மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

பாமக வாக்காளர் மாநாடு: அன்புமணி முப்படையின் அடுத்த திட்டம்!

பாமக வாக்காளர் மாநாடு: அன்புமணி முப்படையின் அடுத்த திட்டம்!

மின்னம்பலம்

பாட்டாளி மக்கள் கட்சி தற்போது அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலை அன்புமணி தலைமையில் எதிர்கொள்ள பல்வேறு செயல்திட்டங்களை வகுத்து வருகிறது.

இந்த அடிப்படையில் அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படை, அன்புமணி மக்கள் படை என முப்படைகளை உருவாக்கி வருகிறது பாமக. இதுபற்றி அன்புமணி முப்படை என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் செய்திகள் வெளியிட்டிருந்தோம்.

முப்படைகளின் அடுத்தகட்டமாக ஒவ்வொரு தொகுதியிலும் பாமக வாக்காளர் மாநாடு என்ற பெயரில் மாநாடுகள் நடத்த ஆயத்தம் ஆகிறது அக்கட்சி.

இதுபற்றி பாமக வட்டாரங்களில் பேசினோம்.

”ஏற்கனவே திட்டமிட்டபடி அன்புமணியின் தம்பிகள் படை, தங்கைகள் படை, இந்தப் படைகள் மூலம் சேர்க்கப்படும் அன்புமணி மக்கள் படை என முப்படை தீவிரமாக உருவாகி வருகிறது. இந்த அன்புமணி மக்கள் படையைத்தான் பாமக வாக்காளர் மாநாடு என்ற பெயரில் நடத்தி உறுதி செய்து கொள்ளும் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.

அன்புமணி தம்பிகள் படையில் உள்ள 2,000 பேரும் தங்கள் ஒவ்வொருவரின் சார்பில் 50 பேர்களை பாமகவின் உறுப்பினராக சேர்த்தால் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு லட்சம் பேர் கொண்ட அன்புமணி மக்கள் படை உருவாகும். இந்த அன்புமணி மக்கள் படையை விரைவில் உருவாக்கி அதன்மூலம் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பாமக வாக்காளர் மாநாடு என்ற பெயரில் மாநாடு ஒன்று நடத்தப்பட வேண்டும்.

அதாவது ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பாமகவுக்கென ஒரு லட்சம் வாக்குகள் உறுதியாக சிந்தாமல் சிதறாமல் இருக்க வேண்டும். எவ்வித அரசியல் சூழ்நிலையிலும் பாமகவை விட்டுவிடாமல் இருக்கும் வாக்குகளாக இந்த ஒரு லட்சம் வாக்குகள் இருக்க வேண்டும். இதுவே டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணியின் திட்டம்.

ஒவ்வொரு ஒவ்வொரு தொகுதியிலும் 1 லட்சம் பாமக வாக்குகள் உறுதி செய்யப்பட்ட பிறகு தேர்தல் பிரச்சாரம், தேர்தல் நேரத்து வேலைகளில் பாமக சேகரிக்க வேண்டிய வாக்குகள் ஒரு லட்சத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்பதுதான் டாக்டரின் உத்தரவு. அதாவது தேர்தல் பணிகள் தொடங்குவதற்கு முன்பே ஒவ்வொரு தொகுதியிலும் பாமகவுக்கென ஒரு லட்சம் வாக்குகள் உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

இந்த அடிப்படையில் தமிழகம் முழுவதும் 100 சட்டமன்றத் தொகுதிகள் முதல்கட்ட பட்டியலில் கொண்டுவரப்பட்டு அதிலிருந்து 85 தொகுதிகளாக வடிகட்டப்பட்டு மீண்டும் அது 50 தொகுதிகளாக இறுதி செய்யப்பட்டு இந்த 50 தொகுதிகளிலும் அன்புமணியின் முப்படை சார்பில் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு லட்சம் வாக்குகளை தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பே உறுதி செய்துவிட வேண்டும். இதற்காகத்தான் பாமக வாக்காளர் மாநாடு நடத்தப்படுகிறது” என்று விளக்கமளித்தார்கள்.

எத்தனையோ கட்சிகள் மாநாடுகள் நடத்துகிறார்கள் அதில் கலந்துகொள்ளும் அத்தனைபேரும் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தானா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால், பாமக நடத்தும் வாக்காளர் மாநாட்டில் கலந்துகொள்பவர்கள் பாமகவுக்கு வாக்களிப்பவர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதே அக்கட்சியின் இப்போதைய வியூகம்.

ஒரு வகையில் மீண்டும் வன்னியர் என்ற வட்டத்துக்குள்ளேயே பாமக திரும்பிச் செல்வதன் இன்னொரு பெயர்தான் இந்த முப்படை, வாக்காளர் மாநாடு என்றும் கட்சியிலேயே சிலர் கூறுகிறார்கள். இது எந்த அளவுக்குப் பலன் கொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


டிஜிட்டல் திண்ணை: ராஜ்ஸ்ரீ - சிதம்பரம்: சிபிஐயின் அடுத்த ஆட்டம்!


பாமக வாக்காளர் மாநாடு: அன்புமணி முப்படையின் அடுத்த திட்டம்!


அடுத்தது விஜய்தான்: சீமான் பேட்டி!


நான் சொல்வது நடப்பதே இல்லை: தமிழக ஆளுநர் வருத்தம்!


வெள்ளி, 30 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon