மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 ஜன 2021

உயரப் போகும் டீ விலை!

உயரப் போகும் டீ விலை!வெற்றிநடை போடும் தமிழகம்

கடந்த 19.08.2019முதல் ஆவின் பாலிற்கான கொள்முதல் மற்றும் விற்பனை விலையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு அதனை உடனடியாக அமுல்படுத்திய நிலையில் தற்போது இந்த 2019ம் ஆண்டில் 3வது முறையாக தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியிருக்கின்றன. இதையடுத்து டீக்கடைகளில் டீ விலையும் உயர இருக்கிறது.

ஆகஸ்டு 19 ஆம் தேதி தமிழக அரசு ஆவின் பால் விலையை கடுமையாக உயர்த்தியது. அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தனியார் பால் நிறுவனங்களும் தங்கள் விலையை உயர்த்தியிருப்பதாகவும் அவற்றை வரைமுறை செய்ய வேண்டும் என்றும் பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தமிழக அரசை வற்புறுத்தியிருக்கிறது.

இன்று (ஆகஸ்டு 31) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இச்சங்கத்தின் நிறுவனர் சு.ஆ. பொன்னுசாமி,

“ஏற்கனவே கடந்த பிப்ரவரி மற்றும் ஜூன் மாதங்களில் பால் கொள்முதல் விலையை காரணம் காட்டி அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் லிட்டருக்கு 2 ரூபாய் விற்பனை விலையை உயர்த்திய நிலையில் தற்போது அண்டை மாநிலமான ஆந்திராவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி தனியார் பால் நிறுவனங்களான டோட்லா, ஹெரிடேஜ், ஜெர்சி, சங்கம், திருமலா மற்றும் சீனிவாசா, ஜேப்பியார், கோவர்த்தனா உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் தங்களின் பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரையிலும் உயர்த்துவதாக அறிவித்துள்ளன.

இதில் முன்னணி தனியார் பால் நிறுவனங்களான டோட்லா (24.08.2019), கோவர்த்தனா (26.08.2019), சங்கம் (27.08), ஹெரிடேஜ் (28.08.2019), ஜெர்சி (29.08.2019) உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை உயர்த்தி விட்ட நிலையில் நாளை (01.09.2019) முதல் திருமலா, ஜேப்பியார் ஆகிய முன்னணி தனியார் பால் நிறுவனங்களும், 02.09.2019 முதல் சீனிவாசா பால் நிறுவனமும் தங்களின் பாலிற்கான விற்பனை விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரையிலும், தயிருக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 6 ரூபாய் வரையிலும் உயர்த்துவதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளன.

அத்துடன் மேற்கண்ட தனியார் பால் நிறுவனங்களைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள இதர அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் தங்களின் பாலுக்கான விற்பனை விலையை வரும் வாரத்தில் உயர்த்திட முடிவு செய்துள்ளன.

இந்த 2019ம் ஆண்டில் மட்டும் தற்போது 3வது முறையாக தனியார் பால் நிறுவனங்கள் தன்னிச்சையாக மீண்டும் பால் விற்பனை விலையை உயர்த்துவதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, தன்னிச்சையான பால் விற்பனை விலை உயர்வை தனியார் பால் நிறுவனங்கள் உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

அதுமட்டுமின்றி தமிழகத்தில் தேனீர் கடைகள், உணவகங்கள் என வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கு பெரும்பாலும் தனியார் பால் நிறுவனங்களின் பாலினையே வணிகர்கள் நம்பி இருப்பதால் தற்போதைய பால் விற்பனை விலை உயர்வினால் பால் சார்ந்த உணவுப் பொருட்களான தேனீர் உள்ளிட்டவற்றின் விலை கடுமையாக உயரும் சூழல் உருவாகியுள்ளது” என்று எச்சரித்திருக்கிறார் பொன்னுசாமி.

மேலும், “அண்டை மாநிலமான ஆந்திராவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மேற்கண்ட தனியார் பால் நிறுவனங்கள் அவர்களுடைய மாநிலத்தில் பால் விற்பனை விலையை உயர்த்தாத சூழ்நிலையில் தமிழகத்தில் மட்டும் பால் விற்பனை விலையை உயர்த்துவதையும், ஒவ்வொரு முறை விற்பனை விலையை உயர்த்தும் போதெல்லாம் கொள்முதல் விலை உயர்வு என்கிற போலியான காரணத்தை காட்டுவதை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் தற்போது தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தை விட குறைந்த விலை கொடுத்தே தனியார் பால் நிறுவனங்கள் பாலினை கொள்முதல் செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே தனியார் பால் நிறுவனங்களின் தன்னிச்சையான இந்த விற்பனை விலை உயர்வு விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தி்டவும், அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் வந்து பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் தனியார் பால் நிறுவனங்களை வரன்முறைபடுத்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறினார் பொன்னுசாமி.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்!


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


“நீங்க ஸ்டேட் ஃபிகராயிட்டீங்க”- தங்கத்தை உருக்கிய ஸ்டாலின்


மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கிறதா பாமக?


சனி, 31 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon