மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

டிஜிட்டல் திண்ணை: ராஜ்ஸ்ரீ - சிதம்பரம்: சிபிஐயின் அடுத்த ஆட்டம்!

டிஜிட்டல் திண்ணை: ராஜ்ஸ்ரீ - சிதம்பரம்: சிபிஐயின் அடுத்த ஆட்டம்!

மின்னம்பலம்

மொபைல் டேட்டாவை ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன்லைனில் இருந்தது. ‘காலை வணக்கம்’ மெசேஜ் ஒரு பூங்கொத்தோடு வந்தது. கூடவே செய்தியும்.

“ஐ.என்.எக்ஸ் விவகாரத்தில் சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை சிதம்பரத்தை விசாரிக்க போட்டி போட்டு வருகின்றன. இரண்டாம் முறையாக சிபிஐ விசாரணைக் காவலில் இருக்கும் ப.சிதம்பரத்தை இன்று (ஆகஸ்ட் 30) மீண்டும் ரோஸ் அவென்யூ சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

இதற்கிடையே அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரத்தை தன் கஸ்டடியில் எடுக்கப் போராடி வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வரை ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் சிதம்பரத்தைக் கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இந்த நிலையில் இன்று ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் சிதம்பரத்துக்கு, மீண்டும் சிபிஐ காவல் நீட்டிக்கப்படாதபட்சத்தில், ஜாமீனும் மறுக்கப்படும்பட்சத்தில் நீதிமன்றக் காவலுக்காக திகார் சிறைக்குக் கொண்டு செல்லப்படுவார்.

இதற்கிடையில் சிதம்பரத்தைத் தொடர்ந்து சிறையிலேயே வைப்பதற்கு என்னவெல்லாம் முடியுமோ அத்தனையையும் சிபிஐ மூலம் மத்திய அரசு செய்து வருவதாகச் சொல்கிறார்கள் டெல்லி வட்டாரத்தினர்.

அதிலும் குறிப்பாக சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த காலத்தில் மேலும் யார் யாருக்குச் சலுகை காட்டினார் என்பது பற்றிய விவரங்களை அன்றைய நிதியமைச்சக அதிகாரிகள் சிலரின் துணையோடு சேகரித்திருக்கிறது சிபிஐ. ஏற்கனவே இந்திராணி முகர்ஜி என்ற பெண்ணின் வாக்குமூலம் தொடர்பாக சிக்கலில் இருக்கும் சிதம்பரத்தை, மேலும் இதேபோன்ற சிக்கல்களில் மாட்டிவிட சிபிஐ தீவிரமாகிவிட்டது. அந்த வகையில்தான் ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் நிறுவனம் பற்றிய விவரங்கள் சிபிஐ கையில் இப்போது இருக்கின்றன.

ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் மில் உட்பட ராஜ்ஸ்ரீ குழும நிறுவனங்களின் அதிபர் ராஜ்ஸ்ரீ பதி கோவையைச் சேர்ந்தவர். அவர் தந்தை ஜி.வரதராஜ் தொழிலதிபர். அவர் மறைவுக்குப் பின்னர் 1990களில்தான் ராஜ்ஸ்ரீ நிர்வாகத்தைக் கையிலெடுத்தார். ராஜ்ஸ்ரீ சுகர் மில்லுக்கு சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது சுமார் 700 கோடி ரூபாய் அளவுக்குக் கடன் கொடுக்கப்பட்டதாக சில விவரங்களை சேகரித்த சிபிஐ, அந்த கடன் மறுபடி செலுத்தப்படவில்லை என்று அறிந்தது.

சிதம்பரத்திடம் கஸ்டடி விசாரணையின்போது திடீரென ராஜ்ஸ்ரீயை உங்களுக்கு தெரியுமா என்று கேட்டிருக்கிறார்கள் சிபிஐ அதிகாரிகள். புருவத்தை உயர்த்தியிருக்கிறார் சிதம்பரம். ’நீங்க சொல்லிதான் அவங்க நிறுவனத்துக்கு 700 கோடி ரூபாய் வரை வங்கிக் கடன் வழங்கப்பட்டிருக்கிறது’ என்று சிபிஐ அதிகாரிகள் சொல்ல, ‘அதெல்லாம் எனக்கு ஞாபகமில்லை’ என்று பதில் சொல்லியிருக்கிறார் சிதம்பரம். அந்த வங்கிக் கடன் வழங்கப்பட்டபோது இருந்த வங்கி அதிகாரிகளிடமிருந்து சிதம்பரம் சொல்லித்தான் கடன் கொடுத்தோம் என்று ஸ்டேட்மெண்ட் வாங்கி வைத்திருந்த சிபிஐ, அதை சிதம்பரத்திடம் காட்டி, ‘ராஜ்ஸ்ரீக்கு எந்த அடிப்படையில் கடன் கொடுத்தீர்கள்? அந்தப் பணம் திரும்பச் செலுத்தப்படலைன்னு உங்களுக்குத் தெரியுமா?’ என்றெல்லாம் சரமாரியாக கேள்விகளைத் தொடுத்திருக்கிறார்கள். ராஜ்ஸ்ரீயும் சிதம்பரமும் டெல்லியில் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் சிலவற்றை நினைவுபடுத்திய சிபிஐ அதிகாரிகள் அது தொடர்பான மேலும் சில விவரங்களைக் கேட்டிருக்கிறார்கள்.

இதேபோல, இப்போதைய மத்தியப்பிரதேச முதலமைச்சர் கமல்நாத்தின் அக்கா மகன் சோலார் பவர் பிளான்ட் அமைப்பதற்காக ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த காலத்தில்தான் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. ‘உனக்குத் தொழில் தொடங்க கடன் தருகிறேன். என் தொகுதியான சிவகங்கையிலும் அந்த பிளான்ட்டை நடத்த வேண்டும்’ என்று சிதம்பரம் சார்பில் நிபந்தனை வைக்கப்பட்டு கடன் வழங்கப்பட்டிருக்கிறது. அதை ஏற்றுக்கொண்ட கமல்நாத்தின் அக்கா மகன் கொஞ்ச நாட்களிலேயே சிவகங்கையில் அந்த பிளான்ட்டை கைவிட்டுவிட்டார். இப்படி சிதம்பரம் காலத்தில் கடன் வழங்கப்பட்ட நிறுவனங்கள், அதற்கான காரணங்கள், அவை அந்தக் கடனை திரும்ப செலுத்தியதா என்ற வகையிலும் சிபிஐயின் தொடர் கேள்விகள் கஸ்டடி விசாரணையில் கேட்கப்பட்டிருக்கின்றன.

இதன் பின்னால் இருக்கும் சங்கதி என்னவென்றால் ஒருவேளை ஐ.என்.எக்ஸ் வழக்கில் சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்துவிட்டாலும் அவரை தொடர்ந்து சிறையில் வைப்பதற்கு வேறு சில வழக்குகள் வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகள்தாம் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில். ஏற்கெனவே சிதம்பரத்தைக் குறிவைத்து ட்விட்டரில் தகவல்கள் வெளியிட்டுவரும் கௌரவ் பிரதான் என்பவர் ராஜ்ஸ்ரீயையும் சிதம்பரத்தையும் தொடர்புபடுத்தி ஆகஸ்ட் 23ஆம் தேதி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். இந்த பிரதான் ட்விட்டரில் மோடியால் ஃபாலோ செய்யப்படுவர் என்பது மீண்டும் மீண்டும் குறிப்பிடத்தக்க ஒன்று” என்ற தகவலுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைனுக்குப் போனது வாட்ஸ் அப்.


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


டிஜிட்டல் திண்ணை: ராஜ்ஸ்ரீ - சிதம்பரம்: சிபிஐயின் அடுத்த ஆட்டம்!


பாமக வாக்காளர் மாநாடு: அன்புமணி முப்படையின் அடுத்த திட்டம்!


அடுத்தது விஜய்தான்: சீமான் பேட்டி!


நான் சொல்வது நடப்பதே இல்லை: தமிழக ஆளுநர் வருத்தம்!


வெள்ளி, 30 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon