மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 28 மே 2020

சிறப்புக் கட்டுரை: நெருப்புக்குப் பின்னால் புகையும் அரசியல்!

சிறப்புக் கட்டுரை: நெருப்புக்குப் பின்னால் புகையும் அரசியல்!

சு.முரளி

உலக அழிவானது அறிவியலாலோ, அணுகுண்டுகளாலோ நிகழப் போவதில்லை. உலகம் அரசியலால் அழியப் போகிறது. அதற்கான அனைத்து முன்னோட்டங்களையும் நாம் வெளிப்படையாகவே பார்த்து வருகிறோம். பிரேசிலில் மிகப்பெரிய பேரழிவு நிகழ்ந்துகொண்டிருக்கையில், அதைத் தடுக்க உதவ வரும் நாட்டிடம், “என்னைப் பற்றி அவதூறாகப் பேசிய வார்த்தைகளைத் திரும்பப் பெற்றால்தான் உதவிகளை ஏற்பேன்” என்று பிரேசிலின் அதிபர் கூறுகிறார். இங்கே பேரழிவு குறித்த எந்த பதற்றமும் இல்லை. பொல்சனரூ என்ற ஒற்றை மனிதரின் அரசியல் வெறுப்புணர்வு, ஒட்டுமொத்த உலக அழிவுக்கும் விதையாக விதைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் நவீன அரசியல் சித்தாந்தத்தின் சிக்கல். அதிகாரம் என்ற கருதுகோல், இங்கே அரசியலால் சீரழிக்கப்படுகிறது. இதை நம்பியிருக்கும் பொது சமூகம், இவ்வரசியல் ஆட்டங்களின் விளைவுகளுக்கு விலை கொடுக்கிறது.

நாம் அமேசான் காடு பற்றி கதறிக்கொண்டிருந்த அதே நேரத்தில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) அமேசான் காட்டுத்தீயை அணைக்க 20 மில்லியன் டாலர்கள் தந்து உதவுவதாகத் தெரிவிக்கிறார். அதைப் பெருமிதமாக மறுத்ததோடல்லாமல், “இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலக பாரம்பரிய தளமான நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தையே உங்களால் தவிர்க்க முடியவில்லை” என ஏளனம் செய்து அரசியல் வெறுப்பு வசவுகளை வாரி இரைத்தார் பொல்சனரூ. ஒரு தேவாலயத்தில் ஏற்பட்ட தீயும், தற்போது அமேசானில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயும் வெவ்வேறு என்பது பிரேசிலின் அதிபருக்குப் புரியவில்லை. அனைத்துக்கும் மேலாக இந்த உதவியைக் காலனித்துவ மனநிலை (Colonial Mentality) என்றும் குறிப்பிடுகிறார்.

இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கும் பேரழிவு பற்றி என்ன கருத்து பரிமாற்றம் நிகழ்ந்தது?

என்ன வளம் இழக்கும் இத்திருநாடு?

இதை வெறும் காட்டுத்தீயாகக் கடந்து செல்ல முடியாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பூமியில் நான்கில் ஒரு பங்கு உயிரினங்கள் அமேசானில்தான் மறைந்திருக்கிறது. 30,000 வகை செடிகள், 2,500 வகை மீன்கள், 1,500 வகை பறவைகள், 500 வகை பாலூட்டிகள், 550 வகை ஊர்வன, உயிரினங்கள் மற்றும் 2.5 மில்லியன் பூச்சிகள் என இத்தனை உயிரினங்களை தனக்குள் அடக்கிய ஒரு மிகப்பெரிய பல்லுயிர் பெருக்கமாக இருக்கிறது இந்த அமேசான் காடு. அதுமட்டுமல்ல, 420 பழங்குடி இனங்களின் வீடு இந்த அமேசான் காடுதான். இங்கு நாம் மற்றொரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். இந்தக் காட்டின் அழிவு, இந்த உயிர்களுக்கு மட்டும் பாதிப்பல்ல, அழிவுப்பாதையில் நடைபோட்டுக்கொண்டிருக்கும் இந்த உலகை வேகமாக ஓட வைக்கும். ஒருபுறம் வெப்பம். அந்த வெப்பம் அதிகரிக்க முதன்மை காரணமாக இருக்கும் கரியமில வாயு, அதை அதிகபடியாக உற்பத்தி செய்யும் நாம், இந்த வெப்பம், இந்த கரியமில வாயு, இதை குறைக்கும் முயற்சியில் நாம் எப்படியும் களமிறங்கப் போவதில்லை. ஆனால், இந்தக் காடு அப்படியில்ல. எந்த ஒரு சுயநலனுமின்றி அதை குறைக்க பெரும் பங்காற்றிக்கொண்டிருந்தது, பங்காற்றிக்கொண்டிருக்கிறது, உயிர் உள்ள வரை பங்காற்றிக்கொண்டிருக்கும். அப்படியான இந்த காட்டை பாதுகாப்பது எவ்வளவு முக்கியம்?

“இங்குள்ள அனைத்து மரங்கள், செடி கொடிகளுக்கும் உயிர் உள்ளது. அவை அனைத்தும் வாழ வேண்டும். அதுவும் அதன் சொந்த இடத்திலேயே வாழ வேண்டும். எங்களைப் பொறுத்தவரை, இது மிகப்பெரும் அழிவு. எங்களுக்கு எதிராகச் செய்யப்படும் பெரும் கொடுமை. எங்கள் இறுதி துளி ரத்தத்தை கொடுத்தாவது போராடி, இந்தக் காட்டை காப்பாற்றுவோம்” என்கிறார் முரா இனப் பழங்குடிகளின் தலைவர் ரைமுண்டோ முரா.

ஆனால், இந்த அமேசான் காடு பற்றி 60 சதவிகித காட்டை தன் எல்லை கோட்டுக்குள் அடக்கி வைத்திருக்கும் பிரேசில் நாட்டு புதிய அதிபரின் நிலைப்பாடு தலைகீழாகவே இருந்தது. காட்டை அழித்து கார்ப்பரேட் மையமாக்க வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாக இருந்தது. இது அவரின் நிலைப்பாடு மட்டுமல்ல, கார்ப்பரேட் மையம் என்பது உலகின் பல வலதுசாரி தலைவர்களின் நிலைப்பாடாக உள்ளது. இவரும் அந்தப் பட்டியலிலிருந்து விலகவில்லை. அமேசான் காடுகளில் உள்ள வளங்களை முற்றிலுமாக சுரண்டி, சுருக்கமாகச் சொன்னால் அமேசான் காட்டையே ஒரு வணிக நிறுவனமாக மாற்ற வேண்டும் என்பதே பொல்சனரூவின் கொள்கையாக இருக்கிறது. இவரின் நடவடிக்கைகள் அதற்கு சான்றளிக்கிறது.

இந்த வருடத்தில் பிரேசிலில் மட்டும் 74,000 முறை காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகம். இந்த ஆண்டு மட்டும் காடு அழியும் விகிதம் 83 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக பிரேசிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (Brazil's National Institute for Space Research reported) தெரிவித்தது. இதன் விளைவாக இந்த நிறுவனத்தின் தலைவருக்குப் பணி நீக்கம் பரிசளிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் தகவல்படி கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 2,254 சதுர கிலோமீட்டர் காடு அழிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 278 சதவிகிதம் அதிகம்.

அரசியலாகும் வணிகம்

இவை ஒருபுறம் இருக்கட்டும். இந்த காட்டுத்தீ விவகாரம் உலக அரங்கில் எதிரொலித்தபோது, எங்களிடம் போதுமான அளவு ஆட்கள் இல்லை என்று சொற்ப எண்ணிக்கையிலான ஆட்களைக் காட்டுத்தீயை அணைக்க அனுப்பி வைத்தார் பொல்சனரூ. ஆனால், இப்போது சுமார் 43,000த்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களைக் காட்டுத்தீயை அணைக்கும் பணிக்காக முடுக்கிவிட்டதாக அறிக்கை வெளியிட்டார். காட்டுத்தீ அணைக்கப்பட்டதாகப் பாதுகாப்புத் துறை தகவல் வெளியிட்டது. கடந்த ஒரு வாரத்தில் 16 வருடங்கள் இருந்த சராசரி அளவைவிட காட்டுத்தீயின் அளவு குறைந்திருப்பதாக கோப்பர்நிக்கஸ் வளிமண்டல கண்காணிப்பு சேவை (Copernicus Atmosphere Monitoring Service - CAMS) தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வளவு நாட்கள் இல்லாத அக்கறை இப்போது எங்கிருந்து வந்தது?

அதற்குக் காரணமும் வணிகம்தான். இந்த காட்டுத்தீ பிரச்சினையில் பிரேசில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பிரான்ஸ் அரசு பிரேசிலுடனான இறக்குமதிகளுக்குத் தடை விதிக்கப்போவதாக எச்சரித்தது. அயர்லாந்து போன்ற நாடுகள், பிரான்ஸ் நாட்டின் இந்த முடிவுக்குச் செவி சாய்த்தன. இதன் விளைவே பொல்சனரூ அரசு அமேசான் காடுகளின் காட்டுத்தீயை இவ்வளவு விரைவாக அணைக்க காரணம். அணைக்கவில்லையென்றால், தன் கால்நடை ஏற்றுமதியில் பெறும் பங்காற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான ஒப்பந்தம் தகர்ந்துவிடுமே.

1965இல் கொண்டுவரப்பட்ட பிரேசிலின் காடுகள் கொள்கை (Brazil’s Forest Code of 1965) அமேசான் காடுகளை அழித்து அதைச் சொந்த நிலங்களாக மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்திருந்தது. 1988ஆம் ஆண்டில் பிரேசிலின் ராணுவ ஆட்சி அகற்றப்பட்டு, காடுகளின் முழு உரிமையும் அங்குள்ள பழங்குடியினருக்கே திரும்ப வழங்கப்பட்டது. மேலும், காடுகளில் மேற்கொள்ளும் வளர்ச்சித்திட்டங்களில், பழங்குடியினருக்கு விருப்பம் இல்லை என்றால் அந்தத் திட்டத்தை நிராகரித்துவிடலாம் என்ற சிறப்புச் சக்தியும் வழங்கப்பட்டது. ஆனால், இது வெகு நாட்களுக்கு நீடிக்கவில்லை. 2012இல் மீட்டெடுக்கப்படவேண்டிய காடுகளின் அளவைக் குறைத்தும், காடழிப்புக் குற்றங்களுக்குத் தண்டனைகள் குறைக்கப்பட்டும் மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தத்தை 2018ஆம் ஆண்டில் அமல்படுத்தியது பிரேசில் அரசு.

கால்நடைகளால் காலியாகும் காடுகள்

பிரேசிலின் காடுகள் அழிக்கப்படுவதற்கான முக்கியமான காரணமாக இருப்பது கால்நடை வளர்ப்பு. பிரேசில் நாடு கால்நடை ஏற்றுமதியில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது. இது ஹாங்காங், சீனாவில் தொடங்கி அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் வரை கால்நடைகளை அதிகபடியாக ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறது. கால்நடைகளை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றால், கால்நடைகளை வளர்க்க வேண்டும், கால்நடைகளை வளர்க்க வேண்டுமென்றால் அதற்கான தீவனம் வேண்டும், தீவனம் வேண்டுமென்றால் அதை வளர்ப்பதற்கான நிலம் வேண்டும். அதுதான் அமேசான் காடு இருக்கிறதே அழித்து எடுத்துக்கொள்ளுங்கள் என மறைமுகமாகச் சொல்கிறார் பொல்சனரூ.

1.5 பில்லியன் என்ற எண்ணிக்கையுடன், இந்த மனிதர்களுக்கு அடுத்த இடத்தை பிடித்திருப்பது மாடுகள்தாம். இந்த மாடுகளின் இறைச்சி பெருவாரியாக சில குறிப்பிட்ட நாடுகளிலிருந்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அப்படி ஏற்றுமதி செய்யும் நாடுகளில், கடந்த 2018ஆம் ஆண்டில் பிரேசில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது என்கிறது அமெரிக்காவின் வேளாண்மைத் துறை (USDA). அந்த ஆண்டில் மட்டும் பிரேசில் மொத்த மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 20 சதவிகித பங்கை அளித்துள்ளது. 2028ஆம் ஆண்டில் இந்த அளவு 28 சதவிகிதமாக அதிகரிக்கக் கூடும் எனவும் குறிப்பிடுகிறது. 2018ஆம் ஆண்டில் மட்டும் 1.64 மில்லியன் டன் அளவிலான மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்து 6.57 பில்லியன் அமெரிக்க டாலர்களை வருவாயாக ஈட்டியுள்ளது. இந்தத் தகவலை பிரேசிலிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்கள் சங்கமே (Brazilian Beef Exporters Association) தெரிவித்துள்ளது. அமேசானில் பற்ற வைக்கப்படும் நெருப்பில் 80 சதவிகிதம் கால்நடை வளர்ப்புக்காகத்தான் என்கிறது ஓர் அறிக்கை.

இதுமட்டுமல்ல பொல்சனரூ வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் அமேசான் காட்டுக்குள் நீர் மின்நிலையம் அமைப்பது, பாலம் கட்டுவது, தேசிய நெடுஞ்சாலை நீட்டிப்பு போன்ற திட்டங்களை முன்வைத்துள்ளார். ஏழு மில்லியன் ஏக்கர் வனப்பகுதியை ஆக்கிரமித்து எண்ணெய் எடுக்கத் திட்டமிட்டிருந்தது ஒரு நிறுவனம். ஆனாால், நல்ல செய்தியாகக் கடந்த மே மாதம், அந்த நிறுவனத்துக்கு எதிராக வாவோரணி பழங்குடியின மக்கள் போராடித் தங்கள் உரிமைகளை மீட்டெடுத்தனர். காடுகளில் வேட்டையாடுதல் தடை சட்டத்தை நீக்குதல், வேட்டையாடப்பட்ட காட்டு விலங்குகளை விற்பனை செய்தல் என பல திட்டங்களை தன் கைவசம் வைத்திருக்கிறார்.

கொள்கையும் குற்றமும்

காஷ்மீர் விவகாரத்தில், பலமுறை குறுக்கிட்டு மத்தியஸ்தம் செய்ய முன்வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் உலகமே அதிர்ந்த ஒரு பிரச்சினை பற்றி கொஞ்சம்கூட வாய் திறக்கவில்லை. உலகத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருந்த நேரத்தில் 'சிறப்பாகச் செயல்பட்டீர்கள்' என்று பொல்சனரூவிற்கு பாராட்டு தெரிவிக்கிறார்.

பிரேசில் அதிபருடன் நட்பு பாராட்டும் இந்திய பிரதமர் மோடி, இது குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. காரணம் மாட்டிறைச்சி என்பதனாலா என்று அதையும் அரசியலாக்க விரும்பவில்லை.

இந்த மொத்த பிரச்சினைக்கும் முக்கியக் காரணமாக பார்க்கப்படுவது பொல்சனரூ என்னும் ஒரு தனி மனிதனின் அரசியல் அதிகாரமும், வணிக வெறியும்தாம். ஆனால், இங்கு பிரச்சினை தனிமனிதர்கள் அல்லர், அவர்தம் கொள்கைகளே. அவரது இடத்திற்கு இதே போன்ற கொள்கைகளைக் கொண்ட யார் வந்தாலும் அந்தக் காடுகளின் நிலை இதுதான். இங்கு எதிர்க்கப்பட வேண்டியது ஒரு தனிநபரை அல்ல, இயற்கை வளங்களை வணிகமாகப் பார்க்கும் வலதுசாரி கொள்கைகளைத்தான்!

மனிதர்களைக் குற்றம்சாட்டிவிட்டு கொள்கைகளைக் கொண்டாடாதீர்கள்!


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


டிஜிட்டல் திண்ணை: ராஜ்ஸ்ரீ - சிதம்பரம்: சிபிஐயின் அடுத்த ஆட்டம்!


பாமக வாக்காளர் மாநாடு: அன்புமணி முப்படையின் அடுத்த திட்டம்!


அடுத்தது விஜய்தான்: சீமான் பேட்டி!


நான் சொல்வது நடப்பதே இல்லை: தமிழக ஆளுநர் வருத்தம்!


வெள்ளி, 30 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon