மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 28 மே 2020

பிக் பாஸ் 3: கூத்து இல்லை; கும்மாளம் மட்டும்!

பிக் பாஸ் 3: கூத்து இல்லை; கும்மாளம் மட்டும்!

- ஸ்பிளாக்கர்

பிக் பாஸ் சீசன் 3 பல புதுமைகளைப் புகுத்தி, இதுவரையிலும் இல்லாத அளவுக்குப் பலவற்றை செய்திருக்கிறது. அவற்றில் ஒன்றாக, தற்போது நடைபெற்றுவரும் கிராமத்து டாஸ்க்கை சொல்லலாம்.

நால்திசைக் காதல், முக்கோணக் காதல், இருதலைக் காதல், ஒருமூக்கு காதல் என பல காதல்களையும், அதையெல்லாம் பின்பற்றி வந்த சர்ச்சைகளையும் சந்தித்த பிக்பாஸ், திடீரென்று இந்த பாரம்பரியத்தின் மீதான காதலை வெளிப்படுத்தி வருகிறது.

தமிழகத்தின் பாரம்பரிய கலைகளில் ஒவ்வொன்றை தினம் கற்றுக்கொண்டு ஹவுஸ்மேட்ஸ் அவற்றை அரங்கேற்றுவதும், அதற்கு பிக் பாஸ் கேக் கொடுத்தனுப்புவதும் எனத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

29ஆம் தேதி (நேற்று) ஒளிபரப்பான நிகழ்ச்சியில், தெருக்கூத்துக் குழுவினரிடமிருந்து கூத்து கற்றுக்கொண்டு அரங்கேற்றியது பிக் பாஸ் டீம். கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் ஒளி பெற்றுவரும் கூத்துக் கலையின் மீது பிக் பாஸ் வீட்டின் ஒளி பட்டால் மேலும் பிரகாசப்படும் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. ஆனால், அங்கு நடைபெற்றது வேறு.

தெருக்கூத்தின் வளர்ச்சியாகவே மேடை நாடகங்களும், அதன்பின் சினிமாவும் உருவானது. ஆனால், தெருக்கூத்தின் அற்புதமான தன்மைகளை ஒவ்வொரு பரிணாமத்துக்குக் கடத்தியபோதும், அவற்றில் பலவற்றை கைவிட்டுச் சென்றனர். இன்றைய சினிமாவில், தெருக்கூத்தில் காணப்படும் சிறப்பம்சங்கள் 10 சதவிகிதம்கூட இல்லை. அதைப் பிரதிபலிப்பது போலவே, பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற கூத்தும் இருந்தது.

பெண் வேடமிட்ட சாண்டி, பயிற்சியின்போது சரியாக செய்தாலும் நடித்துக்காட்டியபோது, பெண் குரலில் பேசுவதுபோல பரிகாசம் செய்து சொதப்பினார்.

கோமாளி கேரக்டரில் இருக்கவேண்டிய சேரன், எப்போதும் கனத்த முகத்துடனும், சீரியஸான வசனங்களையுமே பேசி போரடித்தார்.

ராஜா என்றதும் ‘லகலகலக’ வசனம் பேசிய வனிதாவும், மந்திரி கேரக்டருக்கு முத்து படத்தில் தீபாவளி பரிசு பெறப்போகும் ரஜினியின் மேனரிசத்தைப் பயன்படுத்திய கவினும் இன்றைய சினிமா நமக்குக் கற்றுக்கொடுத்தது என்னவென்பதையே காட்டியிருக்கிறார்கள்.

ஹவுஸ்மேட்ஸில் யார் வேலை செய்தாலும், ஓரமாக நின்றுகொள்ளும் லாஸ்லியா அதே வேலையையும், ராணி என்றதும் கண்களைச் சிமிட்டி, வளையல்களைத் தட்டிய ஷெரினும் அங்கு கூத்துக் கலைஞர்கள் என்ன கூறினார்கள் என்பதைக்கூட புரிந்துகொள்ளமுடியாத நிலையில் இருப்பவர்கள் என்பதை உணர்த்தினார்கள்.

பயிற்சியின்போதே பாராட்டுகளைப் பெற்ற தர்ஷனாவது உருப்படியாக ஏதாவது செய்வார் என்று பார்த்தால், ராஜா வேடம் என்று சொன்னதால் புலிகேசியாக மாறிவிட்டார்.

தெருக்கூத்தின் சிறப்பம்சமே, இரண்டு மணிநேரத்தில் பயிற்சி எடுத்ததும் இவர்களால் அதைத் திறம்பட செய்துகாட்ட முடியாதது தான்.

ஒவ்வோர் அசைவையும், ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பல நூறு மணி நேரங்களுக்குப் பயிற்சி எடுத்து, நிகழ்த்திக்காட்டி மக்களின் பாராட்டைப் பெறும் கூத்துக் கலைஞர்களின் உழைப்பை இரண்டு மணி நேரத்தில் இவர்களால் ஈடுகட்ட முடிந்திருந்தால் அது, தமிழ் மரபையும், தமிழ்நாட்டின் பெருமைகளையும் தாங்கி நிற்கும் கூத்துக் கலைக்கும், கூத்துக் கலைஞர்களுக்கும் இழுக்கு.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: “என் உடலையும் தந்தேன் பணமும் தந்தேன்”- ப.சிதம்பரத்துக்கு எதிராக இந்திராணி வாக்குமூலம்


லண்டனில் திருமாவளவனுக்கு நடந்தது என்ன?


கேர்டேக்கர்: துரைமுருகன் கிண்டல்!


வெளிநாடு புறப்படுகிறார் எடப்பாடி: இரு வார அரசியலில் என்ன நடக்கும்?


எடப்பாடி பயண மர்மத்தை உடைக்கும் ஸ்டாலின்


வியாழன், 29 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon