். காலம் கிடந்தாலும், பாதையில் இடறினாலும், வழிகளில் தவறினாலும் அவர்கள் பற்றியிருப்பதை விடுவதே இல்லை. ஏனெனில், அவர்கள் நம்பும் தத்துவத்தை எப்படி அவர்கள் பற்றியிருக்கிறார்களோ, அதே போலவே, அந்த தத்துவமும் அவர்களை பற்றியிருக்கிறது.

முகேஷ் சுப்ரமணியம்


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


டிஜிட்டல் திண்ணை: ராஜ்ஸ்ரீ - சிதம்பரம்: சிபிஐயின் அடுத்த ஆட்டம்!


பாமக வாக்காளர் மாநாடு: அன்புமணி முப்படையின் அடுத்த திட்டம்!


அடுத்தது விஜய்தான்: சீமான் பேட்டி!


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


சனி, 31 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon